Published : 17 Aug 2020 03:18 PM
Last Updated : 17 Aug 2020 03:18 PM

காங்கிரஸ் மற்றும் பாஜகவிலிருந்து வந்த அழைப்பை ஏற்கவில்லை: கங்கணா ரணாவத்

மும்பை

தனக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளில் இணைய அழைப்பு வந்ததாகவும், தான் அதை ஏற்கவில்லை என்றும் நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பும் ஒரு நடிகை கங்கணா ரணாவத். இவரது வெளிப்படையான அதிரடி பேச்சுகள் பல சமயங்களில் செய்திகளாகியுள்ளன. இவரும் இவரது சகோதரி ரங்கோலி சாண்டெலும் சண்டைக்கு இழுக்காத பாலிவுட் பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம்.

சமூக ஊடகங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துப் பேசி வருபவர் கங்கணா. பிரதமர் மோடி அறிவிக்கும் பல திட்டங்களைப் பாராட்டுவதோடு அவரை விமர்சிக்கும் பிரபலங்களையும் கங்கணா சில நேரங்களில் விமர்சித்துள்ளார். இதனால் கங்கணா அரசியலில் நுழையத் திட்டமிட்டுள்ளார் என்ற யூகம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அவற்றுக்கு கங்கணா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

"நான் அரசியலில் நுழைய வேண்டும் என்பதால் தான் மோடிஜியை ஆதரிக்கிறேன் என்று சொல்பவர்களுக்கு இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது தாத்தா 15 வருடங்கள் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக இருந்தார். அந்நாட்களில் எங்கள் ஊரில், என் குடும்பம் அரசியலில் மிகப் பிரபலம். காங்ஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் எனக்கு காங்கிரஸிடமிருந்து அழைப்பு வந்தது. மணிகார்ணிகாவுக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக பாஜகவிடமிருந்தும் அழைப்பு வந்தது.

தேர்தல் சீட் தந்தார்கள். ஆனால் நான் ஒரு கலைஞராக எனது வேலை மீது அதிக விருப்பம் கொண்டுள்ளேன். அரசியல் பற்றி என்றும் நினைத்ததில்லை. எனவே நான் சுதந்திரமாக யாரை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அவரை ஆதரப்பிதற்கு, என்னைக் கிண்டல் செய்வது நிறுத்தப்பட வேண்டும்" என்று கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x