Published : 23 Jul 2020 05:53 PM
Last Updated : 23 Jul 2020 05:53 PM

சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: தனித்துத் தெரியக் காரணம் என்ன? 

சூர்யா என்றாலே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏ சென்டர் முதல் சி சென்டர் வரை உலக சினிமா ஆர்வலர்கள் முதல் தமிழ்ப் படங்களைத் தவிர வேறெதையும் பார்த்திராத ரசிகர்கள் வரை விருதுப் படங்களைத் தேடிச் சென்று பார்ப்பவர்கள் முதல் தரலோக்கல் படங்களைப் பார்ப்பவர்கள் வரை எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு அன்பும் மரியாதையும் இருக்கிறது. இது சாதாரணமாகக் கிடைத்ததல்ல. 23 ஆண்டு தொடர் போராட்டம், கடின உழைப்பு, தரமான படங்களில் நடிப்பதற்கான உந்துதல், வெற்றிபெற்றுவிட்ட பிறகும் மாறிடாத பணிவு, சமூகத்தின் மீதான அளவுகடந்த கனிவு, அவற்றை வெளிப்படுத்தும் அறச் செயல்பாடுகள் எனப் பலவற்றை அளித்து இந்த நிலைக்கு சூர்யா தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த தகுதியைத் தக்கவைக்க தொடர்ந்து தீவிரமாக உழைக்கிறார். இவை தவிர ஒரு கலைஞராகவும் ஆளுமையாகவும் அவரிடமிருந்து வெளிப்படும் தனிப்பெரும் குணாதிசயங்கள் அவருக்கு ரசிகர்களைத் தாண்டி பொது மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

உழைப்பால் கிடைத்த அங்கீகாரம்

புகழ்பெற்ற நடிகரான சிவகுமாரின் மகனாகப் பிறந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தைப் போராடி உழைத்துப் பெற்றிருக்கிறார் சூர்யா. தொடக்க ஆண்டுகள் போராட்டம் மிக்கவையாக இருந்தன. படிப்படியாக உழைத்து குறைகளைக் கடந்து நிறைகளை அதிகரித்துப் பல வகையான படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர் சூர்யா.

தரத்துக்கான மெனக்கெடல்

வெகுஜனச் சட்டகத்துக்குள் தரமான படங்கள் மாறுபட்ட கதாபாத்திரங்கள், சோதனை முயற்சியான கதைக்களங்கள் என ரசிகர்களின் சிந்தனையையும் தரமான ரசனையையும் மதிக்கும் வகையிலான படங்களைக் கொடுக்க தொடர்ந்து மெனக்கெடுபவர் சூர்யா. 'நந்தா', 'காக்க காக்க', 'பிதாமகன்', 'ஆயுத எழுத்து', 'கஜினி', 'வாரணம் ஆயிரம்', 'ஏழாம் அறிவு', '24' எனப் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

வியக்கவைக்கும் மெனக்கெடல்

தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்த உடல்ரீதியாகவும் உள்ளத்தாலும் உருமாற சூர்யா அளிக்கும் மெனக்கெடல் வியக்கவைக்கும். 30 வயதுகளில் 60 வயது முதியவராக 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடித்தபோது அனைவரும் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தார். அதே படத்தில் ராணுவ வீரராக நடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்தார். இது ஒரு சோறு பதம் மட்டுமே. கட்டுக்கோப்பான உடலமைப்பு, சிக்ஸ்பேக் வைப்பது, கெட்டெப் சேஞ்ச் ஆகியவற்றில் புதிய ட்ரெண்ட்களை உருவாக்கியவர் சூர்யா என்றால் மிகையில்லை. அனைத்து இளம் நடிகர்களுக்கும் இதில் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

இயக்குநர்களின் நடிகர்

23 ஆண்டு திரைவாழ்வில் பல இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறார் சூர்யா. மணிரத்னம், வசந்த், விக்ரமன், பாலா, அமீர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், ஹரி, கே.வி.ஆனந்த், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ் என முக்கியமான இயக்குநர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவர்களில் சூர்யாவுடன் அதிகபட்சமாக ஐந்து படங்களில் பணியாற்றியுள்ளார். கே.வி.ஆனந்துடன் மூன்று படங்களிலும், வசந்த், பாலா, கெளதம் மேனனுடன் தலா இரண்டு படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரம் குமார், விக்னேஷ் சிவன் போன்ற இளம் இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுதா கொங்கராவுடன் 'சூரரைப் போற்று' படத்தில் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் படத்தில் நட்சத்திர நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.

குடும்பங்களின் நாயகன்

அனைத்து வகைமைகளைச் சேர்ந்த படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களிலும் நடித்தாலும் சூர்யா தன் படங்களில் அளவு கடந்த வன்முறை, ஆபாசம், வக்கிரம் ஆகியவை இருக்காமல் பார்த்துக்கொள்கிறார். ஒரு சில படங்களில் அவை தலைதூக்கினாலும் அது குறித்து விமர்சனங்களை ஏற்று அடுத்த படங்களில் அந்தத் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்வார். ஒரு குடும்பத்தில் அனைத்து வயதினருக்கும் உரிய படங்களிலேயே நடித்திருக்கிறார்.

மல்ட்டிஸ்டாரர் நடிகர்

சூர்யாவின் முதல் படமான 'நேருக்கு நேர்' இரட்டை நாயகர்கள் படம். அதில் விஜய்யும் நடித்திருந்தார். அதற்கடுத்து விஜயகாந்துடன் 'பெரியண்ணா' மீண்டும் விஜய்யுடன் 'ப்ரண்ட்ஸ்', விக்ரமுடன் 'பிதாமகன்' இப்போது மோகன்லால், ஆர்யாவுடன் 'காப்பான்' என தமிழில் அதிக மல்டிஸ்டாரர் படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் சூர்யாதான். அதேபோல் 'குசேலன்', 'அவன் இவன்', 'மன்மதன் அம்பு', 'கோ', 'சென்னையில் ஒரு நாள்', 'கடைக்குட்டி சிங்கம்' என மற்ற நடிகர்களின் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் கெஸ்ட் ரோல்களிலும் அதிகமாக நடித்த நட்சத்திரம் சூர்யாதான்.

திரைக்கு வெளியில் தெரிந்த நடிகர்

திரைப்பட நட்சத்திரங்கள் திரையைத் தாண்டி அதிகம் தலைகாட்டக் கூடாது என்ற விதியை உடைத்தவர் சூர்யா. அதிகமாக பொது நிகழ்ச்சிகளிலும், கலை விழாக்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வினாடி-வினா போட்டி நிகழ்ச்சியின் நெறியாளராகச் சிறப்பாக பங்கேற்றார். அதன் மூலமாகவும் வீடுகளிலும் மக்களின் உள்ளங்களிலும் நுழைந்தார்.

தரமான தயாரிப்பாளர்

2015-ல் 2டி என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சூர்யா. தன் மனைவியான ஜோதிகாவை கதையின் நாயகியாக்கி '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'ஜாக்பாட்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களைத் தயாரித்தார். அதன் மூலம் ஜோதிகா என்னும் திறமை வாய்ந்த நடிகையின் மறு அறிமுகமும் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்ஸும் சாத்தியமானது. இதைத் தவிர 'பசங்க 2', '24', 'கடைக்குட்டி சிங்கம்' 'உறியடி 2' என பல வகையான தரமான படங்களைத் தயாரித்திருக்கிறார். 'கடுகு', 'சில்லுக் கருப்பட்டி' போன்ற தரமான சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். இப்படியாக ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களைக் கொடுக்கும் முனைப்புடன் தொடர்ந்து இயங்கிவருகிறார் சூர்யா.

சமூகநலப் பணிகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உட்பட பல சமூகநல நோக்கம் கொண்ட திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பவரான சூர்யா 2006இல் அகரம் அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் இன்றுவரை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி பெற்று முன்னேறியிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளை இன்னும் பல சமூகநலத் திட்டங்களுக்கு தன் சிறகை விரித்திருக்கிறது. அதோடு கல்வி உள்ளிட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் துணிச்சலாகக் குரல்கொடுப்பவராகவும் இருக்கிறார் சூர்யா. மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக்கொள்கையை விமர்சித்து அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இந்து தமிழ் உள்ளிட்ட நாளிதழ்களில் சமூகப் பிரச்சினைகள் குறித்த நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

- நந்தன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x