Published : 28 Aug 2020 03:19 PM
Last Updated : 28 Aug 2020 03:19 PM

'சூரரைப் போற்று' வெளியீட்டு நிதி: திரைத்துறையினருக்கு ரூ.1.5 கோடி சூர்யா உதவி

சென்னை

தமிழ்த் திரையுலகினருக்கு 1.5 கோடி ரூபாய் சூர்யா நிதியுதவி அளித்துள்ளார். 'சூரரைப் போற்று' வெளியீட்டு நிதியிலிருந்து பகிர்ந்தளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படுவது இன்னும் முடிவாகவில்லை என்பதால் தயாரிப்பாளர் சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளார்.

'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதைச் செயல்படுத்தவும் தொடங்கியுள்ளார்.

முதல் கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று (ஆகஸ்ட் 28) வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்ஸி' க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை பெப்ஸி தலைவர் ஆர். கே. செல்வமணியிடம் 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டார். அவர் அதைத் தயாரிப்பாளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக்கொண்டார். அதை அவர் நடிகர் சங்கத் தனி அலுவலரிடம் வழங்குவார். இதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார். 2டி நிறுவனத்தில் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சுரேஷ் காமாட்சி மற்றும் லலித்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள்.

மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x