Published : 09 Aug 2020 05:24 PM
Last Updated : 09 Aug 2020 05:24 PM

பாலசந்தர் சார் அறிமுகம் செய்தார்; பஞ்சு சார் பெரிய கலைஞன் ஆக்கினார்: ரஜினி புகழாரம்

சென்னை

பாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்தார். பஞ்சு சார் என்னைப் பெரிய கலைஞன் ஆக்கினார் என்று ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார்.

இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். 'எங்கயோ கேட்ட குரல்', 'தம்பிக்கு எந்த ஊரு', 'ஜப்பானில் கல்யாணராமன்', 'குரு சிஷ்யன்' உள்ளிட்ட பல படங்களைத் தனது பி.ஏ.ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தியது பஞ்சு அருணாச்சலம்தான்.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பஞ்சு அருணாச்சலம் காலமானார். இன்றுடன் அவர் மறைந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நாளில் பஞ்சு அருணாச்சலம் பற்றிய ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை பாஃப்டா பிலிம் இன்ஸ்டிட்டியூட் உருவாக்கியுள்ளது.

பஞ்சு அருணாச்சலம் பற்றி ரஜினிகாந்த், மறைந்த இயக்குநர் மகேந்திரன், சிவகுமார், இளையராஜா உள்ளிட்ட பலரும் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். பஞ்சு அருணாச்சலம் குறித்து பலரும் மனம்விட்டுப் பேசியிருப்பதால், ஒவ்வொருவருடைய பேச்சுமே சுமார் 1 மணி நேரம் வரை நீளும் என்று தெரிவித்தார்கள்.

பஞ்சு அருணாச்சலம் குறித்த ஆவணப்பட ட்ரெய்லரில் ரஜினி பேசியிருப்பதாவது:

"பஞ்சு அருணாச்சலம் சுயநலம் இல்லாதவர். அவரைப் பற்றி அவர் எப்போதுமே நினைத்ததே கிடையாது. இது திரைத்துறையில் உள்ள அனைவருக்குமே தெரியும். 'ஆறிலிருந்து அறுபது வரை' கதை அவருடைய உண்மையான கதை. கிட்டத்தட்ட அதிலிருக்கும் 70% சம்பவங்கள் அவருக்கு நடந்ததுதான். பாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்தார். பஞ்சு சார் என்னைப் பெரிய கலைஞன் ஆக்கினார்".

இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

இந்த ஆவணப்படம் யூடியூப் தளத்தில் வெளியிடப்படவுள்ளதா அல்லது ஏதேனும் ஓடிடி தளத்துக்கு கொடுக்கவுள்ளார்களா என்பது விரைவில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x