அப்பாவுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்: இயக்குநர் ஏ.பி.ராஜ் குறித்து சரண்யா பொன்வண்ணன் கருத்து

தந்தையுடன் சரண்யா பொன்வண்ணன்.
தந்தையுடன் சரண்யா பொன்வண்ணன்.
Updated on
1 min read

தனது தந்தை ஏ.பி.ராஜ் மறைவு குறித்து சரண்யா பொன்வண்ணன் பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் மூத்த திரைப்பட இயக்குநரும், நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையுமான ஏ.பி.ராஜ் தனது 95-வது வயதில் காலமானார். அவரைப் பற்றிய நினைவுகளை சரண்யா பகிர்ந்து கொள்கிறார்.

"அவர் எடுத்த திரைப்படங்கள் எனக்குப் பிடித்திருந்தன. நிறைய நகைச்சுவை, உணர்வுகள், ஆக்‌ஷன் நிறைந்த நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள் அவை. அவரது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால், சிறு வயதில் அவர் ஒரு இயக்குநராக அவ்வளவு மதிக்கப்படுபவர் என்பது எனக்குத் தெரியாது.

1989-ம் ஆண்டு 'அர்த்தம்' திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்த பிறகுதான் 60-களிலிருந்து 70-கள் வரை அப்பா எந்த மாதிரியான திரைப்படங்களை எடுத்தார் என்பது எனக்குத் தெரியவந்தது. 'இரும்பழிக்கல்' போன்ற திரைப்படங்களைக் காண டிக்கெட் வாங்க பெரிய வரிசையில் நின்றதாக எனது சக நடிகர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

இன்னசன்ட், ஜகதி ஸ்ரீகுமார் மற்றும் மணியம் பிள்ளை ராஜு ஆகிய நடிகர்கள், சென்னையிலிருக்கும் எங்கள் இல்லத்தில் அப்பாவைச் சந்தித்து வாய்ப்பு கேட்டிருப்பதாகச் சொன்னார்கள்.

மணிரத்னம் சார் 'நாயகன்' வாய்ப்பை எனக்குத் தந்தபோது நான் திரைப்படங்களில் நடிப்பது குறித்து அப்பா பெரிய ஆர்வம் காட்டவில்லை. திரைப்படத் துறையில் தொழிலைத் தொடர நான் நிறையத் தியாகங்கள் செய்ய வேண்டும் என்று அப்பா என்னிடம் சொன்னார். எனக்கு நடிக்கவே விருப்பம் இருந்ததால் அவர் என்னை ஆதரித்தார். நான் நடித்த படங்கள் அவருக்குப் பிடித்திருந்தன.

ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவரைப் பற்றித் தெரியவில்லை. அவருக்கு இன்னும் அதிக அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை".

இவ்வாறு சரண்யா பொன்வண்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in