Last Updated : 27 Aug, 2020 03:10 PM

 

Published : 27 Aug 2020 03:10 PM
Last Updated : 27 Aug 2020 03:10 PM

’நீ போகும் இடமெல்லாம்’, ‘என்னதான் ரகசியமோ...’, ’உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!’ - ஈஸ்ட்மென்கலரில் ‘இதயக்கமலம்’ எனும் காவியம்

’உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ என்றொரு பாடல் அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இதுதான் காதல் ஒத்தடம். ‘நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ’ என்பதுதான் அன்பையும் காதலையும் சொன்ன அற்புதப்பாடல் அன்றைக்கு.’தோள் கண்டேன் தோளே கண்டேன்’ என்ற பாடல், பரஸ்பரம் புரிந்து உணர்ந்த காதலின் வெளிப்ப்பாடன பாடல் என்று கொண்டாடினார்கள் அன்றைக்கு. ’மலர்கள் நனைந்தன பனியாலே’ என்ற பாடல் இயற்கையைக் கொஞ்சும். இயற்கை தரும் இதத்துக்கு நிகரான அன்பையும் இணைத்துப் போற்றும். ’என்னதான் ரகசியமோ இதயத்திலே’ என்ற பாடல் கேட்கும் போது குதூகலிக்கவும் செய்யும். நெகிழவும் வைக்கும். இந்த அத்தனைப் பாடல்களையும் கொண்டதுதான் ‘இதயக்கமலம்’.

ஒரு படத்தின் கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதை சொல்லும் விதம், நம்மைக் கட்டிப்போடவேண்டும். கதையின் மையத்தை, கதைக்கான முடிச்சு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நம்மை தவிக்கவிடவேண்டும். அதுதான் அழகான, அட்டகாசமான, தெளிவான திரைக்கதை என்று நம்மைக் கொண்டாட வைக்கும். அப்படியான திரைக்கதை கட்டமைப்புடன் வந்த படங்கள், எத்தனை வருடங்களானாலும் நம் மனதை விட்டு அகலாமல், அப்படியே மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கும். ‘இதயக்கமலம்’ அட்டகாச சினிமாக்களில் ஒன்று!


ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, பாலாஜி, சகஸ்ரநாமம், பாலையா, ஷீலா முதலானோர் நடித்த படம். ஈஸ்ட்மென்கலரில் வெளியான படம். ஸ்ரீகாந்த் என்பவர் இயக்க, எல்.வி.பிரசாத் டைரக்‌ஷன் மேற்பார்வையில் வெளியான இந்தப் படம், கே.ஆர்.விஜயாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்களில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தியாவின் மிகச்சிறந்த பிதாமகன்களில் ஒருவரான எல்.வி.பிரசாத்தின் மகன் தான் ஸ்ரீகாந்த்.

படத்தின் தொடக்கக் காட்சிகளே, நம்மை ’என்ன... என்ன...’ என பரபரக்க வைக்கும். மிகப்பெரிய பங்களா வீட்டுக்குள் அவசரம் அவசரமாக கார் நுழையும். காரில் இருந்து டாக்டர் இறங்கி வேகவேகமாக உள்ளே செல்லுவார். அங்கே படுத்தபடுக்கையாக, பேச்சுமூச்சின்றி இருப்பார் கே.ஆர்.விஜயா. படத்தின் நாயகி இவர். கேரக்டரின் பெயர் கமலா. ‘விஷ ஜூரம் முற்றிய பிறகு என்னை கூப்பிட்டிருக்கீங்களே’ என வருந்தியபடி சிகிச்சை பார்ப்பார் டாக்டர். மாமியார் தவித்து மருகுவார். பிறகு, அந்தப் பங்களாவுக்குள் இன்னொரு கார் சீறிக்கொண்டு வரும். ஓட்டமும் நடையுமாக உள்ளே வருவார் ரவிச்சந்திரன். அவரின் கேரக்டர் பெயர் பாஸ்கரன். அவர் வக்கீல். கமலாவின் கணவர்.

‘பிழைப்பது கஷ்டம்’ என்பார் டாக்டர். கே.ஆர்.விஜயா இறந்துபோவார். அவருக்கான ஈமச்சடங்குகளைச் செய்து, வீட்டின் ஓரிடத்தில் நினைவுமண்டபம் அமைப்பார். அதில் ‘இதயக்கமலம் தோற்றம்.... மறைவு...’ என எழுதிக் கலங்குவார்.

வக்கீலின் போலீஸ் நண்பர் கே.பாலாஜி. அவருக்கு சிறையில் உள்ள கொள்ளைக் கும்பலை, கொள்ளையர் கூட்டம் விடுவித்து கூட்டிச் சென்று விட்ட தகவல் சொல்லப்படும். கே.பாலாஜி விரைவார். போலீஸுக்கும் கொள்ளையர்களுக்கும் கடும் சண்டை. இறுதியில், ஊர்ப்பெரியவர் ஒருவர், ஒரு பெண்ணை ஒப்படைப்பார். ‘இவளும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவள்தான்’ என்பார். மறுநாள் பத்திரிகைகளில் அந்தப் பெண்ணின் புகைப்படம் வெளியாகும். அந்தப் பெண்... கே.ஆர்.விஜயா.

‘நான் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவளில்லை. வக்கீல் பாஸ்கரனின் மனைவி’ என்று சொல்லுவார் கே.ஆர்.விஜயா. இதை, ரவிச்சந்திரன், அவரின் அம்மா, வீட்டு வேலையாட்கள் என யாருமே நம்பமாட்டார்கள். இந்த வழக்கு, கோர்ட்டுக்கு வரும். கோர்ட்டில், தான் வக்கீல் பாஸ்கரனின் மனைவி கமலா என்பதை நிரூபிக்கப் போராடுவார். ஆனால் அவரின் அஸ்திரம் அனைத்துமே வீரியமில்லாமல் வலுவிழக்கும். ‘என் மனைவி கமலாவின் டைரியைக் காணோம். அதைத் திருடி வைத்துக்கொண்டு, அதைப் படித்துவிட்டு, என் மனைவி என்று சொல்லி ஏமாற்றுகிறாள்’ என்பார் ரவிச்சந்திரன்.

ஒருபக்கம் மனைவியை இழந்த துயரமும் அவளின் நினைவுகளும். இன்னொரு பக்கம்... ‘நான் தான் மனைவி’ என்று கொள்ளைக்கூட்டக்காரி சொல்லுகிறாள். இறந்தது யார், இருப்பது யார், அவள் கொள்ளைக்கூட்டக்காரிதானா, ரவிச்சந்திரனின் மனைவியா, மனைவியெனில் கொள்ளைக்கூட்டத்தில் ஏன் இருக்கவேண்டும், கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவள் எனில், ரவிச்சந்திரனின் மனைவி என்று ஏன் சொல்லவேண்டும் என்கிற சிக்கல்பிக்கல் கதைக்கு, தெளிவான திரைக்கதை மூலம் விவரிப்பதுதான் ‘இதயக்கமலம்’.

ஒரு சின்ன முடிச்சுதான். ஆனால் அதை வைத்துக்கொண்டு, அட்டகாசமான த்ரில்லர், சஸ்பென்ஸ், குடும்பப் படமாக எடுத்திருப்பதுதான் படத்தின் ஹைலைட்.. எல்.வி.பிரசாத்தின் மேஜிக்.

எல்.வி.பிரசாத் பற்றி தெரியும்தானே. கே.பாலசந்தர் கமலை வைத்து, ’ஏக் துஜே கேலியே’ எனும் வெற்றிப் படத்தைத் தந்தார் அல்லவா? அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். இவரிடம் சுரேஷ்கிருஷ்ணா அலுவலக மேலாளாராகப் பணியாற்றினார். பிறகு இவரைப் புரிந்துகொண்டு, கே.பாலசந்தர் தன்னிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கொண்டார் என்பது எக்ஸ்ட்ரா நியூஸ்.

இந்தியாவின் மிகப்பெரிய கலை மேதை, கலைத் தந்தை என்றெல்லாம் போற்றப்படுபவர் எல்.வி.பிரசாத். கமலின் ‘ராஜபார்வை’ தாத்தாதான் எல்.வி.பிரசாத். கலைஞரின் ‘மனோகரா’, ‘இருவர் உள்ளம்’ என முக்கியமான படங்களை இயக்கியவர்.

ரவிச்சந்திரனின் வீடு, கோர்ட்டில் வாதாடுதல், சின்ன ப்ளாஷ்பேக் என்று இங்கேயும் அங்கேயும் பயணிக்கிற திரைக்கதைதான். என்றாலும் கொஞ்சம் கூட சோர்வு தட்டாமல், வேகத்தடை இல்லாமல் சீராகச் சென்று கொண்டிருப்பதுதான் ’இதயக்கமலத்தின்’ முதல் ப்ளஸ் பாயிண்ட்.

மாப்பிள்ளை அழைப்பின் போது காரில் வரும் போது காதில் கிசுகிசுத்ததைச் சொல்லுவார் கே.ஆர்.விஜயா. ஓவிய நண்பர் குறித்து சொல்லுவார். இடுப்புக்கு மேலே இருக்கிற மிளகு சைஸ் மச்சத்தைச் சொல்லுவார். ஆனால் எதையும் நம்பமாட்டார் ரவிச்சந்திரன். ‘வீட்டுக்கு வருவதற்கு அனுமதி கேட்டு கடிதம் ஒன்று எழுதுவார்’. அதைப் பார்த்து அதிர்ந்து போவார் ரவிச்சந்திரன். மனைவியின் கையெழுத்து அச்சுஅசல் அப்படியே பொருந்திப்போகும். ஆனாலும் சந்தேகத்துடன் வீட்டுக்கு வர சம்மதிப்பார் ரவிச்சந்திரன்.

இரண்டு கதாபாத்திரங்கள். நான்கைந்து துணை பாத்திரங்கள். அவ்வளவுதான். ஆனால் அதை வைத்துக்கொண்டு கதையை வெகு அழகாக, சாமர்த்தியமாக நகர்த்திச் செல்வார் இயக்குநர் ஸ்ரீகாந்த். இடையே, ரவிச்சந்திரனின் மாமா பாலையா, தன் மகள் ஷீலாவை அவருக்குத் திருமணம் செய்து வைக்க ப்ளான் போடுவதும், அவர்கள் வீட்டுக்கு வரும் சொந்தக்காரரான பத்திரிகை நிருபர் ஷீலாவைக் காதலிப்பதும் இடைச்செருகல்கள். இந்த நடிகை ஷீலாதான் பின்னாளில் ரவிச்சந்திரனை காதலித்து மணந்துகொண்டார் என்பதும் ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்திலும் நடித்தார் என்பதும் தெரியும்தானே!

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பிரசாத்தின் ஒளிப்பதிவு எப்போது வெரைட்டி பியூட்டி. அமர்க்களமாகக் காட்சியை நம் கண்முன்னே விரித்துவிடுவதில் சூரர். கே.வி.மகாதேவனின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன். ‘மேளத்தை மெல்லத் தட்டு’, ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல’, ‘நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ’, ‘தோள் கண்டேன் தோளே கண்டேன்’, ‘மலர்கள் நனைந்தன பனியாலே’, ‘என்னதான் ரகசியமோ...’ என்று எல்லாப் பாடல்களுமே செம ஹிட்டு. சுசீலாவும் ஜானகியும் பாடியிருப்பார்கள். ஆண் குரலுக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ். தன் குரலால் உருக வைத்துவிடுவார்.

’இங்கு நீயொரு பாதி நானொரு பாதி - இதில் யார் பிரிந்தாலும் வேதனை மீதி’ என்ற வரிகளைப் பாடும்போது சுசீலா நம்மை அழவைத்துவிடுவார். பாஸ்கரன் என்றால் சூரியன். கமலா என்றால் தாமரை. இப்படிப் பொருத்தத்துடன் பெயர் சூட்டியிருப்பது அப்போதே நிறையவே நடந்திருக்கிறது.

படத்தின் டைட்டில் தொடங்கியதும் முதல் பெயர் கே.ஆர்.விஜயாவினுடையதுதான். இது ஹீரோயின் சப்ஜெக்ட். படத்தின் மொத்த பாரத்தையும் வெகு லாவகமாகச் சுமந்திருப்பார் கே.ஆர்.விஜயா. ரவிச்சந்திரனும் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். 64ம் ஆண்டு வெளியான இயக்குநர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’தான் ரவிச்சந்திரனின் முதல் படம். 63ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’ படம்தான் கே.ஆர்.விஜயாவின் முதல் படம். இரண்டே வருடத்தில், இப்படியொரு மெகா பிரமாண்டமான படம் இருவருக்குமே! உள்ளக்குமுறலையும் உணர்ச்சிக்குவியலையும் ஒருசேர வழங்குகிற ‘இதயக்கமலம்’ திரைப்படமும் அசால்ட்டான நடிப்பும் கே.ஆ.விஜயாவுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மறக்கே மறக்காது.

இந்திப் படம் ‘இதயக்கமலம்’ இந்தி ரீமேக். படத்தின் இந்தி வெர்ஷனுக்கு டைட்டில் ’மேரா சாயா’.. சுனில்தத், சாதனா நடித்திருந்தார்கள். தமிழுக்காக ஆரூர்தாஸ் வெகு அழகாக திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருந்தார். இந்தியிலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

1965ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, ‘இதயக்கமலம்’ ரிலீசானது. படம் வெளியாகி, 55 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்குக் கேட்டாலும் நம்மை என்னவோ செய்யும்... தூங்கவிடாமல் பண்ணும்... ‘உன்னைக் காணாத கண்ணல்ல’!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x