Last Updated : 24 Jul, 2020 10:58 AM

 

Published : 24 Jul 2020 10:58 AM
Last Updated : 24 Jul 2020 10:58 AM

ஸ்ரீவித்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: கண்களால் பேசிய அபூர்வ நடிகை 

இன்று நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்த நாள். அவரைப் பற்றிய சில நினைவுகளை அசைபோடுவோமா? சில முகங்களை வெறுக்க நினைத்தாலும் வெறுக்க இயலாது அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்துகிடந்தது.

ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா கொடுத்துவைத்தவர். அவரது அழகான இருவிழிகள் உணர்வுகளின் ஊற்றுக்கண்கள். இதயத்தில் ததும்பும் மெல்லிய உணர்வை இதழ் சொல்லத் தயங்கும்போது அவரது கண்கள் அந்த வேலையைச் செம்மையாகச் செய்யும். சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கமான சம்பவங்களால் உருவான, இதழ்களால் சொல்ல முடியாத எத்தனையோ சோகங்களை அந்த இரு கண்களுக்குள் பதுக்கிக்கொண்டு தனது நடிப்பைக் காண வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்தக் கண்களின் வழியே அள்ளித்தந்த குறும்பு, காதல், தோழமை, ஏக்கம், சோகம் போன்ற பல்வேறு உணர்வுகளை வேறிரு கண்களால் தந்திருக்க முடியுமா?

எல்லோரையும் கவரும் அந்தக் கண்களைப் பற்றி, மிகப் பெரிய நடிகர் ஒருவர், ’ஸ்ரீவித்யாவா அவருக்கு ஹெட் லைட் போல் ரெண்டு கண்ணுதானே உண்டு’ எனக் கூறி இவருடன் நடிக்க மறுத்திருக்கிறார். அதே நடிகர் ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் நூறாம் நாள் விழாவில் வந்து ஸ்ரீவித்யாவின் கண்களின் மகத்துவத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். நேருக்கு நேராக அவரிடமே ஸ்ரீவித்யா, என் கண்களைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அந்த நடிகர் ஏதோதோ சொல்லி சமாளித்து நழுவிவிட்டாராம். ஸ்ரீவித்யா தனது நேர்காணல் ஒன்றில் இதைக் கூறியிருக்கிறார்.

ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இசை ஞானத்துடன் இருந்தார். அதற்குக் காரணம் அவருடைய தாய் எம்.எல். வசந்த குமாரியும் தாத்தா அய்யாசுவாமியும். இருவருமே இசைக் கலைஞர்கள். வசந்தகுமாரி மிக இளைய வயதில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர். எனினும், ஸ்ரீவித்யா இசை கற்றுக்கொண்டது பி.கிருஷ்ணமூர்த்தியிடம். பதினோரு வயதிலேயே இசையில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருடைய தந்தையான விகடம் கிருஷ்ணமூர்த்தி திரைப்பட நகைச்சுவை நடிகர். அரசியல் ஆர்வம் கொண்டவர். காங்கிரஸிலும் பின்னர் சுதந்திரா கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். நேரு, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் போல் மிமிக்ரி செய்வதில் வல்லவர் என்று தந்தையைப் பற்றி ஸ்ரீவித்யா கூறியிருக்கிறார்.

ஏறக்குறைய 800 படங்களிலும் 25 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். என்றபோதும் அவர் சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற பேதம் பார்த்ததில்லை. ரஜினி அறிமுகமான ‘அபூர்வ ராகங்க’ளில் அவருக்கு மனைவியாக நடித்த ஸ்ரீவித்யா 1991-ல் ‘தளபதி’ படத்தில் தன்னைவிட மூன்று வயது அதிகமான ரஜினிக்குத் தாயாக நடிக்கத் தயங்கவே இல்லை. அதே போல் சினிமா என்றோ தொலைக்காட்சி என்றோ வேறுபாடு காட்டியதில்லை. இயக்குநர்கள் என்ன கேட்கிறார்களோ அதை அப்படியே நடித்துத் தருவது மட்டுமே தனது பணி என்று கருதி கருமமே கண்ணாக இருந்திருக்கிறார். ‘பல நேரம் என்ன சாப்பிட்டேன் என்பதுகூட நினைவில் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். “புகழுக்காகவோ விருதுக்காகவோ பணத்துக்காகவோ இவ்வளவு கஷ்டங்களைப் பட்டு நான் நடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் யார் என்பதை நிரூபிக்க விரும்பினேன். அதனால் இத்தனை சிரமங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து நடித்தேன்” என்று தனது நடிப்பார்வத்துக்கு அவர் காரணம் கூறுகிறார்.

இயக்குநர் ஒருவர் தனது படத்தில் நடிக்க அழைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடத்தின் அதன் பின்னர் அவரைப் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார். அதே இயக்குநர் பின்னர் ஸ்ரீவித்யாவிடம் வந்து, ’தான் செய்தது தவறு’ என்று கூறி மன்னிப்பு கேட்ட சம்பவத்தையும் அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு நடித்தும் கொடுத்திருக்கிறார். அநேகப் பிரச்சினைகள் அவரைச் சூழந்தபோதும் பாறைபோல் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு கடவுள் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு காலம் கடத்தியிருக்கிறார். ஒரு நிழல் போல் தன்னைக் கடவுள் பின் தொடர்வதான நம்பிக்கையில் எல்லாத் துயரங்களையும் கடந்தவர் ஸ்ரீவித்யா.

கடவுள்மீது இவர் நம்பிக்கை வைத்திருந்தபோதும், கடவுள் இவருக்குத் தனிப்பட்ட கருணை எதையும் காட்டியதாகத் தெரியவில்லை. கமல்ஹாசனுடனான காதல் தோல்வியில் முடிந்தது. அந்த ஏமாற்றத்தை மறக்க அடுத்த காதல் அவருக்குக் கைகொடுக்கும் என நம்பினார். மலையாளப் படமான ‘தீக்கன’லில் நடிக்கும்போது ஏற்பட்ட பரிச்சயத்தால் அதில் துணை இயக்குநராகப் பணியாற்றிய ஜார்ஜ் தாமஸை மதம் மாறித் திருமணம் புரிந்துகொண்டார். எல்லோரும் தடுத்தும் தனக்கு அது நன்மை பயக்கும் எனக் கருதினார். ஆனால், காதலனும் காலமும் அவரை ஏமாற்றியது. அதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம் கடவுளும் கையைவிரித்துவிட்டார் அதுதான் பரிதாபகரமானது. அதன் பின்னரும் காதலும் துயரமும் அவர்மீது பேரார்வம் கொண்டு பின் தொடர்ந்தன. இயக்குநர் பரதனுக்கும் அவருக்கும் காதல் அரும்பியது. மகிழ்ச்சி தர வேண்டிய காதல்கள் அவரது மன நிம்மதியைப் பறித்தன. ஆனாலும், அவர் எதுபற்றிய கவலையும் கொள்ளாமல் இயங்கிவந்திருக்கிறார். தன் தாய் மறைந்த பத்து நாட்களில் அவர் மலையாளப் படமொன்றில் நடித்தார். ஒரு நடிகருக்குத் தனிப்பட்ட முறையில் எந்த சோகம், வருத்தம் இருந்தலும் கேமராவுக்கு முன்னே வரும் போது அது மறந்துவிடும். அதுதான் கேமராவின் மகத்துவம் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீவித்யா.

தமிழில் எம்.ஜி.ஆருடன் ரகசிய போலீஸ் 115-ல் நடித்திருக்க வேண்டியது. ஆனால், சிறு பெண்ணாகத் தெரிகிறார் என்று அந்த வாய்ப்புத் தட்டிப்போனது. 1967-ல் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘திருவருட்செல்வர்’ படத்தில் உமையவளாக வந்து ஒரு நடனம் ஆடுவார். அதுதான் அவரது அறிமுகப்படம். பின்னர், 'நூற்றுக்குநூறு', 'ஆறு புஷ்பங்கள்', 'இமயம்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'மைதிலி என்னைக் காதலி', 'மனிதன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'கற்பூர முல்லை', 'நம்மவர்', 'காதலுக்கு மரியாதை' எனப் பல படங்களில் தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனாலும், தமிழ்ப் படங்களைவிட அவரது நடிப்புக்கு மலையாளப் படங்களே பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தன. மலையாளத்தில் முதலில் சத்யனுடன் ’சட்டாம்பிகா’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், ‘செண்டா’ படத்து சுமதி என்னும் கதாபாத்திரம் தனக்குப் பிடித்த ஒன்று என்று ஸ்ரீவித்யா குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். எல்லா மொழிகளிலும் சொந்தக் குரலிலேயே பேசி நடித்துள்ளார். ’வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியோ பெரிய மகிழ்ச்சியோ ஏற்பட்டதில்லை. வாழ்க்கையில் ஆச்சரியமான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை’ என்று கூறும் ஸ்ரீவித்யா திரைப்படத் துறை ஆணாதிக்கம் மிகுந்தது என்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால், அதற்காகக் குறைப்பட்டுக்கொள்ளவில்லை. ’எல்லோரையும் நேசியுங்கள், யாருக்கும் துரோகம் இழைக்காதீர்கள் இயன்றவரை உண்மையைப் பேசுங்கள் முடியாதபோது அமைதி காத்திடுங்கள்’ என்று அழகாகச் சொல்கிறார் ஸ்ரீவித்யா ஒரு நேர்காணலில். அப்படியே அவர் வாழ்ந்தும் மறைந்தார்.

புற்றுநோய் காரணமாக 2006 அக்டோபர் 19 அன்று அவர் உயிர் பிரிந்தது. கேரளம் அவரை அரசு மரியாதையுடன் தகனம் செய்தது. அவரது துயரங்களிலிருந்து மரணம் அவரை விடுவித்தது ஆனால், தனது பண்பட்ட நடிப்பின் வழியே ரசிகர்கள் மனங்களில் அவர் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x