Published : 13 Aug 2020 01:27 PM
Last Updated : 13 Aug 2020 01:27 PM

வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை

'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' என்பது, திரையுலக கம்பன் கண்ணதாசனின் கூற்று. அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கண்ணதாசனின் கூற்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆடும்வரை ஆட்டம் என்றவரும் அவர்தான். ஆடுபவர்களுக்கு, அழகியல் தெரிந்திருக்க வேண்டும்... உடல் பலமும் அவசியம். அப்போது, ஆடுபவர்கள் எல்லாம் பலசாலிகளாக இருக்க வேண்டுமா?. ஆம். இருக்க வேண்டும். ஆனால், ஆடுபவர்களைவிட, ஆட்டுவிப்பவர்கள் எப்போதும் பலசாலிகளாக இருக்கிறார்கள். தங்கள் விருப்பப்படி ஆடுபவர்களை, அவர்கள் ஆட்டுவிப்பார்கள். நம்மையெல்லாம், இறைவன் என்ற சக்தி இயக்கி, ஆட்டுவிப்பதாக ஆத்திகர்களின் நம்பிக்கை. கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்களுக்கோ, இயற்கையின் சக்திதான்.

தம்மை இயக்குவதாகக் கூறிக் கொள்வார்கள். இறைவனா? இயற்கையா? என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்க, இறைவனைப் பற்றியோ, இயற்கையைப் பற்றியோ அலட்டிக்கொள்ளாமல், 'செய்யும் தொழிலே தெய்வம்' என தொழில் மீது அக்கறை காட்டுபவர்கள், முன்னேற்றப்படிக்கட்டுகளில் வேகமாய் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் ஆடுவதோடு, மக்களையும் மகிழ்ச்சிக்கடலில் அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள்.

மக்களை மகிழ்விப்பதற்காக, திரைக்கலைஞர்கள் ஆற்றும் மகத்தான கலைச் சேவை, மதிக்கப்பட வேண்டியது. அப்படிப்பட்ட கலைச் சேவையால், தன்னை மதிப்புக்குள்ளாக்கிக் கொண்டவர்கள் எண்ணற்ற கலைஞர்கள். அந்த கலைஞர்கள் வரிசையில், தனித்துவம் பெற்றவராகத் திகழ்பவர் வைஜெயந்திமாலா.

தற்போதைய சென்னையில், அப்போதைய மெட்ராஸில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்த பிராமணக்குடும்பத்தில் M.D. ராமன் - வசுந்தராதேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் வைஜெயந்திமாலா. தாயார் வசுந்தராதேவியோ, பிரபலமான நடிகை. தலைசிறந்த நாட்டியத் தாரகை. சாஸ்திரீய சங்கீதத்தின் சங்கதிகளை அறிந்த சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர். 1941-ம் ஆண்டு வெளியான 'ரிஷ்யசிருங்கர்' திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். 1943-ம் ஆண்டு வெளிவந்த 'மங்கம்மா சபதம்' திரைப்படம், வசுந்தராதேவிக்கு வான் எட்டும் புகழ் தந்தது.

1933-ம் ஆண்டு பிறந்த வைஜெயந்தி மாலாவின் பள்ளிப்பருவம் சென்னை 'Sacred Heart' பள்ளியிலும், பின்பு சர்ச்பார்க் கான்வென்ட்டிலும் அமைந்தது. இளமையிலேயே கலைகளில் கைவரப்பெற்றவராக வளர்க்கப்பட்ட வைஜெயந்திமாலா, கவின்மிகு அழகுடன் திகழ்ந்தார். தாயைப்போல் பிள்ளை என்பது, பொதுவான சொல். அந்தப் பொதுவான சொல்லை, உண்மை என நிரூபித்துக் காட்டினார் வைஜெயந்திமாலா.

சிறு வயது முதலே, நடனத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட வைஜெயந்திமாலா, வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நடனம் பயின்றார். மேலும், மனக்கல் சிவராஜா ஐயர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்று தேர்ச்சி பெற்றார். 13-வது வயதில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

சில அரிய மனிதர்கள் தாங்கள் தோற்றுவிக்கும் நிறுவனங்களால் அறியப்படுகிறார்கள். ஆனால், நிறுவனமே அவர்தான். அவர்தான் நிறுவனம். அப்படிப்பட்ட புகழ் ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. அந்த அரிய மனிதர்தான் ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடிகள் என்று சொல்லப்படுகிற மும்மூர்த்திகளில் ஒருவர். எஸ்.எஸ்.வாசன், எல்.வி. பிரசாத், ஏ.வி.மெய்யப்பன். இந்த மூவரில் திரைப்படத்துறையை ஆண்டவர்களில் முக்கியமானவர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்.

சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ அமைந்தவுடன் செட்டியார் எடுத்த முதல்படம் 'வாழ்க்கை'. திரு. ப. நீலகண்டன் இப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார். இந்தப் படத்தில் சாரங்கபாணியின் பெண்ணாக, ஒரு கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கவேண்டிய கதாநாயகி கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்வது என்று ஆலோசனை நடைபெற்றது. மெய்யப்பச் செட்டியாரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எம்.வி. ராமன், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடிகை வசுந்தராவின் மகள் வைஜெயந்திமாலா நடனம் ஆடுவதாகவும், அதைப் போய் பார்க்கலாம் என்றும் அழைத்தார். மெய்யப்பச் செட்டியாரும் சென்று அந்த நடனத்தைப் பார்த்தார். பத்தொன்பதே வயதான பருவ மங்கை வைஜெயந்திமாலாவின் நடனம், ஒரு கவிதையின் அரங்கேற்றம் போல அழகியலை ஆடையாகச் சூட்டியிருந்தது.

வாழ்க்கை கதாபாத்திரத்திற்கு வைஜெயந்திமாலாதான் சிறந்த தேர்வு எனக் கணித்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், அவரைத் தொடர்புகொள்ளும் பணியை படத் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு அளித்தார். மாதம் 2 ஆயிரத்து 350 ரூபாய் சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டார் வைஜெயந்திமாலா.

'வாழ்க்கை' படத்தின் மூலமாகத்தான் வைஜெயந்திமாலாவின் கலையுலக வாழ்க்கை தொடங்கியது. படத்தில் இடம்பெற்றிருந்த 'உன் கண் உன்னை ஏமாற்றினால்' பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படமும் அமோக வெற்றிபெற்றது. 'வாழ்க்கை' கலையுலகைச் சேர்ந்த பலரது வாழ்க்கையை வளமாக்கியது.

வாழ்க்கையைத் தொடர்ந்து வைஜெயந்தி மாலாவின் கலையுலக வாழ்க்கை களைகட்டத் தொடங்கியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவரது புகழ் வளர்ந்தது. 1958-ம் ஆண்டு திரையுலக தீர்க்கதரிசி எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளிவந்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', வைஜெயந்தி மாலாவின் நடிப்பாற்றலையும், நடன ஆற்றலையும் நாடெங்கும் பறைசாற்றியது. இளவரசி

மந்தாகினி கதாபாத்திரத்தில் வந்த வைஜெயந்தி மாலா, ரசிகர்களின் இதயங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டார்.

'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் கதை அம்சத்தோடு கைகுலுக்கிய பாடல்கள், நாட்டியப் பேரொளி பத்மினி, நடன அழகி வைஜெயந்திமாலாவுடன் இணைந்து நடத்திய நாட்டியாஞ்சலி, ஆகியவை அந்தக்காலந்தொட்டு இந்தக் காலம் வரை ரசிகர்களை வியந்து பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறது.

வைஜெயந்தி மாலா சிறந்த பரதநாட்டியக் கலைஞர் என்பதால், அவரது நடிப்பில் நடனத்தின் நளினங்கள் நடனமாடும். உணர்ச்சிகளின் அந்த ஊர்வலம் ரசிகர்களின் இதயங்களில் நிறைவடையும்போது, எல்லையற்ற இன்பம் இதயங்களில் ஒட்டிக்கொள்ளும், தரையில் கொட்டிவிட்ட கண்ணாடி துகள்களை, தண்ணீரில் நனைத்த துணியால் ஒற்றி எடுப்பது போல.

1959-ம் ஆண்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரித்தார். ஹிந்தி திரைப்படத்திற்கு 'பைகாம்' (Paigham) எனப் பெயரிட்டார். தமிழ்ப் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என தனது ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார். 2 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றைப் பரிசீலித்த வாசன், 'இரும்புத்திரை' என்ற பெயரே பொருத்தமானது எனத் தேர்வு செய்தார். எல்லா ஊழியர்களையும் அழைத்து, விருந்து கொடுத்ததோடு, அந்தப் பெயரை முன்மொழிந்த ஊழியருக்குப் பரிசுத் தொகையும் அளித்தார். தொழிலாளியின் வியர்வை காயும் முன்பே, அவனுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் என்றார் நபிகள் நாயகம். ஆனால், தொழிலாளிக்கு பரிசுத்தொகையும் கொடுத்து நபிகள் நாயகத்தின் பொன்மொழியை பொருத்தமான மொழியாக்கினார், அமரர் எஸ்.எஸ்.வாசன்.

1960-ம் ஆண்டு வாசன் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை' படம், வைஜெயந்திமாலாவின் திரையுலக வாழ்வை தீர்மானிக்கும் படமாக அமைந்தது. நிஜ வாழ்வில், தாயும், மகளுமாக இருந்த வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா, இந்தப்படத்தில் தாயும், மகளுமாக நடித்தனர்.

குடகில் பிறந்தாலும், தமிழகத்தில் குடியேறிய காவிரி போல, தமிழகத்தில் பிறந்த வைஜெயந்திமாலா, இந்தி திரையுலகில், தனது வலதுகாலை எடுத்து வைத்தார். 1954-ம் ஆண்டு, பிரதீப் குமாருடன் இணைந்து, 'நாகின்' படத்தில், தனது இந்தி திரையுலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1955-ம் ஆண்டுமுதல், இந்தி திரையுலகம், வைஜெயந்திமாலாவைத் தனதாக்கிக் கொண்டது.

'மதுமதி', 'தேவதாஸ்', 'Naya Daur', 'சங்கம்', 'சூரஜ்', 'கங்கா ஜமுனா' 'Jewel Thief', 'Zindagi', 'Bahar' ஆகிய திரைப்படங்கள் வைஜெயந்திமாலாவின் புகழை, வானம்வரை கொண்டு சென்றன.

வைஜெயந்திமாலா, ராஜ்கபூர் மற்றும் ராஜேந்திர கபூருடன் இணைந்து நடித்த 'சங்கம்' திரைப்படம், அவருக்கு பெரும் புகழ் தந்தது. முக்கோணக் காதல் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடித்து, வைஜெயந்திமாலா தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.

தேவானந்த்துடன் இணைந்து நடித்த 'Jewel Thief' படத்தில், ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருந்தார் வைஜெயந்திமாலா. S.D. பர்மன் இசையில் உருவான எல்லா பாடல்களும் உள்ளத்தை உருக்கின.

இந்தி படங்களில், கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தபோது, தமிழிலும் தனது வெற்றிக்கொடியை தக்க வைத்துக் கொண்டார் வைஜெயந்திமாலா. பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய 'பார்த்திபன் கனவு' புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 1960-ம் ஆண்டு, யோகநாத் இயக்கத்தில் எடுக்கப்பட்ட 'பார்த்திபன் கனவு' திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

வேதாவின் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும், 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு பக்கபலம்.

1961-ம் ஆண்டு, இளமை இயக்குநர் ஸ்ரீதரின் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்த 'தேன்நிலவு' திரைப்படம், ரசிர்களுக்குத் தேன்நிலவாய் இனித்தது. துப்பாக்கிச் சூடுகளாலும், கண்ணீர் சிந்த வைக்கும் கலவரங்களாலும் தற்போது சிதைந்து போயிருக்கும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான காஷ்மீரில் தான் படப்படிப்பு முழுவதும் நடைபெற்றது. காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் வைஜெயந்திமாலா இணைந்து நடித்த இந்தப்படம் பெரும் வெற்றிபெற்றது.

'கல்யாணப்பரிசு' திரைப்படத்தைத் தொடர்ந்து, 'தேன்நிலவு' படத்திற்கும் A.M. ராஜா தான் இசை. பாடல்கள் அனைத்தும் தேன். சுவைத் தேன்.

திரையுலகப் புகழ் வைஜெயந்திமாலாவை, அரசியல் அரங்கைத் தொட்டுப் பார்க்க எத்தனித்தது. காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1984-ம் ஆண்டு, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என போற்றப்படும் இரா.செழியன், வைஜெயந்திமாலவிடம் தோற்றுப்போனார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொடூர மரணத்திற்குப் பிறகு, காங்கிரஸிலிருந்து வைஜெயந்திமாலா விலகினார்.

இந்தியத் திரையுலகில் வைஜெயந்தி மாலா, வானவில்லா? வண்ணத்துப் பூச்சியா? - இரண்டும்தான். மறையாத வானவில், உயிர்த் துடிப்போடு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி.

திரையுலகில் வைஜெயந்திமாலா பிரபலமாக இருந்தபோது, பல பிரபலங்களுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டார். கரிக்கட்டை கிடைத்தால் கூட, கை, கால், கண் எனத் தொடங்கி உருவம் வரைந்து விடுபவர்கள், எழுதுகோல் கிடைத்தால் சும்மா இருப்பார்களா?. சினிமா என்ற வெகுஜன ஊடகத்தில் உள்ளவர்கள் குறித்து, குறைத்தும் மிகைப்படுத்தியும் எழுதுவது ஒன்றும் புதியதல்லவே. வைஜெயந்திமாலாவைப் பற்றியும் நிறைய விமர்சனங்கள். புகழின் உச்சியில் இருந்தபோதே, தனது திரையுலக வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்ட வைஜெயந்திமாலா, தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத அங்கம். தமிழ்த்திரை ரசிகர்களின் மனங்களில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வரும் தங்கம்.

லாரன்ஸ் விஜயன்,

மூத்த பத்திரிகையாளர்,

தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x