Published : 14 Aug 2020 10:21 PM
Last Updated : 14 Aug 2020 10:21 PM

பாலு எழுந்துவா: இளையராஜா உருக்கம்

சென்னை

பாலு எழுந்து வா, உனக்காகக் காத்திருக்கிறேன் என்று இளையராஜா உருக்கமாகப் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சையில் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்து வந்தது.

இதனிடையே இன்று (ஆகஸ்ட் 14) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது. அதில், உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும், மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெறப் பிரார்த்தனை செய்வதாக கருத்து பதிவிட்டு வந்தார்கள். தற்போது எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.

அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போது அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன்.

அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா!"

இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x