Published : 27 Aug 2020 01:58 PM
Last Updated : 27 Aug 2020 01:58 PM

தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் 'அலா வைகுந்தபுரம்லோ' சாதனை

ஹைதராபாத்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படம், தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் சாதனை புரிந்துள்ளது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகப் பல்வேறு சாதனைகளையும் உடைத்தது. அல்லு அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயர் பெற்றது.

இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி பிரபலங்களும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதனிடையே, ஆகஸ்ட் 16-ம் தேதி 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படம் ஜெமினி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அன்றைய தினமே, இந்தப் படம் கண்டிப்பாக டிஆர்பியில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதைப் போலவே, தெலுங்குத் திரையுலகில் அதிக டி.ஆர்.பி. பெற்ற படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது 'அலா வைகுந்தபுரம்லோ'. டி.ஆர்.பி.யில் 29.4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 7 மாதங்கள் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு, 6 மாதங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு இந்தச் சாதனையைக் கொடுத்திருப்பதற்கு நன்றி என்று தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

விரைவில், 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இது தொடர்பான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x