Published : 27 Jul 2020 06:16 PM
Last Updated : 27 Jul 2020 06:16 PM

நான் இயக்குநர் ஆவதற்கான விதை 'கேளடி கண்மணி': இயக்குநர் விஜய்

சென்னை

நான் இயக்குநர் ஆவதற்கான விதையை 'கேளடி கண்மணி' படம்தான் என்னுள் விதைத்ததாக நினைக்கிறேன் என்று இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்

வஸந்த் இயக்கத்தில் எஸ்.பி.பி., ராதிகா, ரமேஷ் அரவிந்த், அஞ்சு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கேளடி கண்மணி'. 1990-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 250 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் திரையிடப்பட்டது மட்டுமன்றி, தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டது.

இளையராஜாவின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதையும் தட்டிச் சென்றது. இன்று (ஜூலை 27) இந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதை முன்னிட்டு இயக்குநர் விஜய், இயக்குநர் வஸந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"வஸந்த் சார், 'கேளடி கண்மணி' 30 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நான் குழந்தையாக இருந்தபோது குட்லக் பிரிவியூ தியேட்டரில் அப்படத்தைப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு அற்புதமான படம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் என்னால் உணர முடிகிறது. படம் முடிந்தபிறகு அனைவரும் உங்களைப் பாராட்டினார்கள்.

இப்படம் இந்திய சினிமாவின் ஒரு எவர்கிரீன் படமாக இருக்கப் போகிறது என்றார்கள். அந்த வார்த்தைகள் உண்மையாகிவிட்டன. 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படம் அனைவரது மனதிலும் புதிதாக இருக்கிறது. என்னவொரு உயிரோட்டமான, இதயத்தைத் தொடும் திரைப்படம்.

நான் இயக்குநர் ஆவதற்கான விதையை 'கேளடி கண்மணி' படம்தான் என்னுள் விதைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் இப்படம் ஊக்கமாக அமைந்தது. இப்படி ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து படங்களை இயக்குங்கள், எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்".

இவ்வாறு இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x