Last Updated : 12 Aug, 2020 06:47 PM

 

Published : 12 Aug 2020 06:47 PM
Last Updated : 12 Aug 2020 06:47 PM

’உதயமூர்த்தி’, ‘பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை’, ‘அண்ணி அங்கயற்கண்ணி’; 80களின் ‘ரோல்மாடல்’ படமாக வந்த ‘உன்னால் முடியும் தம்பி’! 

’தில்லுமுல்லு’ திரைப்படத்தில், இல்லாத அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாகப் பொய் சொல்லியிருப்பார் ரஜினி. பொய் சொல்லிவிட்டு, ஃபுட்பால் விளையாட்டைப்பார்க்கச் சென்றிருப்பார். தேங்காய் சீனிவாசன் பார்த்துவிடுவார். மறுநாள்... விசாரிப்பார். டாக்டர் பேரு என்ன என்று கேட்பார். ‘டாக்டர் உதயமூர்த்தி’ என்பார். ‘யாரு இந்த அமெரிக்கா டாக்டரா?’ என்று கேட்பார். டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, எண்பதுகளில் உள்ள இளைஞர்களுக்கு மிஸ்டர் தன்னம்பிக்கை. திருவாளர் வைட்டமின். இவரின் படைப்புகள், எழுத்துகள்... எத்தனையோ பேரை உசுப்பிவிட்டன. உழைப்பின் பக்கமும் நேர்மையின் பக்கமும் சமூகத்தின் பக்கமும் சேவையின் பக்கமும் நேர்ப்படுத்திவிட்டன. எம்.எஸ்.உதயமூர்த்தி, இயக்குநர் கே. பாலசந்தரின் மனதுக்கும் நெருக்கமானவர். கல்லூரித் தோழர். இவரின் ‘மக்கள் சக்தி இயக்கம்’ தந்த ஈர்ப்பாலும் பாதிப்பாலும் கே.பி. செல்லுலாய்டில் செதுக்கிய தன்னம்பிக்கையும் சமூக சிந்தனைகளும்தான் ‘உன்னால் முடியும் தம்பி’.

‘உன்னால் முடியும் நம்பு தம்பி’, ‘நம்பு தம்பி நம்மால் முடியும்’, ‘நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’ என்பன போன்ற உதயமூர்த்தியின் வாசகங்கள்தான், எண்பதுகளில் பல இளைஞர்களை மடைமாற்றிவிட்டன. அவர்களுக்கெல்லாம் உதயமூர்த்திதான் ஹீரோ. கே.பாலசந்தரின் ‘உன்னால் முடியும் தம்பி’ நாயகன் கமலின் கேரக்டர் பெயரும்... ‘உதயமூர்த்தி’!
ஆக்‌ஷன் ஹீரோ சிரஞ்சீவியை ஏற்கெனவே ‘47 நாட்கள்’ படத்தில் நாயகனாக்கியவர் பாலசந்தர். இவர் வளர்ந்து ஆக்‌ஷன் ஹீரோவாக ஜொலித்த தருணத்தில், ‘ருத்ர வீணா’ என்ற பெயரில், தெலுங்கில் படமெடுத்தார். ஷோபனா நடித்தார். இளையராஜா இசையமைத்தார். ஆந்திரத்தின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்தப் படம் பெற்றது.

அதே வருடத்தில், கமல், சீதாவை வைத்து முக்கியமாக ஜெமினி கணேசனை வைத்து தமிழில் பாலசந்தர் தமிழ்ச் சமூகத்தை உசுப்பிவிட்டதுதான் ‘உன்னால் முடியும் தம்பி’.

மிகப்பெரிய சங்கீதக் குடும்பம். தந்தை பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை. சங்கீதத்தின் நேர்த்தி தெரிந்தவர். சாதியையும் விட்டுவிடாதவர். கறார் தகப்பன். இவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்தவர் வாய் பேச இயலாதவர். ஒருவேளை இருந்தாலும் அப்பாவுக்கு எதிராகப் பேசிவிடவும் மாட்டார். இவருடைய மனைவி... அங்கயற்கண்ணி. இன்னொரு மகன் உதயமூர்த்தி.

விளையாட்டுத்தனமும் துடுக்குத்தனமும் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி வரும் உதயமூர்த்திக்கு அவன் அப்பா வைத்த இன்னொரு பெயர்... உதவாக்கரை. இன்னொரு பெயர்... செல்லாக்காசு. மகன் செய்யும் குறும்புகளை திட்டிக்கொண்டே இருப்பார் அப்பா பிலஹரி. வீட்டில் வேலை செய்யும் தாத்தாதான், உதயமூர்த்திக்கு முதல் இன்ஸ்பிரேஷன். வயதான காலத்திலும், தினமும் மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். யாருக்காவது பிரயோஜனப்படும் என்று சொல்ல, அதுதான் முதல் விதை, முதல் மழைத்துளி உதயமூர்த்திக்கு.

அரசு அலுவலகத்தில், தியேட்டரில் நியாயம் பேசுகிற, வம்பு செய்தவனை அறைகிற நாயகியை கமலத்தைப் பார்ப்பார். மனதுள் உட்கார்ந்துகொள்வார். நாயகியின் குடும்பம் ‘பாரத விலாஸ்’ குடும்பம். ஜாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் திருமணம் செய்த பிற்படுத்தப்பட்ட குடும்பம். நாயகனும் நாயகியும் காதலிக்கத் தொடங்குவார்கள்.

உதயமூர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக தன் பார்வையை, தன் மனதை, சங்கீதத்தில் இருந்து, சமூகம் பக்கம் திருப்புவார். பிறருக்கு உதவ முனைவார். பாகுபாடின்றி உழைக்கும் தொழிலாளர்களுக்கிடையே ஆடிப்பாடி மகிழ்விப்பார். இதையெல்லாம் பார்த்துப் பார்த்து, அப்பாவுக்கும் பிள்ளைக்கும் முட்டிக்கொண்டே வரும். ஒருநாள் கச்சேரிக்குக் காரில் செல்லும்போது, வழியில் மின்வாரிய ஊழியர் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பார். உதவி கேட்பார்கள். கச்சேரிக்குச் செல்லவேண்டும் என்பார் அப்பா. கடவுள் காப்பாத்துவார்பா என்பார்.

ஆனால் அவர் இறந்துவிடுவார். மனம் வலிக்கும் உதயமூர்த்திக்கு. அவரின் இறுதிச்சடங்கில் பங்கெடுத்து வருவார். பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளைக்கும் மகன் உதயமூர்த்திக்கும் சண்டை வலுக்கும். இந்தநிலையில் சங்கீத வாரிசாக சாருகேசி எனும் அனாதை இளைஞனை நியமித்துக் கொள்ள, இன்னும் வெடிக்கும் எதிர்ப்பு. வீட்டை விட்டு வெளியேறுவார் உதயமூர்த்தி.
இப்போது, தன் மொத்த வாழ்க்கையும் சமூகத்துக்கே என அர்ப்பணிப்பார். குடிகாரர்களைத் திருத்துவார். சாராயம் விற்பவர்களை எதிர்ப்பார். தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைக்குச் செல்லும் சிறுவர்களைப் படிக்க அனுப்புவார். மாட்டுத் தொழுவமாக இருக்கும் பள்ளியை சீர்செய்வார். இதற்கு வரும் பல எதிர்ப்புகளை சமாளிப்பார். நாயகியைத் திருமணம் செய்ய முடிவு செய்வார். அதை அப்பாவே தடுத்து சண்டை போட சாராயம் விற்பவர்களையும் குடிப்பவர்களையும் தூண்டுவார். அப்போது கேட்கப்படும் கேள்விகளால், திருமணத்தை நிறுத்துவார் உதயமூர்த்தி.

இன்னும் தீவிரமாக சமூக மேம்பாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். மதுவுக்கு அடிமையானவர்கள் திருந்துவார்கள். குழந்தைகள் கல்விச்சாலைக்குச் செல்வார்கள். ஒவ்வொரு வீட்டுப் பெண்களும் நிம்மதியாக வயல் வேலைகளில் ஈடுபடுவார்கள். தெருவில் தூசு இருக்காது. குப்பை இருக்காது. சாராயக் கடை கிடையாது. போலீஸ் ஸ்டேஷனும் இருக்காது. இதை அறிந்து, பார்த்து வியக்கிற டெல்லி மந்திரி, மத்திய அரசிடம் தகவல்களைச் சொல்லுவார். நல்லூர் எனும் கிராமத்தை முன் மாதிரி கிராமமாக மாற்றிய உதயமூர்த்திக்கு, சிறந்த மனிதர் எனும் விருதை வழங்க, பிரதமரே அந்த ஊருக்கு, கிராமத்துக்கு வருவார். அப்போது, மகனின் பரந்து பட்ட மனதையும் சமூகத்தின்பால் அவனுக்குள்ள அக்கறையையும் கண்டு பூரித்துப் போவார். ‘உதயமூர்த்தியுடைய அப்பா நான்’ என்று பெருமிதத்துடன் சொல்லுவார். பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நாயகியை அழைத்து மகனுடன் சேர்த்துவைப்பார். ‘உன்னால் முடியும் தம்பி தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி’ எனும் பாடலுடன், கே.பாலசந்தர் படம் வழியே எடுத்த பாடம் நிறைவுறும்.

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையாக ஜெமினி கணேசன். இவரைத் தவிர வேறு எவரையும் இந்தக் கேரக்டருக்கு கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. அப்படியொரு பாந்தமான கேரக்டர். எள்ளும்கொள்ளும் வெடிக்கிற முகமும் சுருக்சுருக்கென்று பேசுகிற குணமுமாக மனிதர் பிரமாதப்படுத்தியிருப்பார். அண்ணி அங்கயற்கண்ணியாக மனோரமா. இவரும் வேறு எவரையும் யோசிக்கவே விடாத அளவுக்கு நிறைவு செய்திருப்பார். சாருகேசியாக ரமேஷ் அரவிந்த். சிறிய கதாபாத்திரம்தான். ஆனாலும் மனதில் நிற்பார். தாரிணி. செளகார் ஜானகியின் பேத்தி. துறுதுறுவென நடித்திருப்பார். வாய் பேசமுடியாத அண்ணனும் நாகஸ்வரத்தில் பேசிப் பேசியே நம்மை கொள்ளையடித்திருப்பார்.

படித்துறையில் அமர்ந்துகொண்டு, பக்கத்தில் இருக்கிற வாழைப்பழத்தைத் தடவித்தடவி எடுக்க முனைவார் பார்வையற்ற பிச்சைக்கார பாட்டி. அந்தத் தவிப்பை மந்திரம் முணுமுணுத்தபடி சிரித்து ரசிப்பான் சிறுவன் உதயமூர்த்தி. ‘சாமி உன்னை மட்டும் காப்பாத்தணும்னு வேண்டிக்கிறியேப்பா. இது தப்பு’ என்பார் அங்கே இருக்கும் வயதான ஒருவர். அங்கிருந்துதான் டைட்டில் ஆரம்பமாகும்.

ஜெமினி கணேசன் கமலுக்கு சங்கீதப் பயிற்சி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பார். வாசலில், ‘அம்மா, தாயே... பசி உயிரு போகுதும்மா. ராப்பிச்சைம்மா’ என்று கிழவியின் குரல். கமலால் பாடமுடியாது. ‘சங்கீதம் கத்துக்கும் போது கவனம் எங்கேடா போவுது. அந்தப் பிச்சைக்காரி குரலா? என்று கேட்பார் ஜெமினி. ‘அது அபஸ்வரம்’ என்பார். ‘பசின்னு ஒரு குரல். அதை அபஸ்வரம்னு சொல்லாதீங்க அப்பா’ என்பார் கமல்.

‘சார் எங்கே சமூக சேவை செய்யப் போயிட்டீங்களா, இல்ல சல்லாபம் பண்ணப் போயிட்டீங்களா?’ என்பார். ‘இன்னிக்கி ராமர் கோயில்ல கச்சேரி’ என்பார். ‘காப்பாத்தச் சொல்லி கெஞ்சினானே. அவன் இறந்துட்டாம்பா’ என்று வேதனையுடன் சொல்வார் கமல். ‘கடவுள் காப்பாத்துவாருன்னு சொல்லிட்டுப் போயிட்டீங்க. அவன் உசுரு உங்க கைல இருந்துச்சுப்பா. கார் கொடுத்து உதவி செஞ்சிருந்தா, அந்தக் குடும்பத்துக்கு நீங்களே கடவுளாகியிருப்பீங்க’ என்பார் கமல்.

சீதாவின் அப்பா ஐ.எஸ்.முருகேஷ், வக்கீல். நலிவுற்றவர்களுக்காக வாதாடி ஜெயித்துக் கொடுத்திருப்பார். ‘ஃபீஸ் என்ன தரணும்’ என்பார்கள். பீடி குடிப்பவனை பீடியை விடச் சொல்லுவார் சீதா. சாராயம் குடிப்பவனை இனி குடிக்கக் கூடாது என்றும் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பவனை இனி இப்படிச் செய்யக்கூடாது என்றும் சொல்லுவார். ‘இதான் ஃபீஸ்’ என்பார்.
‘ஏன்யா குடிக்கிறே?’ என்று ஜனகராஜிடம் கமல் கேட்பார். ‘எம்ஜிஆர் பூட்டாருப்பா’ என்பார். ‘அதுக்கு முன்னாடி குடிக்கலியா?’ என்பார். ‘காமராஜர் போயிட்டாருன்னு குடிக்க ஆரம்பிச்சேன்’ என்பார். அதே ஜனகராஜ், கொசு கடிக்கிறது என்று போதையில், வீட்டைக் கயிற்றில் கட்டி இடம் பெயர்க்க முனைவார். சார்லி, கவிதாலயா கிருஷ்ணன், நாசர், டெல்லி கணேஷ் என எல்லார் நடிப்பும் கச்சிதம். டெல்லி கணேஷ் கெட்ட வார்த்தை பேசுவதைக் கேட்டு, அருகில் உள்ள செடி வாடிப்போய்விடுகிற மாதிரி காட்டுவார் இயக்குநர். இப்படியான கே.பி. டச்கள் படம் முழுக்க ஏராளம்.

வழக்கம் போல் ரகுநாத ரெட்டியின் ஒளிப்பதிவு, கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி இருக்கும். மந்திரியாக வரும் வி.கே.ராமசாமியையும் ‘பிளெடி பிளெடி’ என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவதையும் மறக்கவே முடியாது.
ஜெமினிக்கும் கமலுக்கும் வாக்குவாதம் வலுக்க, மூத்த மகன் உடனே நாகஸ்வரத்தை எடுத்து ஆலாபனை செய்ய, அடுத்த ஐந்து நிமிடத்துக்கு இசை ராஜாங்கம் செய்து இசையால் காட்சியை நிரவியிருப்பார் இளையராஜா. படத்தின் பல இடங்களில் புல்லாங்குழல் கொண்டு, ஒரு பிஜிஎம் வரும். மனசை என்னவோ செய்யும்.

‘நீ பாடினது என்ன ராகம் தெரியுமாடா?’ என்று ஜெமினி கேட்க, ‘சுத்த தன்யாசி’ என்று கமல் சொல்ல, ‘சுத்த தன்யாசியா இது? அசுத்த தன்யாசி’ என்று சொல்வார். பாலசந்தருக்கே உண்டான பளீர் சுளீர் வசனங்கள் படம் நெடுக, மனதில் பச்சக்கென்று சேர்ந்துகொண்டே இருக்கும்.

‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நாகேஷும் அம்மா எஸ்.என். லட்சுமியும் திருமணப் பேச்சு குறித்து ஒத்திகை பார்க்கும் காட்சி வரும். இதில், அண்ணி மனோரமாவும் கமலும் ஜெமினியிடம் கல்யாணப் பேச்சுவார்த்தையை எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்க்கிற காட்சி வரும். தியேட்டரே வெடித்துச் சிரிக்கும்.

டாக்டர் எம்.எஸ். மூர்த்தியின் ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்பதை வலியுறுத்தும்விதமாக, ‘அமைதிப் புரட்சி இயக்கம்’ என்று வைத்திருப்பார் பாலசந்தர். ஊரின் பெயர் நல்லூர். இப்படி காட்சிக்குக் காட்சி, செதுக்கியிருப்பார் பாலசந்தர்.

‘அக்கம்பக்கம் பாரடா சின்னராசா’, ‘இதழில் கதை எழுதும் நேரம் இது’, ‘மானிட சேவை துரோகமா’, ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’, ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. ’என்ன சமையலோ’ வேறு ரகம். ஜாலி தினுசு.

உதயமூர்த்தி எனும் கேரக்டர் இளைஞர்களைக் குறிவைத்தது என்பதாலோ என்னவோ... கமல் இதில் அவ்வளவு இளமையாக இருப்பார். வீட்டில் செய்யும் குறும்பு, சீதாவிடம் வழியும் அசடு, நாசரை எதிர்க்கும் கோபம், ஜனகராஜிடம் பேசுகிற வருத்தம், அண்ணியிடம் பேசுகிற கோபம் என உதயமூர்த்தியாகவே அவதாரம் எடுத்திருப்பார் கமல். எல்லோரும் சாப்பிட வராமல் இருக்க, கமல் மட்டும் கோபத்தோடு சாப்பிட உட்காருவார். ‘எனக்குப் பசிக்குது நான் சாப்பிடப் போறேன்’ என்று நடுநடுவே சொல்லியபடி சாப்பிடப் போகும் போது, அழுதுவிட்டு, கை உதறிவிட்டுச் செல்லும் இடத்தில், பாலசந்தர் டச் இருக்கும். கமலின் நச் இருக்கும்.
1988ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியானது ‘உன்னால் முடியும் தம்பி’. படம் வெளியாகி 32 ஆண்டுகளாகின்றன.

பாலந்தர் படங்களில் இதுவும் முக்கியமான படம். ஜெமினியின் படங்களில், இதுவும் மறக்கமுடியாத படம். கமலின் படங்களில் இன்னும் நினைவடுக்குகளில் சிம்மாசனமிட்டிருக்கிற படம். இளையராஜாவின் இசையில், தனித்துவம் மிக்க ராஜபாட்டையாக வந்தது என்று எல்லோரும் கொண்டாடும் படம்.


டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியை எண்பதுகளின் இளைஞர்கள் கொண்டாடியது போல், ரோல்மாடல் என்று போற்றியது போல், அன்றைய இளைஞர்கள், ‘உன்னால் முடியும் தம்பி’யையும் அப்படித்தான் கொண்டாடினார்கள். கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x