

நிக்கி கல்ரானிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் சூழலில் சில தளர்வுகளை மட்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் திரையுலகில் சிலருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டனர்.
குறிப்பாக அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தனக்குக் கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் நிக்கி கல்ரானி.
இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் நிக்கி கல்ரானி வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் நான் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டேன். எனக்குத் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தன. கரோனா கிருமி பற்றி நிறையத் தவறான புரிதல்கள் உள்ளன. எனவே, எனது அனுபவத்தை உங்களுடன் பகிர நினைக்கிறேன்.
நல்லவேளையாக எனக்கு லேசான பாதிப்பே இருந்தது. தொண்டையில் பிரச்சினை, ஜுரம், நுகர்வு உணர்வும், நாக்கில் சுவை உணர்வும் இல்லாமல் போனது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. ஆனால், தேவையான எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி நான் தேறி வருகிறேன். வீட்டில் தனிமையில் இருப்பதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.
இது அனைவருக்கும் பயம் தரும் ஒரு காலகட்டம் என்பது எனக்குத் தெரியும். நாம் பாதுகாப்பாக இருப்பதும், மற்றவர்களின் பாதுகாப்பை நினைப்பதும் முக்கியம். எனது வயது, எனக்கு இதற்கு முன் எந்தவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகளும் இல்லை என இரண்டையும் வைத்துப் பார்த்துக் கண்டிப்பாக நான் இதிலிருந்து மீண்டு வருவேன் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் எனது பெற்றோர், வயதானவர்கள், என் நண்பர்கள் என மற்ற அனைவரும் இந்த நோயால் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்படலாம் என்று நினைக்கும்போது பயமாக இருக்கிறது. எனவே முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளுங்கள். கண்டிப்பாகத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள்.
பல மாதங்கள் வீட்டிலேயே இருப்பது எரிச்சலைத் தரும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இதற்குமுன் நாம் சந்தித்திராத ஒரு சூழலில் இப்போது வாழ்கிறோம். இது சமூகத்துக்கு நீங்கள் உங்கள் பங்கை ஆற்றும் நேரம்.
உங்கள் குடும்பங்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள், நண்பர்களுடன் இணைந்திருங்கள், மனநலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை, பதற்றத்தை உணர்ந்தால் உதவியை நாடுங்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்".
இவ்வாறு நிக்கி கல்ரானி தெரிவித்துள்ளார்.