Published : 28 Jul 2020 01:18 PM
Last Updated : 28 Jul 2020 01:18 PM

தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் பன்முகத் திறமைசாலி 

ஒரு நடிகராக பல சாதனைகளை நிகழ்த்தி முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்துவரும் தனுஷ் நடிப்பைத் தாண்டி பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு, எழுத்து, இயக்கம் என சினிமாவுக்குள் பல துறைகளில் தொடர்ந்து இயங்கிவருபவர். அனைத்திலும் தனக்கென்று ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருப்பவர்.

தனித்தன்மை மிக்க குரல்

2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிகராக அறிமுகமான தனுஷ் 2004இல் வெளியான அவருடைய நான்காவது படமான 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமைந்த 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு' (பின்னர் நாட்டு நடப்பு நல்லாத்தானே இருக்கு என்று பாடல் வரி மாற்றப்பட்டது) என்ற அந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றிபெற்றது. தனுஷின் தனித்தன்மை வாய்ந்த குரல் முதல் பாடலிலேயே பரவலான கவனம் பெற்றது. அடுத்ததாக 'புதுப்பேட்டை' படத்தில் யுவன் இசை, நா.முத்துக்குமாரின் வரிகளுடன் தனுஷின் குரலுக்காகவும் பெரிய அளவில் ஹிட்டடித்தது 'எங்க ஏரியா உள்ள வராத' பாடல்.

2010-ல் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 'உன் மேல ஆசதான்' என்னும் பாடலை தனுஷ் பாடியிருந்தார். அந்தப் பாடல் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. அதிலிருந்து தான் நடிக்காத படங்களிலும் தனுஷ் பாடத் தொடங்கினார். ஒரு பாடகராக தனுஷுக்கும் அவருடைய குரலுக்கும் இருக்கும் முக்கியத்துவம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தருணம் என்று இதைச் சொல்லலாம்.

அதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து தான் நடிக்கும் படங்களிலும் நடிக்காத படங்களிலும் பாடல்களைப் பாடிவருகிறார் தனுஷ். 2011-ல் அவர் பாடிய 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் சர்வதேச அளவில் மிகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அந்தப் பாடலே அவர் தேசிய, சர்வதேச அளவில் கவனம் பெற வழிவகுத்தது. 2015-ல் 'அனேகன்' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவர் பாடிய 'டங்கா மாரி ஊதாரி' பாடலும் 'மாரி' படத்தில் அனிருத் இசையில் அவர் பாடிய 'டானு டானு டானு' பாடலும் அந்த வருடத்தின் மரண மாஸ் ஹிட் பாடல்களாகின.

அவர் மற்ற நடிகர்களுக்குப் பாடிய பாடல்களில் 'யாக்கை' படத்தில் யுவன் இசையில் அமைந்த 'சொல்லித் தொலையேன் மா' பாடல் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு வெளியான 'அசுரன்' படத்தில் அவர் பாடிய இரண்டு பாடல்களும் வெற்றிபெற்றன. வெளியீட்டுக்குத் தயாராகிவரும் வசந்தபாலனின் 'ஜெயில்' படத்தில் அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து அவர் பாடியிருக்கும் 'காதோடு காதானேன்' பாடலும் இசை ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

கருத்துச் செறிவுமிக்க பாடல்களை எழுதியவர்

2011-ல் 'மயக்கம் என்ன படத்தில் பாடலாசிரியராகவும் தன் இன்னிங்ஸைத் தொடங்கினார் தனுஷ். அந்தப் படத்தில் அவர் எழுதிய இரண்டு பாடல்களும் பரவலான கவனம்பெற்றன. அதே ஆண்டு வெளியாகி சர்வதேச அளவில் ஹிட் அடித்த 'கொலவெறிடி' பாடலை எழுதியதும் தனுஷ்தான். தான் பாடலெழுதுவதைத் தானே வேடிக்கை செய்வதுபோல் படங்களில் பெயர் போடுகையில் பாடல்கள் 'பொயட்டு' தனுஷ் போட்டுக்கொள்வார். அவர் எழுதிய பல பாடல்கள் வெகுஜன சினிமாவின் தேவைக்கான ஜாலியான பாடல்கள்தாம். இருந்தாலும் 'பிறை தேடும் நிலவிலே' (மயக்கம் என்ன), ''போ நீ போ' (3), 'அம்மா அம்மா' (வேலையில்லா பட்டதாரி'), 'வெண்பனி மலரே' (ப.பாண்டி) எனக் கருத்துச் செறிவுமிக்க வரிகளைக் கொண்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

முதிர்ச்சியான படைப்பாளி

'ப. பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக முத்திரை பதித்தார். முதல் படத்திலேயே ஒரு முதிய இணையரின் கடந்த காலக் காதல் கதையை அழகாகவும் அழுத்தமாகவும் மிகை உணர்ச்சி பாவனைகள் இல்லாமலும் கையாண்ட வகையில் முதிர்ச்சியான படைப்பாளியாக வெளிப்பட்டார். அதே நேரம் ஒரு முதியவரை நாயகராகக் கொண்டிருந்த அந்தப் படத்தில் வெகுஜன ரசனைக்கேற்ற அம்சங்களையும் சிறப்பாகக் கலந்து அனைவரும் ரசிக்கத்தக்கப் படமாக இயக்கியிருந்தார்.

தரமான படங்களின் தயாரிப்பாளர்

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தயாரிப்பாளராக தனுஷின் சாதனை அளப்பரியது. தான் நடிக்கும் படங்கள்,. மற்ற நாயகர்களின் படங்கள், நாயகர்களே இல்லாத பரிசோதனைப் படங்கள் எனப் பல வகையான படங்களை உயர் தரத்திலும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்துடனும் தயாரித்திருக்கிறார் தனுஷ். இன்றைய முன்னணி நட்சத்திரங்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருக்கும் முக்கியமான வெற்றிப் படங்களாக அமைந்த 'எதிர்நீச்சல்', 'நானும் ரவுடிதான்' ஆகிய இரண்டு படங்களும் தனுஷ் தயாரித்தவை.

இதைத் தவிர 'காக்கா முட்டை', 'விசாரணை' போன்ற போன்ற சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்ற பரீட்சார்த்த படங்களையும் 'காலா', 'வட சென்னை' போன்ற அரசியல் முக்கியத்துவமும் கனமான உள்ளடக்கமும் நிறைந்த படங்களையும் தயாரித்துள்ளார் தனுஷ்.

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனத் தொடர்ந்து இயங்கிவருபவராகத் திகழ்கிறார் தனுஷ். அவர் அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி பெரும்புகழ் அடைய மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x