Published : 25 Jul 2020 05:18 PM
Last Updated : 25 Jul 2020 05:18 PM

சினிமாவை அணு அணுவாக ரசித்தவர், நேசித்தவர் மகேந்திரன்: ரஜினி புகழாரம்

சென்னை

சினிமாவை அணு அணுவாக ரசித்தவர், நேசித்தவர் மகேந்திரன் என்று ரஜினி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர்கள் பட்டியலில் முக்கியமானவர் இயக்குநர் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்', 'ஜானி', 'நண்டு', 'கை கொடுக்கும் கை' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகராகவும் மாறி 'தெறி', 'நிமிர்', 'பேட்ட' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி காலமானார்.

இன்று (ஜூலை 25) இயக்குநர் மகேந்திரனின் 81-வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருடன் பணிபுரிந்த பலரும், நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் 'முள்ளும் மலரும்' படத்துக்கு முக்கியமான இடமுண்டு. தற்போது இயக்குநர் மகேந்திரன் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"'முள்ளும் மலரும்' படத்தில் எனது நடிப்பைப் பற்றி மக்கள் பேசுறாங்க என்றால், அதற்கு முழுக்காரணம் மகேந்திரன் சார் தான். அவர் எனது மிக மிக நெருங்கிய நண்பர். ரொம்ப வித்தியாசமான மனிதர். அவருடைய திறமையைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

பணம், பெயர், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட கவலையே படவில்லை. அதைப் பற்றி பேசியதுமில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததுமில்லை. தரமான தமிழ் படங்கள் கொடுக்க வேண்டும். தமிழ் படங்களை உலக தரத்துக்குக் கொண்டு போக வேண்டும். வித்தியாசமாக இருக்க வேண்டும் அப்படிங்கிறது மட்டுமே அவருடைய ஒரே நோக்கம். சினிமாவை அணு அணுவாக ரசித்தவர், நேசித்தவர்.

'உதிரிப்பூக்கள்' படம் நான் பார்க்கவில்லை. கரோனா சமயத்தில் தான் பார்த்தேன். படம் முடிந்தவுடன் எனக்கே தெரியாமல் எழுந்து நின்று கைதட்டிவிட்டேன். பின்பு ஒரு 10 நிமிடங்கள் அவரை நினைத்து என் கண்ணில் கண்ணீர் வந்தது. இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் போய்விட்டாரே என்று நினைத்தேன்.

என்னோட பாக்கியம் அவருடன் சமீபத்தில் 'பேட்ட' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படப்பிடிப்பின் போது காசியில் அவரோடு நிறைய நேரம் பேசினேன், கூட இருந்தேன். அதை மறக்கவே முடியாது. நம்மை விட்டு இவ்வளவு சீக்கிரம் போய்விடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. நல்ல ஆத்மா நம்மை விட்டுப் போயிருக்கிறது. இது அவர் நம்மை விட்டுப் போன இரண்டாவது வருடம். இந்த தருணத்தில் அவரை நினைத்துக் கொள்கிறேன்"

இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x