Published : 27 Jul 2020 02:13 PM
Last Updated : 27 Jul 2020 02:13 PM

இந்தியில் யாரும் வாய்ப்பு தராததால் விரக்தி நிலைக்குச் சென்றேன்: ரசூல் பூக்குட்டி

இந்தியில் யாரும் வாய்ப்பு தராததால் விரக்தி நிலைக்குச் சென்றேன் என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான கடைசிப் படமான 'தில் பெச்சாரா', ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

'தில் பெச்சாரா' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், "நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால், என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சும் அதோடு இணைந்தது. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய செய்தியைப் பகிர்ந்து நடிகரும், இயக்குநருமான சேகர் கபூர் தனது ட்விட்டர் பதிவில், "உங்களுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா ரஹ்மான்? நீங்கள் ஆஸ்கர் விருதைப் பெற்றதுதான். ஆஸ்கர் என்பது பாலிவுட்டுக்கு கானல் நீர் போன்றது. பாலிவுட்டைவிட நீங்கள் அதிக திறமை கொண்டவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது" என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தற்போது 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி, சேகர் கபூர் ட்வீட்களைப் பகிர்ந்து கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த சேகர் கபூர், என்னிடம் அதைப்பற்றிக் கேளுங்கள். இந்தி திரைப்படங்களில் யாரும் எனக்கு வாய்ப்பு தராததால் நான் கிட்டத்தட்ட விரக்தி நிலைக்குச் சென்றுவிட்டேன். நான் ஆஸ்கர் வென்ற பிறகு மாநில மொழிப்படங்களில் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

"நீங்கள் எங்களுக்குத் தேவை இல்லை" என்று என் முகத்துக்கு நேரே சொன்ன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் எனது துறை எனக்குப் பிடிக்கும்.

சேகர் கபூர் எனக்குக் கனவு காண கற்றுக் கொடுத்தார். ஒரு கையளவு மக்கள் என்னை நம்பினார்கள் இன்னும் நம்புகிறார்கள். என்னால் எளிதாக ஹாலிவுட்டுக்கு நகர்ந்திருக்க முடியும். ஆனால், நான் அதைச் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். இந்தியாவில் நான் செய்த பணிக்குத்தான் எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆறுமுறை MPSE விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வென்றேன். இவை அனைத்துமே நான் இங்கு செய்த பணிக்காகத்தான். நமக்கு எதிராக வேலை செய்யும் ஆட்கள் எப்போதுமே இருப்பார்கள். ஆனால், எல்லாவற்றையும் விட என் மக்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

பின்னர் இதுகுறித்து அகாடமியில் இருக்கும் எனது நண்பர்களிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் ஆஸ்கர் சாபத்தைப் பற்றிச் சொன்னார்கள். இது அனைவராலும் எதிர்கொள்ளப்படும் ஒன்று. நான் அந்தக் காலகட்டத்தை ரசித்தேன். ஏனென்றால் நாம் வெற்றியின் உச்சியில், உலகின் மேலே மிதக்கும் அதே நேரம் மக்கள் நம்மை நிராகரிக்கும்போது அதுதான் நமக்கு எதார்த்தத்தை மிகப்பெரிய அளவில் புரியவைக்கும்".

இவ்வாறு ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x