ஹரி இயக்கத்தில் அருண் விஜய்: பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணி

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்: பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணி
Updated on
1 min read

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்யின் சகோதரி ப்ரீதா விஜயகுமாரின் கணவர்தான் ஹரி. தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஹரியின் படத்தில் இதுவரை அருண் விஜய் நடித்ததில்லை. ஹரி - அருண் விஜய் இருவருமே அவ்வப்போது இணைந்து படம் பண்ணுவது தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள்.

தற்போது, இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் நெருக்கமானவர்கள். சூர்யா இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தை இயக்கவுள்ளார் ஹரி. இதற்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

'அருவா' படத்தை முடித்துவிட்டு, ஹரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருப்பதாகவும், 'அருவா' படத்தின் பணிகள் எல்லாம் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்கள்.

'அக்னிச் சிறகுகள்', 'சினம்', 'பாக்ஸர்', 'அறிவழகன் இயக்கி வரும் படம்' மற்றும் 'மிஷ்கின் இயக்கவுள்ள படம்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். இந்தப் படங்களை முடித்துவிட்டு ஹரி இயக்கவுள்ள படத்துக்கு அருண் விஜய் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in