

புதிய தயாரிப்பாளர் சங்கம் உருவாகவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பாரதிராஜா விளக்கமளித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்கள்.
இதனிடையே தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்தச் செய்தி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. தற்போது இது தொடர்பாக பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது"
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்