Last Updated : 10 Aug, 2020 04:52 PM

 

Published : 10 Aug 2020 04:52 PM
Last Updated : 10 Aug 2020 04:52 PM

பாரதிராஜா விட்ட ‘கிழக்கே போகும் ரயில்’;  ‘பூவரசம்பூ பூத்தாச்சு’க்கு 42 வயது! 

அமைதியும் அழகும், கிராமங்களில் எப்போதும் உண்டு. ஆவேசமும் ஜாதிப் பாகுபாடுகளும் அதீதம் உண்டு. ஒழுக்கம் எங்கே இருக்கிறதோ அங்கே ஒழுக்கமீறலும் இருக்கும் என்பார்களே. அதுபோலத்தான் இதுவும். இன்னொன்றும் உண்டு கிராமங்களில். சடங்குகளும் சாங்கியங்களும் பலம் என்றும் கிராமத்துக்கே அவை பக்கபலம் என்றும் உறுதிபட நம்புகிற மனிதர்களின் வசிப்பிடங்கள். அவர்களையும் அந்த அமைதியையும் அழகையும் ஒழுக்கத்தையும் சடங்கு சாங்கியங்களையும் முக்கியமாக காதலையும் ரயிலையும் வைத்துக்கொண்டு விடியல் நோக்கிப் பச்சைக்கொடி காட்டிப் பயணித்ததே ’கிழக்கே போகும் ரயில்’!

1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்தது ’கிழக்கே போகும் ரயில். அதாவது இன்றைய தினம், ரயிலுக்கு மிகச்சரியாக 42 வயது.

பாரதிராஜாவுக்கு முதல் படம் ’16 வயதினிலே’. இது வெளியான அடுத்த வருடமே வந்ததுதான் கிழக்கே போகும் ரயில். முன்னதில் மயிலுடன் வந்தவர், இந்த முறை ரயிலுடன் பயணப்பட்டார். அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்தார்.

கிழக்கே போகும் ரயிலில் இருந்து இறங்குகிறார் பாஞ்சாலி. அம்மாவின் மரணத்துக்குப் பிறகு அக்கா கருத்தம்மாவே கதியென்று இந்தக் கிராமத்துக்கு வருகிறாள். அங்கே பாட்டுக்கார பரஞ்சோதியைப் பார்க்கிறாள். பாஞ்சாலியை அவளின் அக்கா புருஷன் பார்க்கிறான். அவள் மீது ஆசை கொள்கிறான்.

பாட்டே கதியென்று கிடக்கும் பரஞ்சோதி. நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்தவன். வேலையில் நாட்டமில்லை. அப்படியே வேலை செய்தாலும் கவிதையிலும் கற்பனையிலுமாக மூழ்கிவிடுகிறான். ஊர்ப்பெரியவரின் மகனுக்கு முடிவெட்டுகிறேன் பேர்வழி என்று குதறியெடுத்துவிடுகிறான். சோளக்காட்டுக் காவலுக்குப் போனவன், பாட்டுப்பாடி, சோளத்தையெல்லாம் திருடக் கொடுக்கிறான்.

இப்படியான சூழலில், பாஞ்சாலி அவன் மனசுக்குள் புகுந்து என்னவோ செய்கிறாள். அவளுக்குள்ளும்தான் அப்படி ஓர் இது. இருவரும் காதலிக்கிறார்கள். கிராமத்தில், காதலர்களுக்கு ஆற்றங்கரைதானே மெரினா பீச். வாய்க்காலும் வரப்பும்தானே பார்க். இவர்கள் ஆற்றுக்குள்ளேயே விளையாடுகிற தருணத்தில் நிகழ்கிற விபரீதம், ஊர்ப்பஞ்சாயத்தில் கொண்டுவிடுகிறது.

பிற்படுத்தப்பட்டவர் என்பதால் கட்டம்கட்டப்படுகிறான். மொட்டையடித்து, கரும்புள்ளிசெம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஊர்வலமாக அழைத்துவரப்படுகிறான், கவிதைக்காரன் பரஞ்சோதி.

‘என்னாலதானே பரஞ்சோதி இப்படிலாம். ரெண்டுபேரும் செத்துப்போயிடலாம்’ என்கிறாள் பாஞ்சாலி. ‘வாழணும். வாழ்ந்து காட்டணும். எந்த ஊரு அவமானப்படுத்துச்சோ, அந்த ஊரு நம்மளை வியந்துபாக்கணும்’ என்று கவிதைப்பேப்பர்களை பையிலும் நம்பிக்கையை மனதிலுமாக திணித்துக்கொண்டு சென்னைக்குச் செல்கிறான். ‘நான் சீக்கிரமே வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன். கிழக்கே போற ரயிலோட கடைசிப் பொட்டியில உனக்காக சேதி அனுப்புவேன். நீயும் அதுல எழுதி அனுப்பு. நான் பாத்துக்கறேன்’ என்று சொல்லிச் செல்கிறான்.

அங்கே, சென்னையில் கால் தேய,உடம்பு ஒடிய, மனசு நொறுங்க... அலைகிறான் பரஞ்சோதி. பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கும் அவனுக்கு, அவனுக்கே அவனுக்கு என வாசல் திறக்கிறது.

இங்கே, பரஞ்சோதியின் நினைப்பில் இருக்கும் பாஞ்சாலியை மீட்டெடுக்க முடியவில்லை. போதாக்குறைக்கு தன் கணவனே தன் தங்கையைப் பெண்டாளப் பார்க்கிறானே எனப் பதைபதைத்துப் போகிறாள் கருத்தம்மா.

பெண்பார்க்கும் படலம். மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. ஆனால் கையலம்ப கொல்லைப்பக்கம் வரும் மாப்பிள்ளையிடம் தன் மனதையும் காதலையும் பரஞ்சோதியையும் சொல்கிறாள். சொல்லி அழுகிறாள் பாஞ்சாலி. நெகிழ்ந்து கரைந்த அந்த நல்லவன், கிளம்பிச் செல்ல... பூதம் இன்னும் பூதாகரமாக வெடிக்கிறது. ‘என் மச்சினியையே கண்ணாலம் பண்ணிக்கிறேன்’ என்று பஞ்சாயத்தில் சொல்கிறான். முடியாது என மறுக்கிறாள் மனைவி கருத்தம்மா. ‘பத்து வருசமாகியும் குழந்தை இல்ல’ என்று குற்றம் சுமத்துகிறான். ‘நானும் விசம் குடிச்சிட்டு என் தங்கச்சிக்கும் விசம் குடுத்துருவேன். செத்துப்போயிருவோம்’ என்கிறாள் கருத்தம்மா. ‘அப்படினா, தாலிய அறுத்துக்கொடு’ என்கிறான். தாலி செண்டிமெண்ட், ஒர்க் அவுட்டாகிறது. அப்படியான நெருக்கடிக்கு உள்ளாகிறது நிலையில், கிழக்கே போகும் ரயிலில் சேதி எழுதி அனுப்புகிறாள்.

ஆனால் மழை. பெரு மழை. காட்டுமழை. காட்டுகாட்டு என்று காட்டுகிற மழை. எழுதிய சேதி அழிந்தது. ஆனால் மிக பயங்கர சேதி ஒன்றுக்கு அங்கே பிள்ளையார் சுழி போடப்படுகிறது.

இப்படிப்பட்ட பெருமழையாலும் காற்றாலும் புயலாலும் ஊரே வெள்ளக்காடாகி விட, ஏரி உடைந்து ஊரே மூழ்கும் பயங்கரம். அப்போது சடங்கும் சாங்கியமும் மழையில் ஒதுங்கி, ஊரை உலுக்குகிறது. கன்னிப்பெண்ணொருத்தி, ஒட்டுத்துணியில்லாமல், கையில் தீப்பந்தம் ஏந்தி ஊரை வலம் வந்தால், அம்மன் கோபம் தணியும். மழை சட்டென்று நின்றுவிடும். இந்தச் செயலால், ஊரே காப்பாற்றப்படும்’ என்கிறார்கள் ஊர்ப்பெருசுகள். பஞ்சாயத்தின் ஒவ்வொருதருண முட்டாள்த்தனத்தையும் எதிர்த்த பட்டாளத்தான், இப்போதும் எதிர்க்க, எப்போதும் பணிகிற பஞ்சாயத்து, இந்த முறை பட்டாளத்தானை எதிர்க்கிறது. ஊரை விட்டு விலக்கி வைக்கவும் முடிவு செய்கிறது. ‘இந்த முட்டாள்த்தனமான ஊரை விட்டே நான் போறேன்’ என்று கிளம்புகிறான் பட்டாளத்தான்.

ஊரில் உள்ள கன்னிப்பெண்களின் பெயர்கள் தனித்தனியே எழுதப்பட்டு, ஒரு குடத்தில் வைக்கப்பட, குழந்தையைக் கொண்டு சீட்டு எடுக்கப்பட, அந்தக் கன்னிப்பெண் பாஞ்சாலி என்று சீட்டு சொல்லுகிறது.

ஊர் தயாராகிறது. பாஞ்சாலி தயாராகவேண்டிய நிர்ப்பந்தம். அந்தநாளும் வருகிறது. ஊரே வெறிச்சோடி இருக்கிற இரவில், ஆடையேதுமின்றி, பாஞ்சாலி தெருவில் இறங்கி நடக்கிறாள்.

அப்போது, ஏதும் தெரியாத பரஞ்சோதி, பாஞ்சாலியை அழைத்துப் போக ஊருக்குள் வருகிறான். பாஞ்சாலியைப் பார்க்கிறான். அவளை அங்கிருந்து, அழைத்துக்கொண்டு ஓடுகிறான். ஊரே துரத்துகிறது. அவர்களைக் காப்பாற்றத் தடுக்கிற பட்டாளத்தானையும் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

பாஞ்சாலியும் பரஞ்சோதியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள். கிழக்கே போகும் ரயில் வருகிறது. அந்த ரயிலில் ஏறிக்கொண்டு விடியலை நோக்கி பயணிக்கிறார்கள்.

‘அப்பாடா... பாஞ்சாலியும் பரஞ்சோதியும் சேந்துட்டாங்கப்பா’ எனும் நிம்மதிப்பெருமூச்சுடன் இருக்கையில் இருந்து எழுந்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் இத்தனை வருடங்களாகியும் மனதில் இருந்து அகலவில்லை ‘கிழக்கே போகும் ரயில்’.

42 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்தான். ஆனால் கிராமத்தில் இருக்கிற ஜாதி வன்மத்தையும் ஆதிக்க சாதியின் மனோபாவங்களையும் சொன்னதெல்லாம் பொளேர் ரகம்தான். அவை இன்றைக்கும் இருப்பதுதான் வேதனை.

இந்தப் படத்தின் மூலம், பாஞ்சாலியாக ராதிகாவும் பரஞ்சோதியாக சுதாகரும் அறிமுகமானார்கள். ’16 வயதினிலே’ படத்தைத் தயாரித்த அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்திருந்தது.

படத்தின் கதை வசனத்தை ஆர்.செல்வராஜ் எழுதியிருந்தார். நேர்த்தியான, இயல்பான, போலித்தனமில்லாத கிராமத்தையும் காதலையும் வெற்றியையும் காட்சியாலும் வசனத்தாலும் காட்டியிருந்தார்கள். படத்துக்கு உதவி வசனகர்த்தா கே.பாக்யராஜ்.

இந்தப் படத்தில், டைட்டிலில் நடிகர்கள் பட்டியலில் பாக்யராஜ் பெயர் வரும். பிறகு பாடலாசிரியகள் பட்டியலில் கண்ணதாசன், முத்துலிங்கம் பெயர்களுக்குக் கீழே பாக்யராஜ் பெயரும் வரும். இதில், ஒரு பாடலும் எழுதியிருப்பார். அதுமட்டுமா? உதவி வசனகர்த்தாவாக ஓரிடத்திலும் உதவி இயக்குநராக இன்னொரு இடத்திலும் என நான்கு இடங்களில் பாக்யராஜ் பெயரை வரச் செய்து, சிஷ்யனின் திறமையை ஊக்கப்படுத்தியிருப்பார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

’கிளிகிளிகிளிகிளி. இங்கொரு கிளி. அங்கொரு கிளி. இங்கே இருக்கறது பச்சைக்கிளி. அங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி’ என்று கவுண்டமணி அப்போதே பஞ்ச் காமெடி வசனம் பேசியிருப்பார். விடுகதை சொல்லி போட்டி வைப்பதும் இரண்டு கைகளையும் தரையில் மடக்கிவைத்து, அதில் நாயகியை ஏற்றி உயரத்தூக்குவதும் சிம்பிளாக நடக்கும் உஷாவின் திருமணமும் ’பொட்டிக்கடை மயிலு புருசன் சப்பாணி அஞ்சு ரூபா’ என்று மொய் எழுதுவதும் யார் சொன்னாலும் ’வாஸ்தவமான பேச்சுங்கோ’ என்று சொல்லும் பாக்யராஜ்கள் எல்லா ஊரிலும் இருப்பார்கள் என்பதைச் சொல்லும் கேரக்டரும் அந்த ஐயர் ஜனகராஜும் நாவிதர் சீனிவாசனும் பட்டாளத்தான் விஜயனும் கருத்தம்மா காந்திமதியும் என அச்சு அசலாக வாழ்ந்து, நம்மை அவர்கள் வீட்டில் வரவேற்றது மாதிரி சிறப்பாகப் பண்ணியிருப்பார்கள்.

இதிலும் நிவாஸ் கேமிரா. அள்ளி அள்ளி அழகைத் தந்திருப்பார் நமக்கு. அதுவும் தண்டவாளத்துக்குக் கீழே கேமிரா இருக்கும். ரயில் தடதடவெனச் செல்லும். கூடவே டைட்டிலும் ஓடும். ஆரம்பமே அமர்க்களம் பண்ணியிருப்பார் நிவாஸ்.

’மாஞ்சோலைக் கிளிதானோ’ பாட்டு பாடாத விழாக்களே இல்லை அப்போது. அதிலும் நடுவே வேகமாக வரும் ‘மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ...’ என்ற வரிகளை பாட்டுப்புஸ்தகம் வாங்கி, மனப்பாடம் பண்ணிய இளசுகள் உண்டு.

’கோயில்மணி ஓசைதன்னை கேட்டதாரோ’ பாடலும் நடுவே வருகிற புல்லாங்குழலும் நம்மைக் காதலுக்குள் தள்ளிவிடும். மலேசியா வாசுதேவனின் குரலும் மயக்கிப் போடும்.

’ஏதோ பாட்டு ஏதோ ராகம்’ என்றொரு சோகப்பாட்டு. இளையராஜா பாடியிருப்பார். சென்னையின் விஸ்தீரணத்துக்குள் ஓடியோடித் தவித்து, வாழ்க்கை தேடும் மனிதனின் கவலையை வடிக்கிற பாட்டு இது. கண்ணீர் வரவைக்கிற பாட்டாகவும் அமைந்திருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ’வேலை கிடைத்துவிட்டது; வசந்தம் பிறந்துவிட்டது’ என்று கிழக்கே போகும் ரயிலின் கடைசிப் பெட்டியில் தகவல் பார்த்ததும் குஷியாகிவிடுவார் ராதிகா. மிகப்பெரிய இசை ஆலாபானை பயணத்துக்குப் பிறகு சட்டென்று நின்று நிதானித்து வேறொரு களமாக, ராகமாக, ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடல், நம்மை ரயிலுக்குள் உட்கார்த்திவைத்து ஒரு ரவுண்டு கூட்டிப் போகும் பாடல் இது. வாழ்வில் ஜெயித்த சந்தோஷத்தையும் காதலின் குதூகலத்தையும் நமக்குள் கடத்திவிடும், பாட்டு இது. படம் முழுக்க ராதிகாவின் ஸ்பெஷல் சிரிப்பு, இந்தப் பாட்டில் வட்டியும்முதலுமாக ராதிகாவின் அந்த ஸ்பெஷல் புன்னகையை வாங்கியிருப்பார் பாரதிராஜா. இப்போது பார்த்தாலும் அந்தப் பாட்டைக் கேட்டாலும் நாசி தொட்டுச் செல்லும் பூவாசப் பாடல் இது. கங்கை அமரன் எழுதிய மிகப்பெரிய ஹிட் பாடல்! இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட். படத்தின் பின்னணி இசையில், தனி ராஜாங்கமே பண்ணியிருப்பார் ராஜா சார்.

’16 வயதினிலே’யில் ’செந்தூரப்பூவே’ தந்த கங்கை அமரன், ரயிலின் மூலமாக பூவரசம்பூ தந்திருப்பார். 42 ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சாலியையும் பரஞ்சோதியையும் ஊரே கூடி எதிர்த்ததையெல்லாம் கடந்து, ’கிழக்கே போகும் ரயிலில்’ ஏற்றி அனுப்பியிருப்பார் பாரதிராஜா. ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக வந்து பச்சைக்கொடி காட்டி, அவர்களை வாழவிட்டிருப்பார். இல்லையெனில் யார்கண்டது... இப்போது போலவே நிகழ்ந்திருக்கலாம் ஆணவக்கொலை!

பொதுவாக ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் பெரிதாக ஓடாது என்பார்கள். ஆனால் இரண்டாவது படத்தையும் ஜிகுபுகுஜிகுபுகுவென ரயிலைப் போலவே ஓடவைத்தார் பாரதிராஜா. அதனால்தான் அவர் இயக்குநர் இமயம்!

படம் முடிந்து வந்த போதும், பாஞ்சாலி, பாஞ்சாலி, பரஞ்சோதி பரஞ்சோதி என்கிற கிளியின் அழைப்பு கேட்டுக்கொண்டே இருக்கும். அதனால்தான் கிழக்கே போகும் ரயிலில், திரும்பத் திரும்ப ஏறினார்கள். வெள்ளிவிழாப் படமாக்கினார்கள். மிகப்பெரிய வசூல் செய்தது இந்தப் படம். மதுரை உள்ளிட்ட பல ஊர்களில், ஒருவருடத்தைக் கடந்து ஓடியது.

1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது ‘கிழக்கே போகும் ரயில்’. படம் வெளியாகி, 42 ஆண்டுகளாகின்றன. இன்னும் நாற்பது ஆண்டுகளானலும் கிழக்கே போகும் ரயிலை, திரைப் பயணிகள் மறக்கவே மாட்டார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x