Published : 12 Aug 2020 08:34 PM
Last Updated : 12 Aug 2020 08:34 PM

இயக்குநர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷல்: குடும்பப் படங்களின் புதுயுக சிற்பி

சென்னை

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் அதிக வெற்றிகளைக் கொடுத்த இயக்குநரும் நட்சத்திரக் கதாநாயகர்களை வைத்து அனைத்து வயதினருக்குமான ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்குவதில் அபாரமான திறமையை உடையவருமான இயக்குநர் சிவா இன்று (ஆகஸ்ட் 12) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஒளிப்பதிவும் இயக்கமும்

திரைப்பட இயக்குநராகவும் கனவிலிருந்த சிவா, தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டம் பெற்றார். அதன் பிறகு சில தெலுங்கு திரைப்படங்களில் ஒளிப்பதிவு உதவியாளராகவும் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார். 2001-ல் ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான 'ஈ நாடு இன்னாள வரே' என்ற மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானர். தமிழில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2002-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'சார்லி சாப்ளின்' படத்துக்கும் சிவாதான் ஒளிப்பதிவாளர்.

தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் 2008-ல் கோபிசந்த்-அனுஷ்கா நடிப்பில் வெளியான 'ஷெளர்யம்' என்னும் தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநரானார். அந்தப் படம் வெற்றியடையவே மீண்டும் கோபிசந்துடன் இணைந்து 'ஷங்கம்' படத்தை இயக்கினார்.

தமிழில் மறுவரவு

தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற 'விக்ரமார்க்குடு' படத்தின் தமிழ் மறு ஆக்கத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் அவதாரத்தில் மறு வருகைபுரிந்தார். 2011 பொங்கல் விடுமுறைக்கு வெளியான 'சிறுத்தை' ஒரிஜினல் படத்தைப் போலவே காமெடி, சென்டிமெண்ட், ஆக்‌ஷன், ஹீரோயிஸம், காதல், கிளாமர் என அனைத்தும் கலந்த கலகலப்பான ஜனரஞ்சகப் படமாக அமைந்து மிகப் பெரிய வெற்றிபெற்றது. குறிப்பாக நகைச்சுவைப் பகுதிகள் தெலுங்கில் இருந்ததைவிட சிறப்பாக அமைந்திருந்தன. இதில் நாயகனாக நடித்த கார்த்தியின் திரைவாழ்வில் மிக முக்கியமான வெற்றிப் படமாக இந்தப் படம் அமைந்தது.

அஜித்தை உருமாற்றியவர்

'சிறுத்தை' படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டார் அப்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர ஏணியில் முதல் சில படிக்கட்டுகளில் இருந்த நடிகர் அஜித் குமார். விளைவாக பாரம்பரியமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு அஜித்தை வைத்து 'வீரம்' படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் சிவா. 'பில்லா' தொடங்கி அனைத்து படங்களிலும் கோட்-சூட், கூலர்ஸ் என பெருநகரத்து அதிநவீன மனிதராகத் தோன்றிய அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்தை மையமாகக் கொண்ட படத்தில் நடித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்க முழுக்க 'வெள்ளை வேட்டி-சட்டையுடன் தோன்றினார். 'சிறுத்தை'யைப் போலவே 'வீரம்' படத்திலும் அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் சமமாகக் கலந்ததோடு அஜித்தின் இமேஜுக்கு ஏற்ற மாஸ் காட்சிகளையும் அமைத்து அதகளப்படுத்தியிருந்தார் சிவா. 2014 பொங்கல் விடுமுறைக்கு வெளியான இந்தப் படம் அஜித் ரசிகர்களைக் கவர்ந்ததோடு ஏ.பி,சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றிபெற்றது.

இந்த வெற்றி அஜித்-சிவா இணை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மேலும் மூன்று படங்களில் இணைந்து பணியாற்ற வழிவகுத்தது. 'வீரம்' படத்துக்குப் பிறகு 'தொடர்ந்து மூன்று படங்களில் சிவாவின் இயக்கத்தில் நடித்தார் அஜித். அவற்றில் 2015 தீபாவளிக்கு வெளியான 'வேதாளம்' அஜித்தின் மாஸ் இமேஜை மையப்படுத்தியதோடு, அதகளமான சண்டைக் காட்சிகள், நச்சென்ற பஞ்ச் வசனங்கள் ஆகியவற்றால் அஜித் ரசிகர்களையும், அண்ணன் - தங்கை பாசம் உள்ளிட்ட சென்டிமெண்ட் அம்சங்களால் பெண்களையும் பெரிதும் கவர்ந்து பிளாக்பஸ்டர் என்று சொல்லத்தக்க வெற்றியைப் பெற்றது

சர்வதேச சதியின் கதை

பாரம்பரியம் மிக்க, தரமான திரைப்படங்களைக் கொடுக்கும் நிறுவனம் என்று பெயர் வாங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக அஜித்-சிவா கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்தது. கிராமம், நகரத்தை அடுத்து சர்வதேச சதியை மையமாகக் கொண்ட படம் 'விவேகம்'. படம் முழுக்க ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டது. சத்யஜோதி நிறுவனம் மிகப் பெரிய அளவில் பொருட்செலவு செய்து படத்தை உண்மையிலேயே ஹாலிவுட் தரம் என்று சொல்லத்தக்க விதத்தில் படத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் இந்த மேற்பூச்சுகளைத் தாண்டி கதையிலும் திரைக்கதையிலும் ரசிகர்களைப் பெரிதாக திருப்திபடுத்த எதுவும் இல்லாததால் இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

அனைவருக்குமான அஜித் படம்

இந்தத் தோல்விக்குப் பிறகு சுதாரித்துக்கொண்ட அஜித் - சிவா விழுந்த வேகத்தில் எழுந்து நின்ற படம்தான் 'விஸ்வாசம்'. இதையும் சத்யஜோதி நிறுவனமே தயாரித்தது. 2019 பொங்கலுக்கு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த 'பேட்ட' படம் வெளியான அதே நாளில் வெளியான 'விஸ்வாசம்' வசூலை வாரிக் குவித்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்தை மீண்டும் கடைக்கோடி கிராமத்துக்குக் கொண்டு சென்ற படம் என்று பாராட்டப்பட்டது. கணவன் – மனைவிக்கிடையிலான அன்பு, மரியாதை, கண்ணியம் ஆகியவற்றையும் அப்பா - மகள் பாசத்தையும் உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்துப்போக வேண்டியதையும் வலியுறுத்திய கதையைக் கொண்டிருந்த 'விஸ்வாசம்' அனைத்து தரப்பு ரசிகர்களையும் அனைத்து வயதினரையும் பெரிதும் ஈர்த்ததே அதன் வெற்றிக்குக் காரணம்,

அஜித்துக்குப் பின் ரஜினி

'விஸ்வாசம்' வெற்றி இப்போது சிவாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. 'அண்ணாத்த' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படமும் சிவா ஸ்டைலில் ஜனரஞ்சகமான குடும்பப் படமாக அமையும், என்று எதிர்பார்க்கலாம். அஜித்தை வைத்து மாஸ் காட்டியதோடு அவருடைய மாஸ் இமேஜ் உயர்வதற்குப் பங்களித்தவரான சிவா, ரஜினிக்கும் அதையே செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஐந்தில் நான்கு வெற்றிகள்

தமிழில் இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள சிவா அவற்றில் நான்கு படங்களில் ஒரே நடிகருடன் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக இருவர் மீதும் பலத்த விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'விவேகம்' தோல்விக்குப் பிறகு சமூக ஊடகங்களில் இவர்கள் இருவரையும் கிண்டலடித்து எண்ணற்ற மீம்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக சிவாவை உருவக்கேலி செய்யும் போக்கும் தலைதூக்கியது. ஆனால் சிவா இதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இவை பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார். தனது வெற்றிகளின் மூலம் தன்னைக் கிண்டலடிப்பவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நிரூபித்தார்.

இவர் இதுவரை இயக்கிய ஐந்து படங்களில் நான்கு படங்கள் வெற்றிபெற்றவை அவற்றில் இரண்டு படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றவை என்பதும் முக்கியமானது. மிகச் சில இயக்குநர்களே இத்தகு சாதனையைச் செய்திருக்கிறார்கள். முன்னணி நட்சத்திரங்களின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற காட்சிகளை அமைப்பது பஞ்ச் வசனங்களை எழுதுவது ஆகியவை மட்டுமல்ல சிவாவின் திறமை. அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கத்தக்கப் படங்களை அவர் தொடர்ந்து கொடுத்துவருகிறார். ஆபாசம், இரட்டை அர்த்தம், பெண்களை இழிவுபடுத்துதல், என எதுவும் இல்லாமலே அனைவராலும் ரசிக்கத்தக்கப் படங்களைக் கொடுக்கும் திறனும் உழைப்பும் அவரிடம் இருக்கின்றன.

குறிப்பாகப் பாசத்தையும் குடும்ப உறவுகளின் சிறப்பையும் போற்றும் சென்டிமெண்ட் காட்சிகளை உருவாக்குவதில் அவருக்கென்று ஒரு தனித்தன்மை வாய்ந்த பார்வையும் திறமையும் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் மிகப் பணிவான பண்பான மனிதர் கடினமான உழைப்பாளி உடன் பணியாற்றுபவர்களின் நலம் நாடுபவர் என்று நற்பெயர் அவருக்கு திரைத்துறையிலும் மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ரஜினிகாந்துடனான 'அண்ணாத்த' படம் சிவாவை அவருடைய திரை வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம். அவர் அதற்கு மேலும் பல உயரங்களை அடைந்து திரைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x