Published : 27 Aug 2020 10:23 PM
Last Updated : 27 Aug 2020 10:23 PM

'ஆச்சார்யா' கதை சர்ச்சை: பொய் சொல்லும் ராஜேஷ் மீது நடவடிக்கை - மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டம்

ஹைதராபாத்

'ஆச்சார்யா' கதை சர்ச்சை தொடர்பாக, பொய் சொல்லும் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆச்சார்யா'. இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று 'ஆச்சார்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து ராஜேஷ் என்பவர் இது என்னுடைய கதை என்று உரிமை கோரி வருகிறார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்காகக் கதையொன்றைக் கூறியதாகவும், அதை வைத்துத் தான் 'ஆச்சார்யா' உருவாகியுள்ளதாக தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ராஜேஷ் மண்டூரி என்பவரது கதையை (அண்ணய்யா என்று தலைப்பு வைக்கவிருந்த கதை) இயக்குநர் கொரட்டாலா சிவாவிடம் நாங்கள் சொல்லிவிட்டோம் என்ற குற்றச்சாட்டை எங்கள் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மறுக்கிறது. ராஜேஷின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. பொய்யானது.

அவர் சொல்வது போல அவர் எங்களிடம் சொன்ன கதை அவ்வளவு நன்றாக இருந்திருந்தால் நாங்களே அதை முறையான நடிகர்களோடு தயாரித்திருப்போம். கடந்த ஒரு வருடத்தில் மூன்று புதுமுக இயக்குநர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தந்திருக்கிறோம். பரத் கம்மா - 'டியர் காம்ரேட்', ரிதேஷ் ரானா - 'மத்து வதலரா', சனா புச்சி பாபு - 'உப்பென்னா' (வெளியீடுக்குத் தயாராக உள்ளது). எனவே கதை நன்றாக இருந்திருந்தால் இன்னொரு புதுமுக இயக்குநரை அறிமுகம் செய்ய வேண்டாம் என எது எங்களைத் தடுத்திருக்கும்?

எங்களிடம் சொல்லப்பட்ட கதை மிக பலவீனமாக இருந்தது, அதன் கரு சரியில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது. இதுவே உண்மை. இது அவரிடமும் சொல்லப்பட்டது.

கதையே நன்றாக இல்லாத போது, அதைத் தழுவி எடுக்க வேண்டும் என கொரட்டாலா சிவா அவர்களிடம் நாங்கள் ஏன் சென்று சொல்ல வேண்டும். கொரட்டாலா சிவா மேதைமையான இயக்குநர், நல்ல கொள்கைகளும் தர்மங்களும் கொண்ட நல்ல மனிதர் என்ற நற்பெயரைப் பெற்றவர். எங்கள் பெயரையும், கொரட்டாலா சிவா அவர்களின் பெயரையும் கெடுக்க, எந்த வித ஆதாரமும் இன்றி இந்த ராஜேஷ் என்பவர் ஊடகங்களில் குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

ஊடகத்தில் அவரது செயல்பாட்டையும் மற்றும் உணர்ச்சி வசப்பட்டு அவர் பேசியதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவருக்கு எதிராக உடனடியாக எந்தவித தயக்கமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அவரது குற்றச்சாட்டுகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் அவர் இப்படி மலிவான விஷயங்களைச் செய்து கவனம் ஈர்க்கவே பார்க்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது"

இவ்வாறு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x