Published : 29 Jul 2020 09:08 PM
Last Updated : 29 Jul 2020 09:08 PM

கரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜமெளலி

ஹைதராபாத்

'பாகுபலி' இயக்குநர் ராஜமெளலிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் சில மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும், இதர மாநிலங்களில் கரோனா அச்சுறுத்தல் குறையவில்லை. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (ஜூலை 29) ஆந்திராவில் முதன் முறையாக கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்க 10 ஆயிரத்தைக் கடந்தது.

சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்".

இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் ராஜமெளலி. தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார். ராஜமெளலிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவர் பூரண நலம்பெற வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x