Published : 18 Jul 2020 17:33 pm

Updated : 18 Jul 2020 17:39 pm

 

Published : 18 Jul 2020 05:33 PM
Last Updated : 18 Jul 2020 05:39 PM

உடல் எடையைக் குறைத்தது எப்படி? - இசையமைப்பாளர் சைமன் கே.கிங்

simon-k-king-reduces-his-weight

சென்னை

உடல் எடையைக் குறைத்தது எப்படி என்று இசையமைப்பாளர் சைமன் கே.கிங் தெரிவித்துள்ளார்.

'ஐந்து ஐந்து ஐந்து' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சைமன் கே.கிங். அதற்குப் பிறகு 'சத்யா', 'கொலைகாரன்', 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்', 'ராஜபீமா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிபிராஜ் நடித்து வரும் 'கபடதாரி' படத்துக்குத் தற்போது இசையமைத்து வருகிறார்.


தற்போது கரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை 24 கிலோ அளவுக்கு குறைத்து ஆச்சரியத்தை அளித்தார் சைமன் கே.கிங். உடல் எடையைக் குறைத்து அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. இது தொடர்பாக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தனது உடல் எடையைக் குறைத்தது எப்படி என்று சைமன் கே.கிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மூன்று கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என்ற சிறிய இலக்குடன்தான் ஆரம்பித்தேன். மூன்று கிலோ எடையைக் குறைத்தது மேலும் அதைத் தொடர எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது. இந்த எடைக் குறைப்பு நடவடிக்கை என்பதுகூட எதிர்பாராமல் செய்த திடீர் முடிவுதான்.

இந்த ஊரடங்கு, என்னை நானே உருமாற்றிக் கொள்ள எனக்கு வரமாக அமைந்ததுடன் இந்த சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற உதவியாகவும் இருந்தது. உண்மையில் சொல்லப்போனால், ஓய்வின்றிப் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஆரோக்கிய வாழ்வு முறை குறித்து நான் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

நண்பர்கள் பலரும் எப்படி இந்த அளவுக்கு எடையைக் குறைத்தீர்கள் என்று கேட்கின்றனர். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இந்த முழு ஊரடங்கின்போது, உணவு விடுதிகளும் உணவை டெலிவரி செய்யும் சேவைகளும் இல்லாமல் இருந்த காரணத்தால் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

வீட்டில் சமைக்கப்படும் நமது பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்தேன். உணவு வகைகளை வீட்டுக்கே கொண்டுவந்து தரும் செயலிகள் அனைத்தையும் எனது கைப்பேசியிலிருந்து உடனடியாக அகற்றினேன். அதுவரை அதற்கு நான் அடிமைப்பட்டிருந்தேன் என்றுதான் கூற வேண்டும்.

விரும்பிச் சாப்பிட்டு வந்த ஆடம்பர மற்றும் குப்பை உணவுகளைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே அவ்வப்போது புதிதாகத் தயாரிக்கும், உடலுக்குத் தகுந்த உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதுடன் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

உடற்பயிற்சி கூட பயிற்சியாளர்கள் என்னை உற்சாகப்படுத்திச் சொல்லிக் கொடுத்தாலும் எனக்கு அங்கு செல்வதில் எப்போதும் ஒரு தயக்கம் இருந்தது. நல்ல உடற்கட்டுடன் பலர் இருக்கும் இடத்தில், தண்ணீரைவிட்டு வெளிவந்த மீன் தத்தளிப்பதைப் போல் நானும் ஒருவித தவிப்புடன்தான் இருப்பேன். பிறர் என் தோற்றத்தைப் பார்த்துக் கேலி பேசுவார்களோ என்ற எண்ணம் எனக்குள் ஓடும். ஆனால் உண்மையில் என்னைப் பற்றி நினைக்காமல் அவரவர் தங்கள் வேலையைப் பார்த்தபடிதான் இருப்பார்கள்.

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டிருந்த காரணத்தால், எனது நண்பரும் நெடுந்தூர ஓட்டப் பந்தயங்களுக்குப் பயிற்சியளிப்பவருமான ராம்நாத் மூலம் நான் சில பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். வாரத்துக்கு மூன்று நாட்கள் அதி தீவிர HIIT எனப்படும் (high-intensity interval training) இடைவெளிப் பயிற்சியும், இரண்டு நாட்களுக்கு மிதமான மார்பு இயக்கப் பயிற்சியும் செய்தேன்.

பிரத்யேகமாக எனக்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள், பயிற்சியாளரின் நேரடியான மேற்பார்வையிலும், ஆன்லைன் மூலமாகவும் தொடர்ந்து நடைபெற்றது. கடினமாகப் பயிற்சி எடுத்தல், ஓய்வெடுத்தால் மீண்டும் கடினமாகப் பயிற்சி எடுத்தல் இவைதான் பயிற்சியின் எளிய விதிகள்.

இதற்காக ஆடம்பரமான உடற்பயிற்சிக்கூடமோ, சாதனங்களோ தேவையில்லை. ஒரு சாதாரண இயக்கத்தின் மூலம் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான். வேகமாக சைக்கிள் ஓட்டுவது, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்குவது போன்றவையெல்லாம்கூட தீவிரமான HIIT (high-intensity interval training) வகை பயிற்சியைச் சேர்ந்ததுதான்".

இவ்வாறு சைமன் கே.கிங் தெரிவித்துள்ளார்.

'கபடதாரி' படத்தைத் தொடர்ந்து, 'கொலைகாரன்' படத்தை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸின் பெயரிடப்படாத படத்தில் பணியாற்றவிருக்கிறார் சைமன் கே.கிங்.

தவறவிடாதீர்!


சைமன் கே.கிங்இசையமைப்பாளர் சைமன் கே.கிங்சைமன் கே.கிங் உடல் எடைக் குறைப்புசைமன் கே.கிங் அறிக்கைசைமன் கே.கிங் பேட்டிசைமன் கே.கிங் தகவல்நண்பர்கள் பாராட்டுSimon k.kingSimon k.king interviewOne minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author