Published : 17 Jul 2020 09:15 PM
Last Updated : 17 Jul 2020 09:15 PM

வாரிசுகளுக்கு வாய்ப்பு என்பது முட்டாள்தனமான வாதம்: இயக்குநர் பால்கியின் கருத்தால் சர்ச்சை

வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு தொடர்பாக இயக்குநர் பால்கி தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சையாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, வாரிசு அரசியல் தொடர்பாக பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான பால்கி அளித்துள்ள பேட்டி சர்ச்சையாகியுள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக இயக்குநர் பால்கி கூறியிருப்பதாவது:

"வாரிசுகளுக்கு வாய்ப்பு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மகேந்திரா, அம்பானி, பஜாஜ் குடும்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அந்த வியாபாரத்தை அவர்களின் தந்தையிடமிருந்து பெற்றார்கள். முகேஷ் அம்பானி இந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று யாராவது சொல்கிறார்களா?

சமூகத்தின் எல்லா தளத்திலும் இது நடக்கும். ஒரு கார் ஓட்டுநரோ, காய்கறி விற்பவரோ கூட அவர்களின் தொழிலை தங்கள் குழந்தைகளிடம் ஒப்படைக்கிறார்கள். எனவே வாரிசுகளுக்கு வாய்ப்பு என்று பேசுவது முட்டாள்தனமான வாதம். நாம் ஒரு சுதந்திரமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கேட்கப்பட வேண்டிய கேள்வி, அப்படி வரும் வாரிசுகளுக்கு மற்றவர்களை விட சாதகம் அதிகமாக இருக்கிறதா, அது நியாயமற்ற முறையில் இருக்கிறதா என்பதே. இதில் சாதக பாதகங்கள் இருக்கின்றன. ஆம். ஆனால், நான் ஒரு எளிய கேள்வி கேட்கிறேன், அலியா பட், ரன்பீர் கபூரை விடச் சிறந்த நடிகர்களை எனக்குக் காட்டுங்கள், நாம் வாதிடலாம்.

மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்களான இவர்களை (வாரிசு அரசியலை) வைத்துப் பேசுவது நியாயமில்லை. திறமையற்ற நடிகர்களை ரசிகர்களுக்குப் பிடிக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில், ரசிகர்களுக்கும் கூட நட்சத்திர வாரிசுகளைத் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.

அது ஒருவருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு மட்டுமே. ஆனால் அதன் பின் அவர்கள் தாங்களாகத்தான் தப்பிப் பிழைக்க வேண்டும். வெளியிலிருந்து வருபவர் துறைக்குள் நுழைவது கடினம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் திறமை தான் வாய்ப்பை பெற்றுத்தரும்"

இவ்வாறு இயக்குநர் பால்கி தெரிவித்துள்ளார்.

பால்கியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிடைக்கப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x