Published : 21 Aug 2020 01:00 PM
Last Updated : 21 Aug 2020 01:00 PM

'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் சிம்பு?

சென்னை

'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் சிம்புவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்துள்ள இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.

ஆரம்பத்திலிருந்தே இந்த ரீமேக்கில் சசிகுமார் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால் இயக்குநர் மற்றும் மற்றொரு நடிகர் குறித்து இன்னும் எதுவுமே முடிவாகவில்லை. இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சரத்குமார், ஆர்யா உள்ளிட்ட பலருடைய பெயர்கள் அடிபட்டது.

தற்போது சிம்புவை நடிக்கவைக்கப் படக்குழு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. சிம்புவும் இதில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். இயக்குநர் யார், படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை முடிவானவுடன் சிம்பு நடிப்பது குறித்து முடிவாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x