Published : 31 Aug 2020 16:13 pm

Updated : 31 Aug 2020 16:14 pm

 

Published : 31 Aug 2020 04:13 PM
Last Updated : 31 Aug 2020 04:14 PM

யுவன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நேற்று இல்லே நாளையில்லே, எப்பவும் நான் ராஜா!

yuvan-birthday
படம்: பு.க.ப்ரவீன்

சென்னை

1996-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமா ரசிகர்களை தன் இசையின் மூலம் தாக்குவதும் அவர்களை மீண்டும் தன் இசை மூலமாகவே மீட்டெடுக்கவும் ஒருவரால் முடிகின்றது என்றால் அவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. மண்வாசம் கசந்தாலும் கலங்காது யுவனின் இசைவாசம்

தமிழிசை திரையுலகத்தில் எம்.எஸ்.வி இளையராஜாவுக்கு நிர்ணயித்த தூரத்தை விட, இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிர்ணயித்த தூரத்தை விட, ரஹ்மான் இளையராஜாவின் 16 வயதான 'இளைய ராஜா'வுக்கு (யுவன்) நிர்ணயித்த தூரம் மிக அதிகம். அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு வயலின் இழைகளில் இழைந்தோடும் Bow கருவியென மேலும் கீழும் கீழும் மேலுமான அசைத்து அவரின் 24 வருட இசைப் பயணத்தில் நம் சோகம், துக்கம், காதல், காமம், நட்பு என எல்லாவற்றிலும் நம் ஆன்மாவைத் தொடும் தன் இசையின் மூலம் நம்முடன் வரும் இசையின் ரிஷியான யுவனுக்கு இன்று பிறந்த நாள்.

'அன்னக்கிளி'க்கு கிடைத்த வரவேற்பைப் போல 'ரோஜா' படம் ஏற்படுத்திய மாற்றைத்தைப் போல 'மின்னலே' ஏற்படுத்திய தாக்கத்தைப் போல யுவனின் முதல் படமான 'அரவிந்தன்' எந்த விதமான தாக்கத்தையும் அப்போது ஏற்படுத்தவில்லை. ஆனால், இன்று தியேட்டர்களில் ஒரு ஹீரோவின் பெயர் போடும்போது ஒரு ஆரவாரம் தொடக்கி அடங்கி சற்று நேரத்தில் ஒரு இசையமைப்பாளரின் பெயர் வரும் போது மீண்டும் ஆரவாரம் தொடங்குகின்றது என்றால் அதுதான் யுவன். அதுதான் யுவனிஸம்.

யுவனின் இசையினால் பைத்தியமானவர்கள் எத்தனையோ பேர்களில் என் நண்பனும் ஒருவன். அவனுக்கு எல்லாமே யுவன்தான். உதாரணத்திற்கு நாங்கள் இன்ஜினீயரிங்கில் இரண்டாம் செமஸ்டர் படித்துக் கொண்டிருந்தபோது யதேச்சையாக ஆசிரியர் ஒருவர் உங்கள் எல்லோரின் கனவு என்ன என்று கேட்டார். எல்லோரும் படிப்பு சம்பந்தமாக இந்த வேலைக்குப் போகணும், அந்த வேலைக்குப் போகணும்னு ஏதேதோ கூறினர். நண்பன் ஒருவன் மட்டும் நான் யுவன் மாதிரி பெரிய மியூசிக் டைரக்டரா ஆகணும் என்று சொல்ல, ஆசிரியர் உட்பட எல்லோரும் அவனைக் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள்.

ஆனாலும் அவன் விடாமல் ஏன் எல்லாம் சிரிக்குறீங்க கண்டிப்பாக நான் யுவன் மாதிரி ஆவேன் என்று சொல்ல அதற்குள் இடைமறித்த அந்த ஆசிரியர் அதுக்கு மொதல்ல பாட்டு போடணும் வாசிக்கணும். நிறைய கத்துக்கணும்னு சொல்ல, அதற்கு அவனோ நான் கூட 5 யுவன் பாட்டு டெஸ்க் வச்சி இப்பவே வாசிப்பேன்னு சொல்லி 'யாரடி நீ மோகினி' படத்துல வர வெண்மேகம் பாட்ட மெதுவா வாசிச்சான். செம அப்ளாஸ். அதுக்கு அப்புறம் காலேஜ் ஒட கடைசி நாள் அன்னைக்கு அவன் டைரில நிறைய பேரு "focus on your yuvan dream" எழுதி கொடுத்திருந்ததைப் பாக்க முடிஞ்சிது. இப்ப அவன் என்ன பண்றான் எனத் தெரியாது. ஆனா, யுவனின் இசை அவனை என்னமோ பண்ணியியிருக்குனு மட்டும் புரிஞ்சிது. இன்னைக்கு வரைக்கும் வெண்மேகம் பாட்ட கேட்கின்ற போதேல்லாம் அவனோட முகமும் அந்த டெஸ்க் இசையும் ஞாபகம் வராம போனதேயில்லை

செல்வராகவன் படத்திற்கு ஒரு பாணி, ராம் படத்திற்கு ஒரு பாணி, அமீர் என்றால் ஒரு பாணி, தியாகராஜன் குமாரராஜாவுக்கு ஒரு பாணி, லிங்குசாமிக்கு ஒண்ணு, ஹரிக்கு ஒண்ணு, சுசீந்திரனுக்கு, வெங்கட் பிரபுவுக்கு, விஷ்ணுவர்தனுக்கு என ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி இலக்கணம் வகுத்துக் கொண்ட யுவன் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் போதே சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இசையமைக்கும் புதிய பாணியையும் வகுத்துக் கொண்டார். எனக்குத் தெரிந்து நிறைய இயக்குநர்களுடன் கூட்டணி வைத்தவர் யுவன்தான்.

புது நடிகர், புது இயக்குநர் என முகவரியே இல்லாமல் வரும் பல படங்களுக்கு தன் இசையையே முகவரியாகக் கொடுப்பது எல்லாம் யுவனால் மட்டுமே முடியும். இதற்கு உதாரணமாகச் சொன்னால் 'காதல் சொல்ல வந்தேன்', 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'ஆதலால் காதல் செய்வீர்' போன்ற படங்களைச் சொல்லலாம். இயக்குநர்களுக்காக இசையைப் புனரமைக்க முயலும்போது இசையமைப்பாளர்களின் தனித் தன்மை சிதைவுற வாய்ப்புகள் உண்டு. அதில் பலியாகாமல் தப்பிப் பிழைப்பதே யுவனின் தனித்தன்மை. தன்னை மிகப்பெரிய இசையமைப்பாளரின் மகன் என்று அறிமுகம் செய்துகொள்ள அவர் விரும்பியதில்லை. இளையராஜாவும் அதை விரும்பவும் இல்லை

"உன்னைப் பற்றி நான் புகழ்ந்து பேசமாட்டேன், உன் இசை உன்னைப் பேச வைக்க வேண்டும். இசை ஒரு கடல் நீதான் நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். திறமை இருந்தால் முன்னுக்கு வா" என்று சொன்ன இளையராஜாவை இன்று பெருமைப்பட வைத்திருக்கிறார் யுவன்.

பருத்திவீரன் - முத்தழகு போன்ற கிராமிய காதலுக்கும் இசையுண்டு திவ்யா- வினோத்தின் சைக்கோயிசமான காதலுக்கும் இசையுண்டு

கதிர் -அனிதா நடுத்தரக் குடும்பக் காதலானாலும் சரி ஸ்ரீ-சிந்துஜாவின் நவீன காதலானாலும் சரி யுவனின் தொட்டால் கீபோர்டு டியூனாகக் கொட்டும்

தனுஷ் , சிம்பு விஷால் போன்ற ஹீரோக்களின் இமேஜை உயர்த்திப் பிடித்தத்தில் யுவனுக்குப் பெரும் பங்கு உண்டு உள்ளூர் தாதாவான கொக்கி குமாரானாலும் சரி, மலேசியா சிங்கப்பூரை கலக்கிய பில்லாவானாலும் சரி. யுவன் பட்டறையில் பட்டை தீட்ட பட்ட எல்லா இசைகளும் கச்சிதம்

ஆனால், இவை அனைத்தையும் தாண்டி அது யுவன் இசை என கேட்டவுடன் கணிக்கக் கூடிய டச் அவரது இசையில் இருக்கிறது. இது எல்லோராலும் முடியாத காரியம். யுவனின் பாடல்களில் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்துவார். அதற்கு அவர் கூறும் காரணம் ஒரு கருவியை இசைத்து அதில் பெறப்படும் இசையில் இருக்கும் உணர்வு டிஜிட்டல் கருவிகளில் கிடைப்பதில்லை என்று கூறுவார். அதை இன்று வரை கடைப்பிடித்தும் வருகின்றார்

பின்னணி இசையில் இளையராஜா சிங்கம் என்றால் யுவன் சிங்கக்குட்டி என்று அனைவரும் அறிந்ததே. யுவனின் பின்னணி இசையில் எனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றால் '7G ரெயின்போ காலனி' படத்தைச் சொல்வேன். அதில் வேலை கிடைத்து விட்டதாக கதிர் தன் அப்பாவிடம் சொல்லும் காட்சியானாலும் சரி, இரவு தன் மகன் திறமையை நினைத்து கண்ணீர் விடும் ஒரு நடுத்தர அப்பாவின் உணர்வுகளை உயர்த்திப் பிடித்ததில் யுவனின் பியானோவுக்கும் புல்லாங்குழலுக்கும் இரண்டு முத்தங்கள் தரலாம்.

'மங்காத்தா'வின் தீம் இன்றும் 'தல' ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', '7ஜி ரெயின்போ காலணி', 'காதல் கொண்டேன்', 'பருத்தி வீரன்' போன்ற படங்கள் யுவனின் சிறந்த பின்னணி இசைக்காக கொண்டாடப்பட்டவை

யுவனைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்

நா.முத்துக்குமாரைப் பற்றிப் பேச வேண்டும்.

நா.முத்துக்குமாரைப் பற்றிப் பேச வேண்டும்

என்றால் யுவனைப் பற்றிப் பேச வேண்டும்.

அவர்கள் இருவரும் காலத்தினால் அழிக்க முடியாத பல ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்தார்கள். நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒரு ஆழம் இருக்கிறது என்றால், யுவனின் இசையில் ஒரு ஆன்மா இருக்கிறது. அவரின் குரலில் ஒரு ஈரமிருக்கிறது. முதலில் ஒரு பாடல், இரு பாடல், மூன்று பாடல் என்று மாறிய கூட்டணி கடைசியில் ஒரு படத்தின் முழு பாடல்களும் என்ற அளவுக்கு அவர்களின் கூட்டணி முன்னேற்றம் கண்டது. மழை கூட நம்மை ஏமாற்றலாம் ஆனால், நா.முத்துக்குமார் - யுவன் கூட்டணி ஏமாற்றாது என்ற அளவுக்கு கொடி கட்டிக் பறக்கத் தொடங்கியது இவர்களின் கூட்டணி.

இந்த யுவனின் பிறந்த நாளை கவிஞர் நா.முத்துக்குமார், யுவனுக்காக எழுதிய கவிதையோடு சேர்ந்து நாமும் யுவனை வாழ்த்துவோமே!

"இசைஞானி இளையராஜாவின்
இளைய ராஜாவே
உன் இசை கேட்டால்
காற்றுக்கும் காது முளைக்கும்!

நீ தொட்டால் புல் கூட
புல்லாங்குழலாகும்
அதெப்படி ஆனந்த யாழை மீட்டுகிறேன்
என்று சொல்லி
மெல்லிசையாய் மனதைவருடிவிட்டு

அட டா மழைடா அட மழைடா
என்று இதயத்தைத் தொடுகிறாய்!
நண்பா! உன் உடம்பில் ஓடுவது
இசையின் ரத்தம் இசைஞானியின் ரத்தம்

அதனால் தான் உன் ஆர்மோன்கள்
எல்லாம் ஆர்மோனியங்கள்
உன் கை விரல்கள் எல்லாம்
கீ போர்டுகள்
ஒரு பூ தனக்குள் கடவுளின்
வாசத்தை உணருகின்ற போது

ஒரு நதி தன் மேல் விழுகின்ற
நிலவின் பிம்பத்தை உணர்ந்து
தொடுகிற போது
ஒரு மலை மீண்டும் தன்
ஆதி பெரும் மெளனத்திற்கு
திரும்புகிற போது ஒரு நல்ல இசை பிறக்கிறது!

வாடாத பூவாய்
வற்றாத நதியாய்
உன் இசை தொடரட்டும்!
குழந்தைகளும் கலைஞர்களும்
நேரடியாக கடவுளேடு உரையாடுவார் என்பார்கள்!

உன் இசை கடவுளுடன் உரையாடட்டும்!
எங்கள் சந்தோஷத்திலும்
எங்கள் சோகத்திலும்
எங்கள் தனிமையிலும்
எங்கள் தன்னம்பிக்கையிலும்
இளையராஜாவின் இளைய ராஜாவே
உன் பயணமும் அவ்வழி தொடரட்டும்!


தவறவிடாதீர்!

யுவன்யுவன் பிறந்த நாள்யுவன் ஷங்கர் ராஜாயுவன் பிறந்த நாள் ஸ்பெஷல்இளையராஜா மகன்யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணிஇயக்குநர் செல்வராகவன்இயக்குநர் ராம்இயக்குநர் அமீர்யுவன் சிறப்பு கட்டுரைOne minute newsYuvanYuvan shankar rajaYuvan birthdayYuvan special articleYuvan birthday special

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author