Published : 31 Aug 2020 03:11 PM
Last Updated : 31 Aug 2020 03:11 PM

கல்வி ஊக்கத் தொகையாக ரூ 2.5 கோடி: சூர்யா அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை

'சூரரைப் போற்று' வெளியீட்டுத் தொகையிலிருந்து 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளார் சூர்யா.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 31) நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் கூட திரையரங்குகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்புமே வெளியிடப்படவில்லை.

இதனிடையே, 'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதைச் செயல்படுத்தவும் தொடங்கி முதல் கட்டமாக 1.5 கோடி ரூபாய் திரையுலகினருக்கு வழங்கியுள்ளார். இதர தொகை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார் சூர்யா.

அதன்படி, இன்று (ஆகஸ்ட் 31) ஓணம் பண்டிகையை முன்னிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'ஈதல் இசைபட வாழ்தல்' என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு 'கைப்பிடி' அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள் கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

பொதுமக்கள், திரைத்துறையினர், கரோனா தொற்றிலிருந்து' மக்களைப் பாதுகாக்கச் செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் விற்பனைத் தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம். அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி 'கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு' பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறு பங்களிப்பாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

'கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்' என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

— Suriya Sivakumar (@Suriya_offl) August 31, 2020

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x