Published : 02 Aug 2020 06:10 PM
Last Updated : 02 Aug 2020 06:10 PM

கரோனாவில் இருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்

அமிதாப் பச்சனுக்கு கரோனா டெஸ்ட்டில் நெகட்டிவ் வந்ததைத் தொடர்ந்து வீடு திரும்பினார். வீட்டிலும் தனிமையிலேயே இருக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவருக்கும் ஜூலை 11-ம் தேதி இரவு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருவரையும் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவருக்கும் கரோனா தொற்று நெகட்டிவ் ஆனதைத் தொடர்ந்து, அவர்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவருமே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார்கள்.

இன்று (ஆகஸ்ட் 2) எடுக்கப்பட்ட கரோனா டெஸ்ட்டில் அமிதாப் பச்சனுக்கு நெகட்டிவ் என வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பி, தனிமையில் இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பியுள்ளேன். வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். கடவுளின் கருணையாலும், பாபுஜியின் ஆசியாலும், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோரின் பிரார்த்தனைகளாலும் நானாவதி மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிறந்த பராமரிப்பினாலும் இந்த நாளைப் பார்க்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது".

இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால், கரோனா பரிசோதனையில் அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் பாசிட்டிவ் என்றே வந்துள்ளது. ஆகையால், அவர் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இது தொடர்பாக அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"துரதிர்ஷ்டவசமாக மீண்டும் கரோனா டெஸ்ட்டில் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் இருக்கிறேன். என்னுடைய குடும்பத்துக்காக உங்களுடைய வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கும் மீண்டும் நன்றி. மிகவும் கடன்பட்டிருக்கிறேன். விரைவில் இதைக் கடந்து ஆரோக்கியமாகத் திரும்பி வருவேன்.

சமீபத்தில் நடந்த பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு என் தந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவருக்காக உங்களுடைய வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி".

இவ்வாறு அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x