Published : 01 Aug 2020 18:31 pm

Updated : 01 Aug 2020 20:50 pm

 

Published : 01 Aug 2020 06:31 PM
Last Updated : 01 Aug 2020 08:50 PM

டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர் 

delhi-ganesh-special-article

சென்னை

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள், நகைச்சுவைக் கலைஞர்கள், வில்லன் நடிகர்கள் என்பவர்களுக்குக் கிடைக்கும் புகழும் நட்சத்திர அந்தஸ்தும் துணை நடிகர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனால், ஒரு திரைப்படம் முழுமையடைவதற்கும் மக்களால் ரசிக்கப்படுவதற்கும் அவர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இவர்களில் சிலர் மிக நீண்ட காலம் நடிப்புத் துறையில் கோலோச்சி வெற்றிபெறுவதோடு மக்கள் மனதோடு மிகவும் நெருக்கமாகிவிடுகிறார்கள்.

திரையில் கற்பனாவாதம் சார்ந்த எந்த சிறப்பு சக்திகளும் இல்லாத தங்களைப் போன்ற சாதாரண மனிதர்களாகவே துணை நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பதால் துணை நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு இயல்பான பிணைப்பு உண்டாகிவிடுகிறது. இப்படி பல பத்தாண்டுகளாகத் துணை நடிகராக நடித்துப் புகழ்பெற்று மக்கள் மனங்களிலும் அவர்கள் குடும்ப உறுப்பினரைப் போல் நிலைத்துவிட்டவர்களில் இன்று (ஆகஸ்ட் 1) பிறந்த நாள் கொண்டாடும் டெல்லி கணேஷ் முக்கியமானவர்.

1976-ல் வெளியான 'பட்டணப் பிரவேசம்' படத்தில் நடிகராகத் திரைத் துறைக்கு அறிமுகமானார் டெல்லி கணேஷ். ஆம், இயக்குநர் சிகரம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய அசாத்திய திறமையாளர்களில், சாதனையாளர்களில் ஒருவர்தான் டெல்லி கணேஷ். 1979இல் துரை இயக்கத்தில் வெளியான 'பசி' படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற அந்தப் படத்தில் டெல்லி கணேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதேபோல் 1985-ல் பாலசந்தர் இயக்கி காவிய அந்தஸ்தைப் பெற்றுவிட்ட 'சிந்து பைரவி' படத்தில் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட மிருதங்கக் கலைஞராக வெகு சிறப்பாக நடித்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார்.

1980-களில் தொடர்ந்து பல படங்களில் பல வகையான துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த விசுவின் படங்களில் டெல்லி கணேஷுக்கு குறிப்பிடத்தக்கத் துணைக் கதாபாத்திரங்கள் அமைந்தன. ரஜினி, கமல் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்தார். 1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இன்று உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் 'நாயகன்' திரைப்படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழராக வேலு நாயக்கரின் இந்தி மொழிபெயர்ப்பாளராக நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இப்போதும் தலைமுறை ரசிகர்களும் 'நாயகன்' படத்தைப் பார்த்தால் அதில் டெல்லி கணேஷின் யதார்த்தமான நடிப்பை வியக்காமல் இருக்க முடியாது. பாலசந்தரின் 'புன்னகை மன்னன்' படத்தில் கமலின் பொறுப்பற்ற அதே நேரம் குற்ற உணர்வு மிக்க தந்தையாக உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தவர் 1981இல் வெளியான 'எங்கம்மா மகராணி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். விசுவின் 'சிதம்பர ரகசியம்', கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற சில படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் காமேஸ்வரன் கமலுக்கு சமையல்காரத் தந்தையாக பாலக்காட்டுத் தமிழ் பேசி நகைச்சுவையிலும் பட்டையைக் கிளப்பினார்.

கமல் - கிரேசி மோகன் கூட்டணியில் அமைந்த 'அவ்வை சண்முகி' படத்தில் கமல், ஜெமினி கணேசன்,. நாகேஷ், எல்லோரையும் தாண்டி சுயநலமும் குயுக்தியும் நிறைந்த நபராக டெல்லி கணேஷின் நடிப்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அந்தப் படத்திலும் அவருடைய நகைச்சுவைக் காட்சிகள் விலா நோகச் சிரிக்கவைப்பவை. 1990-களில் எல்லா முன்னணி நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் பணியாற்றினார்.

2000-க்குப் பின் தந்தை, தாத்தா போன்ற முதிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அவருடைய நிஜ வயதும் அதற்குத் தோதாக அமைந்தது. இந்தக் காலகட்டத்திலும் பல படங்களில் மனதைக் கனிய வைக்கும் உணர்வுபூர்வமான நடிப்பையும் விஜய்யுடன் நடித்த 'தமிழன்' போன்ற படங்களில் அசத்தலான நகைச்சுவை நடிப்பையும் தொடர்ந்து வழங்கி வந்தார்.

கடந்த ஆண்டு வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தந்தையாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மகளின் கையறு நிலையை மாற்ற எதுவும் செய்ய முடியாத தந்தையின் தவிப்பை வசனமே இல்லாமல் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார். 600-க்கு மேற்பட்ட திரைப்படங்களைக் கடந்து இன்றுவரை வெற்றிகரமாகத் தொடர்கிறது டெல்லி கணேஷின் நடிப்புப் பயணம்.

ஆரவாரமில்லாமல் சற்று அடங்கிய தொனியில் அதே நேரம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடிப்பதில் டெல்லி கணேஷுக்கு ஒரு தனித்திறமை இருந்தது. அது தமிழ்த் துணை நடிகர்களில் வெகு சிலருக்கே வாய்க்கப்பெற்ற பண்பு. நடிப்புத் திறமை மட்டுமல்லாமல் எளிமை, அப்பாவித்தனம், நட்பார்ந்த பாவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் முகமும் தோற்றமும்கூட டெல்லி கணேஷை மக்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக்கிவிட்டன.

தமிழக அரசின் விருதையும் கலைமாமணி விருதையும் வென்றிருக்கிறார். அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!


டெல்லி கணேஷ்டெல்லி கணேஷ் பிறந்த நாள்டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்டெல்லி கணேஷ் ஸ்பெஷல்டெல்லி கணேஷ் சிறப்பு கட்டுரைOne minute newsDelhi ganeshDelhi ganesh birthdayDelhi ganesh birthday specialDelhi ganesh specialDelhi ganesh special articl

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author