ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்
Updated on
1 min read

சமூக வலைதளத்தில் உருவாகியுள்ள சர்ச்சை தொடர்பாக, ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீரா மிதுன், விஜய் மற்றும் சூர்யா மீது வைத்த குற்றச்சாட்டுகள் சில தினங்களாக சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விஜய் - சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்யவே, மீரா மிதுன் ட்விட்டர் வீடியோ பதிவில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

மீரா மிதுனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். நேற்று (ஆகஸ்ட் 11) இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த விவகாரம் சர்ச்சையாகிக் கொண்டே இருக்க, சூர்யா தனது ட்விட்டர் பதிவில் 2018-ம் ஆண்டு வெளியிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டியுள்ளார்.

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள். சமூகம் பயன் பெற" என்பதே அந்த ட்வீட்.

மேலும், "எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்" என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, அவருடைய ரசிகர்கள் அமைதி காப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in