Published : 06 Aug 2020 08:31 PM
Last Updated : 06 Aug 2020 08:31 PM

மாஸ்கோவில் தவித்த தமிழக மாணவர்கள்: சோனு சூட் உதவியால் திரும்பினர்

சென்னை

கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.

கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கினர்.

அப்படி சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி சிலரை தனி விமானம் மூலமாகவும் சோனு சூட் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது மாஸ்கோவில் சிக்கியிருந்த சென்னையைச் சேர்ந்த 105 மாணவர்கள் வீடு திரும்ப சோனு சூட் உதவியுள்ளார். ரஷ்யா நாட்டில் மாஸ்கோ நகரில் மருத்துவ படிப்புப் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தனர். இந்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வந்தே பாரத் விமானங்கள் எதுவும் அவர்கள் தேர்வு எழுதி முடித்த பிறகு திட்டமிடப்படவில்லை. இதனால் சோனுவைத் தொடர்பு கொண்ட மாணவர்கள் அவரிடம் உதவி கோரினர்.

சோனு சூட் உடனடியாக அந்த மாணவர்கள் வீடு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதில் விமான டிக்கெட் செலவை மட்டும் மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், மற்ற ஏற்பாடுகளுக்கான பணத்தை சோனு சூட் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை திரும்பிய இந்த மாணவர்கள் தற்போது ஹோட்டல்களில் கட்டாய தனிமைக் காலத்தைக் கழித்து வருகின்றனர். மேலும் சோனுவுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள சோனு சூட், "உலகளவில் பல்வேறு நாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் சமூக ஊடகங்களில் என்னிடம் உதவி கேட்டனர். இதெல்லாம் செய்ய நான் எந்த பயிற்சியும் பெறவில்லை. எனவே நான் அந்தந்த நாடுகளின் அமைச்சகங்களிடம், அரசு தூதர்களிடம், தூதரகங்களிடம் பேசினேன். அவர்கள் நம் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் போது தேவையானது சாத்தியப்பட இறைவனே நமக்குக் கூடுதல் சக்தியைத் தருவான் என நினைக்கிறேன். சென்னை மாணவர்களுக்கு என்னால் இதைச் செய்ய முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நான் என் திரைப்பயணத்தை சென்னையிலிருந்து தான் ஆரம்பித்தேன்.

'கள்ளழகர்' திரைப்படத்துக்காக முதல் முறை கேமராவை எதிர்கொண்டது சென்னையில் தான். சென்னைக்கு ரயிலில் வந்தேன். கையில் தமிழ் கற்றுக் கொள்வது எப்படி என்ற புத்தகம் என்னிடம் இருந்தது. இந்த மாணவர்கள் உதவிக்காக என்னை அணுகிய போது அவர்களை மீண்டும் அந்த நகரத்துக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் நினைத்தேன்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x