Published : 19 Aug 2020 12:09 pm

Updated : 19 Aug 2020 12:09 pm

 

Published : 19 Aug 2020 12:09 PM
Last Updated : 19 Aug 2020 12:09 PM

எஸ்பிபிக்காக பிரார்த்தனை: ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அழைப்பு

bharathiraja-press-release

சென்னை

எஸ்.பி.பிக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்ய, ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.


எஸ்.பி.பிக்கு தொடர்ச்சியாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையே, இயக்குநர் பாரதிராஜா எஸ்.பி.பிக்காக கூட்டுப் பிரார்த்தனை ஒன்றுக்காக அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்திய திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வளமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது 'பாடும் நிலா' எஸ்.பி.பி தான். தற்போது அவன் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு முடக்கப்பட்டுள்ளான் என்று நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது.

அவன் நிலையைக் கண்டு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து துறைக் கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் வேதனை அடைவதைப் பார்த்து நெஞ்சம் பதறுகிறது. அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்த கலைஞன் மீண்டு வரவேண்டும். நாம் மீட்டு வரவேண்டும்.

அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை (20-8-2020(வியாழக்கிழமை)) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையிலிருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். அதே போல் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் குரலில் பொன்மனச் செம்மலான எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள். இனம், மொழி, மதம் கடந்து ஒரு மகா கலைஞனை மீட்டெடுப்போம். அவன் குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று கூடுவோம். பிரார்த்திப்போம்"

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

எஸ்.பி.பிக்கு கரோனாகரோனாகொரோனாஎஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சைஎஸ்.பி.பி கவலைக்கிடம்எஸ்.பி.பிக்கு கரோனா தொற்றுஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்எஸ்.பி.சரண்One minute newsSpbSPBalasubrahmanyamCorona for spbSpb criticalSpcharanSpcharan videoமருத்துவமனை அறிக்கைஎம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கைஎஸ்.பி.பிக்காக கூட்டுப் பிரார்த்தனைரஜினிகமல்ஏ.ஆர்.ரஹ்மான்இளையராஜாபாரதிராஜாபாரதிராஜா வேண்டுகோள்பாரதிராஜா அறிக்கைRajiniKamalIlayarajaBharathirajaArrahman

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x