Published : 10 Aug 2020 02:56 PM
Last Updated : 10 Aug 2020 02:56 PM

கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்

கரோனா பாதிப்புக்குச் சிகிச்சை எடுத்து வந்த தயாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

1994-ம் ஆண்டு வெளியான 'அரண்மனை காவலன்' படத்தின் மூலம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கியது. 'கோகுலத்தில் சீதை', 'ப்ரியமுடன்', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'உன்னைத் தேடி', 'பகவதி', 'அன்பே சிவம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது. இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 10) காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழும் முதல் கரோனா மரணம் இதுவாகும்.

தயாரிப்பாளர் மட்டுமன்றி, சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் சுவாமிநாதன் நடித்துள்ளார். இவருடைய மகன் அஸ்வின், 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்து வந்த அவருக்கு, இந்தக் கரோனா ஊரடங்கு சமயத்தில்தான் திருமணம் செய்து வைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

சுவாமிநாதனின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x