Published : 31 Aug 2020 06:24 PM
Last Updated : 31 Aug 2020 06:24 PM

அப்பாவின் நுரையீரலில் முன்னேற்றம்; சுவாசமும் சற்று சீராகியுள்ளது: எஸ்பிபி சரண்

சென்னை

அப்பாவின் நுரையீரலில் முன்னேற்றம் இருப்பதாகவும், சுவாசமும் சற்று சீராகியுள்ளது என்றும் எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான் பதிவு பகிரவில்லை. உங்களிடம் சொல்வதற்குக் கணிசமான தகவல்கள் இருக்க வேண்டும் என்பதால் ஒரு நாள் காத்திருந்து இன்று பதிவிடுகிறேன்.

முதலில், என் அம்மா நலமாக இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். பலர் என் அம்மாவைப் பற்றி விசாரித்ததால் இதைச் சொல்கிறேன். வீட்டுக்குத் திரும்பிவிட்டார். மருந்துகள் சாப்பிட்டு வருகிறார்.

நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அப்பா ஃபிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்"

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

கடைசியில், நாளை முதல் இருக்கும் ஊரடங்கு தளர்வுகள் பற்றிக் குறிப்பிட்டுப் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கோவிட் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து குடும்பங்களுக்காகவும் தான் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x