ராம் கோபால் வர்மாவின் மர்டர் திரைப்பட உருவாக்கத்துக்கு தெலங்கானா நீதிமன்றம் தடை

ராம் கோபால் வர்மாவின் மர்டர் திரைப்பட உருவாக்கத்துக்கு தெலங்கானா நீதிமன்றம் தடை
Updated on
1 min read

நிஜத்தில் நடந்த ஆணவக் கொலையை அடிப்படையாக வைத்து ராம் கோபால் வர்மா இயக்கவுள்ள 'மர்டர்' திரைப்படத்தின் உருவாக்கத்துக்கு தெலங்கானா நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

ப்ரணாய் என்கிற 24 வயது தலித் இளைஞர் அம்ருதா என்கிற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் 14, 2018 அன்று பொது வெளியில், கூலிப்படையால் கொல்லப்பட்டார். மாற்றுச் சாதியைச் சேர்ந்த அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் உள்ளிட்ட 8 பேர் இந்த கொலைக்காகக் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்காக மாருதி ராவ் ஒரு கோடி ரூபாய் தருவதாகப் பேசியிருந்தார். கடந்த மார்ச் மாதம், ஹைதராபாத்தில் மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 21ஆம் தேதி அன்று, மாருதி ராவ் மற்றும் அவரது மகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கப்போவதாக ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அறிவித்திருந்தார். மகளின் மீது அப்பா அளவுக்கு மீறிய பாசத்தை வைத்தால் என்ன ஆபத்து நேரிடும் என்பதை தன் படம் காட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் திரைப்பட உருவாக்கத்துக்கு அம்ருதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். மறைந்த தனது கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வரும் அம்ருதா படத்துக்கு எதிராகச் சட்ட ரீதியாகப் போராடப்போவதாகக் கூறியிருந்தார். ஆனால் தான் யாரையும் தவறாகக் காட்டப்போவதில்லை என்றும், சூழ்நிலை மட்டுமே ஒருவரைக் கெட்டவராகக் காட்டவோ, தவறு செய்யவோ வைக்கிறது என்றும், இதையே 'மர்டர்' படத்தில் பேசவுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்தப் படத்துக்கு எதிராக மறைந்த ப்ரணாய் குமாரின் தந்தை பாலஸ்வாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். ஜூன் மாதம் நீதிமன்றத்தை அணுகியிருந்த பாலஸ்வாமி, இந்தப் படம் விசாரணையைத் திசை திருப்பும் வாய்ப்புகள் இருப்பதால் இதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் ப்ரணய் மற்றும் அம்ருதாவின் புகைப்படங்கள், அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதில் இன்று தீர்ப்பளித்திருந்த தெலங்கானா நீதிமன்றம், இந்த ஆணவக் கொலை தொடர்பான விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை, ராம் கோபால் வர்மா இந்தப் படத்தைத் தொடங்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் ராம் கோபால் வர்மா மற்றும் தயாரிப்பாளர் நட்டி கருணா ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற வலியுறுத்தலின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது நினைவுகூரத்தக்கது. மதம், இனம், பிறந்த இடம், வாழ்விடம், மொழி உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில் வெவ்வேறு தரப்புகளுக்கு இடையே விரோதத்தை உருவாக்குவது. மேலும் அமைதிக்குக் கேடு விளைவுக்கும் வகையில் செயல்படுவது என ஐபிசி 153ஏ பிரிவின் கீழும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in