Published : 23 Aug 2020 11:48 AM
Last Updated : 23 Aug 2020 11:48 AM

'எள்ளுவய பூக்கலையே' பாடல் உருவான விதம்: ரகசியம் பகிரும் யுகபாரதி

சென்னை

'அசுரன்' படத்தின் 'எள்ளுவய பூக்கலையே' பாடல் உருவான விதத்தை பாடலாசிரியர் யுகபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தாணு தயாரிப்பில் அக்டோபர் 4-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'எள்ளுவய பூக்கலையே' பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடல் உருவான முறை குறித்து பாடலாசிரியர் யுகபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எழுத்தாளர் பூமணியின் `வெக்கை’ நாவலே 'அசுரன்’ திரைப்படம் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில், நாவலின் ஒரு சரடை மட்டுமே இயக்குநர் வெற்றிமாறன் எடுத்திருக்கிறார். திரைக்காக அவர் செய்த மாற்றங்களை பூமணியும் ஏற்றிருக்கிறார். நாவலைத் திரைப்படமாக்குவது எளிதல்ல. எழுத்துக்கும் திரைக்குமுள்ள இடைவெளியை புரிந்த வெற்றிமாறன், ஓரளவு நடப்பு அரசியலையும் வரலாற்றுப் பின்புலத்தையும் உள்வாங்கியவர்.

குறியீடுகளை வைத்தே கதையையும் சூழலையும் விவரிக்கும் சாதுரியம் பழகியவர். அத்திரைப்படத்தில் தென்படும் அத்தனையும் சரியென்றோ தவறொன்றோ விவாதிக்க விரும்பவில்லை. கதையின் போக்கை கையாளும் விதத்தில் இம்முறையும் வெற்றிக்கு வெற்றிக் கிடைத்திருக்கிறது. முழுத்திரைப்படமும் முடிந்த தருவாயில்தான் 'எள்ளுவய பூக்கலையே’ பாடலுக்காக என்னை அழைத்திருந்தார்.

காட்சியையும் சூழலையும் விவரிக்கவில்லை. காட்டினார்.

சம்பந்தப்பட்ட காட்சியைப் பார்த்ததும் முகமே வெளிறிவிட்டது. மொத்தச் சிந்தனைகளும் மூளியாயின. வலுவிழந்த மனநிலையில் உடைந்தழவும் தோன்றிற்று. விடுதலைக்கேங்கும் ஓர் ஆதிப்புத்திரன், சாதிய வன்மர்களால் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டு விடுகிறான் என்பதே காட்சி. தென்மாவட்டக் களமெனினும், பிற்பகுதிகள் கீழத்தஞ்சையை நினைவூட்டின. குறிப்பாக, வெண்மணியை.

மகனே சகலமுமென்று நம்பிய தாய், அவன் இறப்பை ஏற்க மறுக்கிறாள். அசகாய சூரனாக தன் மகன் ஏழு லோகத்தையும் வென்று வருவான் என எண்ணியதில் மண் விழுகிறது. உண்மையை ஏற்க மறுத்து, உயிரோடிருக்கிறான் என வாதிடுகிறாள். ஆகவே, ஈமச் சடங்குகளைச் செய்யவும் கூடாதென்கிறாள். கணவனிடமும் சகோதரனிடமும் பதினாறாம் நாள் படையல் எதற்கென்று பாய்கிறாள். ஏற்பாடுகளை எட்டி உதைக்கிறாள். அங்கிருந்து பாடல் ஆரம்பமாகிறது.

வெற்றிமாறன் எப்பொழுதுமே பாடலுக்குள் தலையை நீட்டி கருத்துக்களைத் தெரிவித்ததில்லை. கதையையும் சூழலையும் விளக்கிவிட்டோ காட்சிகளை காண்பித்துவிட்டோ அமைதியாக இருந்துவிடுவார். எழுதியவற்றில் சந்தேக மேற்பட்டால் சில கேள்விகளைத் தொடுப்பார். உரிய பதிலை வைத்திருந்தால் அது, அவருக்கும் ஏற்புடையதாக இருந்தால் பதிவுக்குப் போய்விடலாம். வித்துவமென்பது எதிரே இருப்பவரை அனுமதித்து அங்கீரிப்பது. குறையைப் பிரதானப்படுத்திக் குதர்த்தம் செய்வதல்ல.

ஜீ.வி.பிரகாஷின் மெட்டை ஒரேயொருமுறை இசைத்துக்காட்டிவிட்டு, இரவுக்குள் எழுதிவிட முடியுமா என்றார். மையமாய்த் தலையசைத்தேன். பொதுவெளியில் தலித்துகளுக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிய கதையென்பதால் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளவேண்டிய கட்டாயமிருந்தது. தோன்றுவதை எழுதினால் தொந்தரவென்று தெரிந்ததால் வீடு வரும்வரை அச்சமே பீடித்தது. கையளிக்கப்பட்ட சமூகப் பொறுப்பை காபந்து செய்வதே என் கடமை. மரணம் கொடியது. அதைவிட, அம்மரணத்திற்குப் பின்னுள்ள சமூக அரசியல் சங்கடப்படுத்தியது.

அதே உணர்வெழுச்சியில் அமர்ந்ததும், `எள்ளுவய பூக்கலையே / ஏறெடுத்தும் பாக்கலையே’ எனும் வரிகள் வந்துவிழுந்தன. `இடம் இலை உழுந்து இட, உலகம் எங்கணும் / அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட்கொம்பு ஆயினன்’ என கம்பன் எழுதுவான்.

சிவதனுசை உடைக்க ராமன் வரும்போது ஊரெங்கும் அத்தனைக் கூட்டமாம். எள் விழக்கூட இடமில்லாத நெரிசல் என்பதையே உழுந்து இட’ என்கிறான். உழுந்தும் உளுந்தும் வேறில்லை. 'ழு’கரமே 'ளு’கரமாக ஆகியிருக்கிறது. நல்ல காரியத்திற்கு ராமன் வந்திருப்பதால் எள்ளுக்குப் பதில் உழுந்தை கம்பன் உவமித்திருக்கிறான். பெஞ்சமின் லெபோவின் 'கம்பன் களஞ்சியம்’ நூலில் எப்போதோ வாசித்த நயவுரை.

எள்ளுவய தற்செயலாகத் தோன்றினாலும் 'எள்’ குறித்த இலக்கியப் பதிவுகளை நிரல்படுத்தி மேலதிக வார்த்தைகளை எழுதினேன். எள்ளும் தாவர வகைகளில் ஒன்றுதான். ஆயினும், சமூக மதிப்புணர்வில் அதற்குச் சில விலக்குகள் உள்ளன. இறந்தவர் நினைவாக மேற்கொள்ளப்படும் பிண்டம் கரைத்தல் சடங்கிலும், சிரார்த்த சடங்கிலும் பயன்படுத்தப்படுவதால் எள்ளையும் மரணத்தையும் இணைத்துப் பார்க்கிறோம் அதனால், எள் செடியை வீட்டில் வளர்ப்பதில்லை. வீட்டுக்கும் காட்டுக்குமுள்ள வித்தியாசத்தை உணர்த்த 'எள்ளுவய’ பொருந்தியது. வீட்டுக்கு வரவேண்டியவன், காட்டிலே கிடக்கிறான்.

ஒரே மூச்சில் முழு பல்லவியையும் எழுதினேன். அடுத்தடுத்த வரிகளை என்னுள் பரவியிருந்த சோகமே கொடுத்தன. நேதாஜியும் பிரபாகரனும் இறக்கவே மாட்டார்கள் என்னும் நம்பிக்கையை தாயின் மொழியாக மாற்றிச் சொல்ல விரும்பினேன். போராளிகள் சாவதில்லை. வெவ்வேறு ரூபங்களில் முளைப்பார்கள். சித்தாந்தச் சிராய்ப்புகளால் போராட்டங்கள் தோற்பதுண்டு. ஆனால், முடிவதில்லை.

`ஆலால ஓஞ் சிரிப்பு கொத்துதய்யா / அச்சறுந்த ராட்டினம்போல சுத்துதய்யா / கொல்லையில வாழ எல / கொட்டடியில் கோழி குஞ்சு / அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா / ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா’ என்ற தொடர் கிடைத்ததும், ஒரு போராளியின் மரணம் ஏற்படுத்தும் சந்தேகங்களை சொல்லியதாகப் பட்டது.

`சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா / சாவையுமே கூறுபோட்டு கொல்லய்யா’ என்னும் தொனி தஞ்சாவூர் வட்டார வழக்கிலிருந்து வரிதத்து. சாக்குபோக்கு சொல்லாதே என்பதுதான் சால்சாப்பு.

`மண்ணோடு சாஞ்சாலும் / மல்லாந்து போனாலும் / அய்யா நீ பெரும சாதி சனத்துக்கு’ என்பதற்கு விளக்கம் தேவையில்லை. சுயசாதி பெருமிதமில்லாத சமூகமே என் கனவு. என்றாலும், இந்த இடத்தில் அந்த வார்த்தைகள் அவசியப்பட்டன.

கதையையும் சூழலையும் உற்று நோக்கினால் உணரலாம். வேளாண்மை சமூகத்தின் வேதனையைச் சொல்ல 'உழைக்க எண்ணுற ஆள / உதைச்சு தள்ளுற ஊர / கைய கால வெட்டிவீசும் கருப்பு நீ’ என்றிருக்கிறேன்.

காத்தும் கருப்பும் அண்டாது வளர்த்தவனை காணவில்லையே என்கிற தாயின் துக்கமே அது. மரணமில்லா பெருவாழ்வை 'காட்டேரி ஒன்னக் கண்டா ஓடாதோ / காப்பாத்த தெய்வம் வந்தே சேராதோ’ என கேள்வியாக முடித்தேன். காட்டேரி, கருப்பு, தெய்வம் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டில்லை. வாழ்வியல் நம்பிக்கைகள். நடுகல் வரலாற்றை குறிக்க 'கல்லாகி நின்றாயோ’ என்ற பதம் பயன்பட்டது. `தலைச்சன் புள்ளயில்லாம / சரிந்ததெத்தனை ஆட்சி’ என்னும் சொல்லாடல், ஒரு குடும்பத்தில் மூத்த மகனுக்கு தரப்படும் இடம்.

அரசனோ அன்றாடங்காய்ச்சியோ பரம்பரைத் தொடர வாரிசு வேண்டும். காயங்களை முதுகில் வாங்கினானா, மார்பில் வாங்கினானா எனப் போர்க்களத்திற்கே போய்ப் பார்த்த புறநானூற்றுப் பாடலை 'வாளேந்தி வந்தாலும் / வாழாம செத்தாலும் / கம்பீரம் கொறஞ்சிடாத நெருப்பு நீ’ என்றாக்கினேன்.

வாழ்வுக்காக வீரச்சாவை அடைந்தவர்களே நாட்டார் தெய்வங்கள். அநீதிக்கு எதிராக முதல் கல்லை வீசத்துணிந்த ஓர்ஆணோ பெண்ணோ அக்கிரமக்காரர்களால் கொல்லப்பட்டால், அவர்களை வழிபடுவதும் வணங்குவதும் தொல்குடி மரபு. நாட்டார் தெய்வங்கள் குறித்தும் வழக்காற்றியல் குறித்தும் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரைளை எழுதியிருக்கிறார். அவை நூல்களாகவும் (தமிழரின் தாவர வழக்காறுகள்,வரலாறும் வழக்காறும், நாட்டார் வழக்காற்றியல் அரசியல்) வந்துள்ளன.

நில அரசியலையும் குல அரசியலையும் தெரிந்துகொள்ள அவருடைய ஆய்வுகளும் கட்டுரைகளும் உதவுகின்றன. தொன்மத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட வரலாற்றை மறுக்கவும் மறுபரிசீலனைச் செய்யவும் இடமுண்டு. எனினும், அவற்றை மிகையென்று தள்ளிவிடமுடியாது. விதைகள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்திற்கும் நம்முடைய பண்பாடு வழங்கியுள்ள இடத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் இயற்கையை விளங்கிக்கொள்ளலாம்.

அந்த வகையில் எள்ளும் ஆமணக்கும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆமணக்கு எண்ணெய் குறித்த அயோத்திதாசப் பண்டிதரின் சித்திரிப்புகள் கவனத்துக்குரியவை. இப்பாடலை மண்மணம் மாறாமல் பாடிய ஜீ.வி.பிரகாஷூம் சைந்தவியும் நீடூழி வாழவேண்டும். நகரத்திலேயே வாழும் அவர்கள் தென்மாவட்ட மண்ணையும் மனிதர்களையும் இசையிலும் குரலிலும் கொண்டுவந்தது ஆச்சர்யமளிக்கிறது.

எனக்குப் பிடித்தமாதிரி எழுதிய வரிகளில் சிறு திருத்தமும் வெற்றிமாறன் கோரவில்லை. என்மீது அவர் வைத்த நம்பிக்கையை மக்களும் அங்கீகரித்திருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் இப்பாடலை பலரும் பாடிப் பதிவேற்றுவதைப் பார்க்கிறேன். அப்பாடலைப் பாடக்கூடிய பல குழந்தைகள் சாயலிலும் வயதிலும் என் மகளைப் போலவே இருக்கிறார்கள். எந்த நல்ல பாடலையும் அடையாளம் கண்டுவிடும் தமிழ் நிலத்தில் என் பாடல்கள் கேட்கப்படுவதைவிட, பாடப்படுவதையே பெருமையாகக் கருதுகிறேன்.

வெகுதூரத்தில் மட்டுமே தூவப்பட்ட எள் விதைகளை வீட்டுக்குள்ளும் இறைந்த நிம்மதி. தீண்டாமை, செடிகளுக்கும் கூடாதென்பதே என் குறிக்கோள். ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தன்று இதே பாடலைப் புதுவிதமாகப் படத்தொகுப்பு செய்து வெளியிட்டனர். வேலரசியலும் நூலரசியலும் தெரிந்த தமிழர்களுக்குப் பாட்டென்பது வெறும் பாட்டல்ல, பண்பாடு"

இவ்வாறு யுகபாரதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x