Last Updated : 25 Aug, 2020 05:56 PM

 

Published : 25 Aug 2020 05:56 PM
Last Updated : 25 Aug 2020 05:56 PM

விஜயராஜ், விஜயகாந்த், புரட்சி கலைஞர், கேப்டன்... தனித்துவமான நாயகன்! 

’மார்க்கெட் வேல்யூ’ என்றொரு வார்த்தை, தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப் பிரபலம். எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் வசூலைக்குவித்துவிடும் படங்களைத் தந்தவர்களை இப்படித்தான் சொல்வார்கள். எண்பதுகளில் தொடங்கி 2000 கடந்து, அப்படியொரு வசூல் மன்னனாகத் திகழ்ந்தவர்களில் மிக மிக முக்கியமானவர்... விஜயகாந்த்.

மதுரை ரைஸ்மில்லை கவனித்துக்கொண்டிருந்த விஜயராஜுக்கு, இளம் வயதிலிருந்தே சினிமாவில் சேரவேண்டும் என்றும் நடிக்கவேண்டும் என்றும் ஆர்வம்; ஆசை. சென்னைக்குப் புறப்பட்டு வந்தவருக்கு உடனடியாகக் கிடைத்துவிடவில்லை வாய்ப்பு. இவர் ஏறி இறங்காத சினிமாக் கம்பெனி இல்லை. பட்ட அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் காயங்களையும் பட்டியலிடுவது கடினம்.

ஒருகட்டத்தில், வாய்ப்பு வந்தது. ஆனாலும் படம் ஓடவில்லை. விஜயராஜ், விஜயகாந்தானார். ‘தூரத்து இடிமுழக்கம்’, ‘இனிக்கும் இளமை’, ‘அகல்விளக்கு’ என்று வந்த படங்கள் எல்லாமே ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை. இதேசமயத்தில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முதல்படம் பெரிதாகப் பேசப்படவில்லை. இருவரின் கூட்டணியில் வெளியான படம் இருவருக்குமே மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது. அது... ‘சட்டம் ஒரு இருட்டறை’. தமிழகமெங்கும் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

இதன் பிறகு, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாட்சி’ என்று வரிசையாக படங்கள். ராம.நாராயணனின் ‘சிவப்புமல்லி’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் விஜயகாந்த் கேரக்டர் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. தொடர்ந்து புரட்சிகரமான கேரக்டர்கள் வந்தன. பழிவாங்கும் கதைகளாகவே வந்தன.

விஜயகாந்த் படமென்றால், புரட்சிகரமான கருத்துகள் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகள் சாடப்பட்டிருக்கும். தாயையோ சகோதரியையோ கொன்றவர்களை பழிவாங்குவார். ஊருக்குத் துரோகம் செய்தவர்களை துவம்சம் செய்வார். அரசியல் முகமூடிக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்குவார் என்பதான கதைகள், விஜயகாந்தை பலதரப்பட்ட ரசிகர்களின் பக்கம் கொண்டுசென்றது. பி அண்ட் சி ஏரியா ரசிகர்கள், விசிலடித்துக் கொண்டாடினார்கள்.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது, அப்போதெல்லாம் நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. அவர்கள் திறமை மீது நம்பிக்கை வைத்த ஒரே நடிகர் விஜயகாந்த். ஓய்வெடுக்க நேரமில்லாமல், வரிசையாக படங்கள் பண்ணிக்கொண்டிருந்தவர், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்து இயக்கிய படத்துக்காக, நேரம் ஒதுக்கி கால்ஷீட் கொடுத்தார். மொத்த திரையுலகமும் தமிழகமும் படத்தைப் பற்றிப் பேசியது. பேசிக்கொண்டே இருந்தது. அந்தப் படம்... ‘ஊமை விழிகள்’. குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக்கொடுத்தார். இதன் பிறகுதான், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது கோடம்பாக்கம்.
ஆரம்பப் படங்களில், விஜயகாந்துக்கு எஸ்.என்.சுரேந்தர் குரல் கொடுத்தார். போகப்போக, அவரே பேசினார். அவரின் குரலில் உள்ள கம்பீரம் இன்னும் ஈர்த்தது. பொதுவாகவே, எந்தவொரு நடிகரும் வேறு நடிகரின் சாயல் இல்லாமல் இயங்கமுடியாது, இருக்கமுடியாது என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால், விஜயகாந்த் தன் நடிப்பில் எவரின் சாயலுமில்லாமல் இருந்தார். வசன உச்சரிப்பில் எவரின் தாக்கமும் இல்லாமல் பேசினார். விஜயகாந்த் நடையிலும் சிரிப்பிலும் தனித்துவம் தெரிந்தது. இவையெல்லாம் சேர்ந்து விஜயகாந்துக்கு அதிகம் அதிகமாக ரசிகர்களைத் தந்தன.

அதேபோல வட்ட சதுர இமேஜெல்லாம் போட்டுக்கொள்ளாத நடிகர் அவர். எண்பதுகளிலேயே ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தில் வயது முதிர்ந்த அந்தோணி கேரக்டரில் அசத்தினார். ஆர்.சி.சக்தியின் ‘மனக்கணக்கு’ படத்தில், ஆக்‌ஷனையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, ஒளிப்பதிவாளராக, தகப்பனாக, கமலுடன் நடித்தார் (இதில் ஹீரோ விஜயகாந்த்).

ஸ்ரீப்ரியா, ராதிகா, மேனகா, விஜயசாந்தி, ராதா, அம்பிகா, அமலா, பானுப்ரியா, ஷோபனா என்று எல்லா நடிகைகளுடனும் ரவுண்டு வந்தார். எவருடன் நடித்தாலும், அவர்களுடனும் அந்தக் கதாபாத்திரத்துடனும் வெகு அழகாகப் பொருத்திக்கொண்டார். குறைந்த பட்ஜெட், மெகா பட்ஜெட் என்று எந்தப் படமாக இருந்தாலும் அதில் விஜயகாந்த் முத்திரைஇருந்தால், அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி என்பது திரையுலகில் முத்திரையாக்கப்பட்டது.

கிராமத்து சப்ஜெக்ட், நகரத்து கதை என்று எந்தப் படமாக இருந்தாலும் விஜயகாந்துக்காக கதை பண்ணினார்கள். அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்துக்கான கதைகளில் மிகுந்த கவனம் செலுத்தினார். ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்திலும் நடித்தார். படத்தில் இவருக்கான வசனங்கள், ஒரு அன்ரூல்டு பேப்பருக்குள் அடங்கிவிடும். காமெடியும் இசையும் ஆவேசமுமாக ‘அம்மன் கோவில்கிழக்காலே’ படத்திலும் அசத்தினார்.

போலீஸ் கதாபாத்திரம் என்றாலே சிவாஜியும் ‘தங்கப்பதக்கம்’ செளத்ரியும் நினைவுக்கு வருவார்கள். அவருக்குப் பிறகு, போலீஸ் கேரக்டரும் அந்த காக்கி உடையும் அளவெடுத்தது போல் பொருந்தியது இவருக்கு. இந்தக் காலகட்டங்களில்தான், ‘புரட்சிக்கலைஞர்’ பட்டம் கிடைத்தது அவருக்கு.

பி அண்ட் சி சென்டரில் செகண்ட் ரிலீஸ், தேர்டு ரிலீஸ் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து என்றுதான் புதுப்படங்கள் வரும். சம்பளம், மின்கட்டணம் செலுத்துவது எனும் நிலையில், எம்ஜிஆர் படத்தை இரண்டு நாள் திரையிட்டாலே, அந்த மாதத்துக்கான மின்கட்டணம் முதலான செலவுகளை சமாளித்துவிடலாம் என்றொரு கணக்கு, அங்கே உண்டு. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, விஜயகாந்த் படங்கள் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தன என்று தியேட்டர் உரிமையாளர்கள் ப்ளாஷ்பேக் சொல்கிறார்கள்.
கே.ரங்கராஜுக்கு ‘நினைவே ஒரு சங்கீதம்’, ஆர்.வி.உதயகுமாருக்கு ‘சின்னகவுண்டர்’, ஆர்.கே.செல்வமணிக்கு ‘புலன் விசாரணை’, மனோபாலாவுக்கு ‘சிறைப்பறவை’, ஆர்.சுந்தர்ராஜனுக்கு ’அம்மன் கோவில் கிழக்காலே’, ‘தழுவாத கைகள்’ என எத்தனையோ ஹிட் படங்கள். மக்களின் மனதில் இன்றைக்கும் நிற்கிற படங்கள்.
இங்கே... அடுத்தகட்டமாக அவருக்கு இன்னொரு பட்டம் வந்துசேர்ந்தது. தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களுக்கும் அவர்களின் நூறாவது படத்துக்கும் அப்படியொரு ஏழாம் பொருத்தம் உண்டு. சிவகுமாரின் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ வெற்றிபெற்றது. விஜயகாந்துக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிப் படம் அமைந்துது. அவரின் நூறாவது படம்... ‘கேப்டன் பிரபாகரன்’. இதையடுத்துத்தான் ‘கேப்டன்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

இதையடுத்த காலகட்டத்தில், திரையுலகமும் ‘கேப்டன்’ என்று கொண்டாடியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரானார். இவரின் செயல்பாடுகளையும் கடனை அடைப்பதற்கான இவரின் முயற்சிகளும் இன்றைக்கும் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸின் மிக முக்கியமான படம் ‘ரமணா’. வித்தியாச காந்தாக அமைதியாக தன் மொத்தக்கோபத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் விஜயகாந்த். விக்ரமனின் படங்களில் மிகப்பெரிய வசூலைக் கொடுத்த பிரமாண்டமான வெற்றியை சந்தித்த படம் ‘வானத்தைப் போல’. இரண்டு கேரக்டர்களுக்கும் வெரைட்டி காட்டி, அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

நடிகர் விஜயகாந்த், இயக்குநர்களின் நடிகரானார். சம்பள விஷயம், கறார் என்றெல்லாம் பார்க்காமல், தயாரிப்பாளர்களின் நடிகரானார். ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் காலால் உதைத்து வீழ்த்துகிற பாணி மூலமாகவும் பண்பட்ட நடிப்பின் வாயிலாகவும் ரசிகர்களின் நடிகரானார்.

இன்றைக்கு இருக்கிற திரையுலகினர் பலரும் ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு தேடியலைந்த சமயத்தில், வயிறார உணவிடும் அன்னதானக் கூடமாகத் திகழ்ந்தது, விஜயகாந்தின் அலுவலகம். கல்யாண வீடு போல, யார் வந்தாலும் தலைவாழை இலையில் சுடச்சுட உணவு பரிமாறி, பசியாற்றிக்கொண்டே இருப்பார்.

‘விஜயகாந்த் மாதிரி ஒரு மனிதரைப் பாக்கவே முடியாது. ஷூட்டிங்ல இருப்பார்.தயாரிப்பாளர் பணம் கொடுப்பார். கொடுத்ததுமே, அவருக்காக காத்துட்டிருக்கறவங்களைக் கூப்பிடுவார். மருத்துவச் செலவு, படிப்பு செலவு, கல்யாண செலவுன்னு எந்தந்த ஊர்லேருந்தோ வந்திருப்பாங்க. அவங்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்துருவாரு. கொடுக்கறதுன்னா அவருக்கு அப்படியொரு இஷ்டம்’’ என்று சொல்லி நெகிழும் வடிவுக்கரசி, விஜயகாந்தை வைத்து படம் தயாரித்திருக்கிறார்.

இப்படி அன்பின் உருவமாக, கருணையின் வடிவமாக, நடிப்பிலும் முத்திரை பதித்து, நடிகர் சங்கத்திலும் ஆளுமையுடன் செயலாற்றி.. என பன்முகங்களுடன் செயல்பட்ட விஜயகாந்த், அரசியலிலும் கால் பதித்தார். அதிலும் தனிபாணியை உருவாக்கி செயல்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், ‘தேமுதிக யார் பக்கம்?’ என்று எல்லோரும் காத்திருப்பதுதான் விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சி; வெற்றி.

மதுரை மண்ணின் மைந்தரான விஜயகாந்த், ஒட்டு மொத்த தமிழக ஏரியாவில் உள்ள மக்களில் பலரையும் ஈர்த்தார். எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் வேற்றுமொழியில் நடிப்பதைத் தவிர்க்கவும் செய்தார்.

எண்பதுகளில் தொடங்கிய விஜயகாந்தின் திரைப்பயணமும் அதையடுத்த அரசியல் பயணமும் தனித்துவம் மிக்கவை.

விஜயராஜ், விஜயகாந்த், புரட்சி கலைஞர், கேப்டன், தலைவர் என வளர்ந்திருக்கும் மனிதாபிமானி விஜயகாந்திற்கு இன்று ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தநாள்.
கேப்டனை வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x