Published : 30 Jul 2020 04:58 PM
Last Updated : 30 Jul 2020 04:58 PM

புராணக் கதைக்குப் புத்துயிரூட்டும் ‘கர்ஸ்டு’!- ஆர்தர் அரசனின் கைக்கு வாள் கிடைத்த கதை

நவீன கதை சொல்லலின் துணையுடன் புராதனமான புனைவுகளையும் வெற்றிகரமாக மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கர்ஸ்டு’ (Cursed) தொடர்.

பிரிட்டனின் பிரதானமான புனைவுகளில் ஒன்று, ஆர்தர் மன்னனின் கதை. பல கற்பனைச் சம்பவங்களைக் கலந்து சொல்லப்படும் ஆர்தரின் கதையைப் பிரிட்டிஷார் தங்களின் பெருமையாகக் கருதுகின்றனர். மாயாஜால சக்தி கொண்ட ‘எக்ஸ்காலிபர்’ என்ற வாளினைக் கொண்டு ஆர்தர் தன் எதிரிகளையும் பல மாய சக்திகளையும் வீழ்த்தும் கதைகளை வைத்து ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆர்தரின் கைகளுக்கு எக்ஸ்காலிபர் வந்து சேர்வதற்கு முன்பு, மகிமை பொருந்திய அந்த வாள் எங்கே இருந்தது என்பதுதான் ‘கர்ஸ்டு’ தொடரின் கதை.

பிரபல காமிக்ஸ் எழுத்தாளரான ஃப்ராங் மில்லர் மற்றும் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் டாம் வீலர் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் தொடரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

வாளின் வரலாறு

ஐரோப்பியக் கண்டத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிப் பரவுவதற்கு முன்பு அங்கே வழக்கத்திலிருந்த பாகன் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கர்ஸ்டு’ திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கிராமிய நம்பிக்கைகள், மாயாஜாலக் கடவுள்களை வழிபடும் முறை ஆகியவை பாகன் கலாச்சாரத்தில் அடங்கும். அதில் குறிப்பிடப்படும் தேவதைகள், யட்சினிகளையும் இத்தொடரில் கதை மாந்தர்களாக மாற்றியுள்ளனர். இப்படியான அசாத்தியமான மனிதர்களை ‘வ்வே’ என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த இனத்தில் பிறக்கும் நிம்வே என்ற சிறுமி வ்வே இனத்தவர் வணங்கும் கடவுள்களின் ஆசி பெற்று எக்ஸ்காலிபர் வாளை எப்படி அடைகிறாள், அந்த வாள் எப்படி ஆர்தரின் கைகளுக்கு வந்து சேர்கிறது என்பதே கதையின் அடிநாதம். தொடரில் இந்த வாள் ‘ஸ்வார்டு ஆஃப் பவர்’ (அ) ‘ஸ்வார்டு ஆஃப் ஃபர்ஸ் கிங்’ என்றே அழைக்கப்படுகிறது.

மேலும், கிறிஸ்தவ மதத்தின் பேரில் நடத்தப்பட்ட சிலுவைப் போர்கள் பாகன் கலாச்சாரத்துக்கு எப்படியெல்லாம் சேதம் விளைவித்தன என்பதைத் திரைக்கதை ஓட்டத்தில் மிக லாவகமாக, அதே சமயம் சமரசமின்றிக் காட்சிப்படுத்தியிருப்பது இத்தொடரின் சிறப்பு.

கறுப்பினத்தைச் சேர்ந்தவராக ஆர்தர்

இத்தொடரில் ஆர்தர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பிரிட்டிஷாரின் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட பாத்திரமான ஆர்தரைக் கறுப்பினத்தவராகக் காட்டுவதா என்று பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், அந்தக் கதாபாத்திரத்தின் நேர்த்தியான வடிவமைப்பும், அதில் நடித்திருக்கும் டெவோன் டெரெலின் நடிப்பும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்டன. இவர் ஒபாமாவின் இளமைக் கால வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘பேர்ரி’(Barry) படத்தில் ஒபாமாவாக நடித்தவர்.

இத்தொடரின் பாத்திரப் படைப்புகள் கதைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. உதாரணமாக, ஆர்தராக நடித்திருக்கும் டெவோனும், அவரது தங்கை மோர்க்கானா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாலோம் ப்ரூன் ஃப்ராங்ளினும் பார்ப்பதற்கு உண்மையாகவே அண்ணன் - தங்கை போலவே இருக்கிறார்கள். நாயகி நிம்வே கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காத்தரீன் லேங்ஃபோர்ட் இனிவரும் காலங்களில் ஓடிடி இணையதள ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுவார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட டெனேரியஸ் டார்கேரியன் கதாபாத்திரத்தில் நடித்த எமிலியா க்ளார்க் போல் காத்தரீனும் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தற்போது ‘கர்ஸ்டு’ தொடரின் முதல் சீஸன் பத்து எபிசோடுகளுடன் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு எபிசோடும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஓடக்கூடியது. இத்தொடரின் அடுத்த சீஸன் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

புனைவுகளுக்கு இடையே போட்டி

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘வைக்கிங்ஸ்’ போன்ற புராதன கதைக்களமும், மாயாஜாலக் கதாபாத்திரங்களும் நிறைந்த தொடர்களுக்குத் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் 2011 முதல் 2019 வரை வருடத்திற்கு ஒரு சீஸன் என்ற கணக்கில் 8 சீஸன்களாக வெளிவந்து சக்கைபோடு போட்டது. இதையடுத்து, அதே போன்ற கதைக்களம் கொண்ட கதைகளின் பக்கம் ஓடிடி திரைக் கலைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.

‘வைக்கிங்ஸ்’ தொடரும் ஆறு சீஸன்களைக் கடந்து முடிவுறும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த ‘விட்ச்சர்’ தொடர் அமோகமான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அடுத்தடுத்த சீஸன்களில் ‘விட்ச்சர்’ மற்றும் ‘கர்ஸ்டு’ ஆகிய தொடர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x