Published : 24 Jul 2020 02:48 PM
Last Updated : 24 Jul 2020 02:48 PM

விஜய் ஆண்டனி பிறந்த நாள் ஸ்பெஷல்: வெற்றிக்கொடி நாட்டிய இசை நாயகன்

சென்னை

சினிமாவில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் வெற்றிகரமாக இயங்கிவருபவர்களை உலக அளவிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ் சினிமாவில் ஒன்றுக்கு இருவர் இந்த இரண்டு துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவரும் மூத்தவருமான விஜய் ஆண்டனி இன்று (ஜூலை 24) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

புதிய வகை இசை

2005-ம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'சுக்ரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. புதிய வகையான இசையமைப்புக்காகவும் துள்ளலான பாடல்களாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் விஜய் ஆண்டனி.

அடுத்ததாக சசி இயக்கிய 'டிஷ்யூம்' படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்' என்ற காதல் மெலடி பாடல் இளைஞர்களின் தேசிய கீதமானது. தொடர்ந்து 'நான் அவனில்லை', 'காதலில் விழுந்தேன்' போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார்.

'காதலில் விழுந்தேன்' படத்தில் 'தோழியா என் காதலியா', 'உனக்கென நான் எனக்கென நீ', 'உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே' போன்ற அபாரமான காதல் மெலடி பாடல்களும் வெற்றி பெற்றன. இளைஞர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பெற்றன. அதே படத்தில் 'நாக்க முக்க' என்ற குத்தாட்டப் பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து ஏ.பி.சி என அனைத்து சென்டர்களிலும் ஹிட் அடித்தது.

நட்சத்திரங்களுக்கு வெற்றிப் பாடல்கள்

2009-ல் விஜய் நடித்த 'வேட்டைக்காரன்', 2010-ல் தனுஷ் நடித்த 'உத்தமபுத்திரன்', 2011-ல் விஷால் நடித்த 'வெடி' என முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைப்பாளரானார். 'வேட்டைக்காரன்' படத்தில் பாடல்கள் அனைத்தும் வெவ்வேறு வகைமைகளில் ரசிக்கும்படி அமைந்திருந்தன. 'கரிகாலன் காலப் போல' என்ற காதல் மெலடியும் 'ஒரு சின்னத்தாமரை' என்ற மேற்கத்திய இசைப்பாணியைக் கொண்ட காதல் பாடலும் 'புலி உறுமுது' என்ற மாஸ் பாடலும் இன்றும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக 'புலி உறுமுது' விஜய்க்கு அமைந்த மிகச் சிறந்த மாஸ் பாடல்களில் ஒன்று.

மோகன் ராஜா இயக்கிய 'வேலாயுதம்' படம் மூலம் மீண்டும் விஜய் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்தப் படத்திலும் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. 'மாயம் செய்தாயோ', என்கிற புதுமையான இசைக்கோர்ப்பைக் கொண்ட காதல் பாடலும் 'சில்லாக்ஸ்' போன்ற ஆட்டம்போடத் தூண்டும் பாடலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. ,

இவற்றுக்கிடையில் 'அங்காடித் தெரு' என்ற முக்கியமான படத்துக்கு விஜய் ஆண்டனி இரண்டு பாடல்களுக்கு இசையமைத்தார். இவற்றில் 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' அருமையான மெலடியாக அனைவரையும் ஈர்த்தது. அந்தப் படத்தின் கவன ஈர்ப்புக்கும் உதவியது.

தனித்துவம் மிக்க பாடகர்

பொதுவாக எல்லா இசையமைப்பாளர்களும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். விஜய் ஆண்டனியும் அதைச் செய்திருக்கிறார் என்பதல்ல, அவர் தான் இசையமைத்த பெரும்பாலான படங்களில் ஒரு பாடலையாவது பாடிவிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்பதே முக்கியமானது.

'சுக்ரன்' படத்திலேயே 'சாத்திக்கடி போத்திக்கடி' என்ற துள்ளலான பாடலை அதற்கேற்ற குரலில் பாடி அசத்தினார். 'டிஷ்யூம்' படத்தில் 'டைலாமோ', 'பூமிக்கு வெளிச்சமெல்லாம்' பாடல்களைப் பாடினார். இரண்டுமே பெரும் வெற்றியைப் பெற்றன. 'காதலில் விழுந்தேன்' படத்தில் 'நாக்கு முக்க' உட்பட நான்கு பாடல்களைப் பாடினார். 'வெடி' படத்தில் 'இச்சு இச்சு'; 'வேலாயுதம்' படத்தில் 'சொன்னா புரியாது', 'பிச்சைக்காரன்' படத்தில் 'நூறு சாமிகள் இருந்தாலும்' என விஜய் ஆண்டனி பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன. அவருடைய குரலில் ஒரு தனித்தன்மை இருந்தது. அதே நேரம் எல்லா வகையான பாடல்களுக்கும் பொருந்துவதாகவும் இருந்தது.

வெற்றிப் படங்களின் நாயகன்

2012-ல் வெளியான 'நான்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ஒரு நடிகராகவும் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் விஜய் ஆண்டனி. ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஜீவாவிடம் பணியாற்றிய ஜீவா ஷங்கர் இயக்குநராக அறிமுகமான அந்தப் படம் கொலையை மையமாக் கொண்ட த்ரில்லர். படம் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிபெற்றது.

பொதுவாக சினிமாவில் மற்ற துறையில் சாதித்தவர்கள் நாயகனாக நடிக்கத் தொடங்கும்போது பலரும் சற்று ஏளனமாகப் பார்ப்பார்கள். ஆனால், விஜய் ஆண்டனி முதல் படத்திலேயே அந்த ஏளனத்தைப் பொய்யாக்கிவிட்டார். முதல் பட வெற்றி அதிர்ஷ்டத்தால் விளைந்தது என்று நினைத்தவர்கள் வாயை அடைக்கும் விதமாக இரண்டாம் படமான 'சலீம்' வெற்றியடைந்தது.

வசூலைக் குவித்த 'பிச்சைக்காரன்'

சசி இயக்கத்தில் அவர் நடித்த 'பிச்சைக்காரன்' தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. நீண்ட காலத்துக்குப் பிறகு தாய்-மகன் பாசப் பிணைப்புக்கு முக்கியத்துவம் அளித்திருந்த அந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் தெலுங்கு மொழிமாற்றப் பதிப்பான 'புஜ்ஜிகாடு' தெலுங்கு பேசும் மாநிலங்களில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது

அடுத்ததாக 'சைத்தான்' என்ற சைக்கோ த்ரில்லர் படம் 'யமன்' என்ற அரசியல் த்ரில்லர் படம்., 'காளி' என்ற பீரியட் தன்மையை உள்ளடக்கிய படம். 'திமிரு பிடிச்சவன்' என்ற போலீஸ் மசாலா படம் என விதவிதமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்கிறார் விஜய் ஆண்டனி.

தற்போது 'மூடர் கூடம்' நவீன் இயக்கும் 'அக்னிச் சிறகுகள்' என்னும் படத்தில் நடித்துவருகிறார். அதோடு தேசிய விருது பெற்ற 'பாரம்' திரைப்படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் 2' படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கப் போகிறார்.

மெலடியும் பெப்பியும்

ஒரு இசையமைப்பாளராக அனைத்து வகையான பாடல்களையும் சிறப்பாகக் கொடுக்கும் திறமையைப் பெற்றிருந்தார் விஜய் ஆண்டனி. குறிப்பாக மெலடி பாடல்களும் பெப்பி சாங் எனப்படும் துள்ளலான ஆட்டம் போடவைக்கும் பாடல்களும் அவருடைய தனிச் சிறப்புகளாக இருந்தன. அவருடைய பாடல்கள் இசைக்கோர்ப்பு, கருவிகளின் பயன்பாடு, ஒலிகள், குரல், பாடப்படும் விதம் என அனைத்தும் வித்தியாசமாக அவருடைய தனி முத்திரையுடன் இருந்தன. நடிக்கத் தொடங்கிய பின், தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பது என்ற முடிவை அறிவித்து நடிப்பில் அதிக கவனம் செலுத்தப் போவதாகக் கூறி அதைப் பின்பற்றி வருகிறார்.

நல்ல கதைகளைத் தேடும் நடிகன்

ஒரு நடிகராக தனக்கென்று எந்த இமேஜையும் வைத்துக்கொள்ளாமல் பஞ்ச் வசனம், குத்தாட்டம், மாஸ் காட்சிகள் என்று தன்னுடைய நாயகத்தன்மையை வலிந்து திணிக்க முயலாமல் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். கதைதான் முதன்மை நாயகன் என்ற ஆழமான புரிதலை வெளிப்படுத்துகிறார். வெற்றி, தோல்விகளைக் கடந்து ஒரு நடிகராகவும் விஜய் ஆண்டனி ரசிகர்களின் மரியாதையைப் பெற்றிருப்பதற்கு இதுவே காரணம்.

இசை, நடிப்பு, பாடல் என்ற மூன்று துறைகளிலும் வெற்றி பெற்றிருக்கும் விஜய் ஆண்டனி வரும் ஆண்டுகளில் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x