Published : 15 Aug 2020 03:53 PM
Last Updated : 15 Aug 2020 03:53 PM

தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்: மருத்துவமனை அறிக்கை

கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நிலையாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலரும் தொலைபேசியில் அழைத்ததால், உடனடியாக ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், தனக்கு லேசான கரோனா தொற்று தான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்று அந்த வீடியோ பதிவில் பேசியிருந்தார் எஸ்.பி.பி.

எஸ்.பி.பி உடல்நிலையில் எந்தவித பிரச்சினையுமின்றி நலமாக இருப்பதாக நேற்று ஆகஸ்ட் 13 அன்று வெளியான மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே, நேற்று (ஆகஸ்ட் 14) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எஸ்பிபி உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகளும் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து இன்னொரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 15, 2020 தேதியிட்ட அந்த அறிக்கையில் "கோவிட்-19 தொற்றுப் பிரச்சினையால் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகள் உதவியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவர் உடல்நலம் நிலையாக உள்ளது. அவரது முன்னேற்றத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பல்வேறு பிரபலங்களும், எஸ்பிபியின் லட்சக்கணக்கான ரசிகர்களும் அவர் மீண்டும் ஆரோக்கியமாக மீண்டு வர பிரார்த்தைன் செய்வதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x