Last Updated : 17 Jul, 2020 10:06 AM

 

Published : 17 Jul 2020 10:06 AM
Last Updated : 17 Jul 2020 10:06 AM

காதலுக்குத் தனி மரியாதை தந்த இயக்குநர் இமயம்

திரையில் எழும்பும் கும்பிட்ட கைகளுடன் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஒலிக்கும்போதே திரையரங்குகளில் கைதட்டல்கள் தொடங்கும்.

அது அடங்க சில நிமிடங்களாகும். நடிகர்கள் பெற்றுவந்த அந்தக் கைதட்டலை ஓர் இயக்குநருக்கான கைதட்டலாக மாற்றிய அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரரான இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று பிறந்தநாள். பெரும்பாலான தமிழர்களைப் போலவே பாரதிராஜாவுக்கும் இரண்டு பிறந்தநாள்கள் உண்டு. ஒன்று கல்விச் சான்றிதழ்படி, அதுதான் 1941 ஜூலை 17. ஆனால், உண்மையில் அவர் பிறந்தது 1942 ஆகஸ்ட் 23. இதை பாரதிராஜாவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

என் இனிய தமிழ் மக்களே என்பது ஒரு குறுகிய வட்டம் அல்ல அது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியது என்று கூறும் பாரதிராஜாவுக்கு அப்பா இட்ட பெயர் சின்னசாமி. அம்மா அவரைப் பால் பாண்டி என்பாராம். பிறகெப்படி பாரதிராஜா ஆனார்? அவருடைய தங்கையின் பெயர் பாரதி சகோதரருடைய பெயர் ஜெயராஜ். இவற்றிலிருந்து அவர் உருவாக்கிக்கொண்ட பெயரே பாரதிராஜாவாம்.

பாரதிராஜா மூன்றாம் வகுப்புப் படித்தபோது அவருடைய ஆசிரியர் அவரைக் குறத்தி வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ஐந்தாம் வகுப்புப் படித்தபோது மாறுவேடப் போட்டியில் பெண் வேடமிட்டுப் பரிசு (சோப்பு டப்பா) வென்றிருக்கிறார். ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது, அவருடைய தமிழாசிரியர் ராமலிங்கம் என்பவரின் ஊக்கத்தால் பள்ளியில் தமிழாசிரியர் எழுதிய தமிழ்ச்செல்வம் என்னும் நாடகத்தை ஏற்ற இறக்கமாகப் பேசிக் காட்டியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பள்ளி விழாவில் நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த நாடகத்துக்காகச் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் போன்ற பெருமையுடன் 5 ரூபாய் பரிசையும் பெற்றிருக்கிறார். அன்று விழுந்த அந்தச் சிறிய புள்ளி விஸ்வரூபமாக வளர்ந்து நமக்கு பாரதிராஜா என்னும் கலைஞனைக் கொடுத்திருக்கிறது.

அப்பாவின் பையிலிருந்து நாலணா திருடி ‘பூலோகரம்பை’ படம் பார்த்து வீட்டில் அடி, உதை வாங்கியிருக்கிறார் பாரதிராஜா. ஐம்பதுகளின் தொடக்கத்தில் வெளியான ’பராசக்தி’, ’மனோகரா’ போன்ற படங்களில் எழுதப்பட்ட மு.கருணாநிதியின் வசனங்களும் சிவாஜி கணேசனின் நடிப்பும் அவரைப் பாதித்துள்ளன.

அத்தகைய படங்களின் வசனங்களைப் பேசியே பொழுதைக் கழித்திருக்கிறார். பாரதிராஜாவுக்குச் சிறுவயதில் ஓவியம் வரைவதிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது; அரசியல் ஆர்வம் இருந்திருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு நடிகனாகும் ஆசையைத் தந்திருக்கிறது. நடிகனாகும் ஆசையில்தான் பாரதிராஜா சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால், இங்கே ஏற்பட்ட அனுபவங்கள் அவரை இயக்குநராக மாற்றிவிட்டன. அவர் நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’கூட அவருக்கு மோசமான அனுபவமே என்கிறார். அதை நினைவுபடுத்தக்கூட பாரதிராஜா விரும்புவதில்லை.

தமிழ்த் திரையில் ஒரு டிரெண்ட் செட்டர் என்ற பெயரை வாங்கிக்கொடுத்த ‘16 வயதினிலே’ படம் உருவான கதையே ருசிகரமானதாக உள்ளது. பாபுநந்தன் கோடு இயக்கிய தாகம் படத்தில் பாரதிராஜா உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் அவர், கிராமத்துப் பெண்ணின் அபிலாஷைகளை வைத்து ஒரு லட்சம் ரூபாய் செலவில் படமொன்று எடுக்கலாம் என மயில் என்ற கதையை எழுதியுள்ளார். ரோஜா ரமணி, நாகேஷ் ஆகியோரை நடிக்கவைத்து கறுப்பு வெள்ளைப் படமாக எடுக்கலாம் என்று கருதி, அரசுக்குச் சொந்தமான ஃபிலிம் ஃபினான்ஸ் கார்ப்பரேஷனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அவர்கள் அந்தத் திரைக்கதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி அரசால் மறுக்கப்பட்ட திரைக்கதையே பின்னர் அவர் பல அரசு விருதுகள் பெறக் காரணமானது என்பது நகைமுரணே.

அடுத்து தனக்குக் கிடைத்த தயாரிப்பாளரிடம் சிகப்பு ரோஜாக்கள் கதையையும், ஒரு இசைக்கலைஞர் பற்றிய கதையையும் பாரதிராஜா கூற, அவற்றை எல்லாம் விரும்பாத அவர், மயில் கதையைப் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது எளிய கதை. கலைத்தன்மையான படமாகும் தன்மை கொண்டது. அது வணிகரீதியான படமாக வராது. ஆகவே, அதில் பாடல்களை எல்லாம் சேர்த்திருக்கிறார் பாரதிராஜா. அப்படி உருவான 16 வயதினிலே 32 ரோல்களில் 30 நாட்களில் ஷூட் பண்ணப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் என்றும் 16 என்று சொல்லத்தக்கப் படமாக அது இன்றும் இருக்கிறது.

கிராமத்து வாழ்க்கையை அணுவணுவாக ரசித்துப் பார்த்து வந்த பாரதிராஜாவுக்கு அந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இயல்பான மனிதர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாவோ அழகான மனிதர்களையே பாத்திரங்களாகப் படைக்கும் போக்கைக் கொண்டிருந்தது. அதை முதலில் உடைக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதால் தான் நமக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைத்தன. அடுத்ததாக ஸ்டுடியோவில் அடைபட்ட திரைப்படத்தைப் பரந்த வெளிக்குக் கொண்டுவந்து சேர்த்தார்.

டெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்த அசலான மனிதர்களைப் போன்ற கதாபாத்திரங்கள் திரைப்படங்களிலேயே இடம்பெறத் தொடங்கின. அழகான மனிதர்கள் மட்டும்தான் நடிக்க வேண்டுமா சராசரியான மனிதர்கள் நடிக்கக் கூடாதா என்ற கோபம் அவருக்குள் எழுந்திருந்த காரணத்தால் தான் அவர் பாண்டியன் போன்ற பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கதைக்குப் பொருத்தமான முகங்களை அவர் தேடித் தேடி பயன்படுத்தியிருக்கிறார்.

அவருடைய புதுமுகங்களைப் பற்றிச் சொல்லும்போதே ’ர’கர வரிசைக் கதாநாயகிகள் குறித்து நம் மனத்தில் எண்ணம் எழும். கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவை அறிமுகப்படுத்தினார். படம் பெரிய வெற்றி. அதனால் அவர் அறிமுகப்படுத்திய அடுத்தடுத்த கதாநாயகிகள் தங்களுக்கும் ’ர’கர வரிசைப் பெயரைக் கேட்டார்கள். சினிமாவில் இப்படியான நம்பிக்கைகள் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறதே. அவரும் ராதா, ரேவதி, ரஞ்சனி, ரேகா, ரஞ்சிதா எனப் பெயரிட்டுக்குக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் அப்படிப் பெயரிடுவதை நிறுத்திவிட்டார். ஆனால், அவர் எப்போதும் ரகர வரிசையில் பெயரிடுவார் என்னும் ஐதீகம் நிலைத்துவிட்டது. அதே போல் நடிகர்களின் குரல் கதாபாத்திரங்களுக்கு பாரதிராஜா எதிர்பார்க்கும் உணர்வைத் தராதபோது அவரே அவர்களுக்காக டப்பிங் பேசத் தொடங்கினார். பாரதிராஜாவின் குரல் என ரசிகர்கள் அடையாளம் கண்ட பின்னர், அப்படிக் குரல் தருவதையும் நிறுத்திவிட்டார்.

பூமிக்குள் நீர் இருப்பதுபோல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நடிப்பு இருக்கிறது அதைத் தோண்டி எடுப்பது ஓர் இயக்குநரது வேலை என்று சொல்லும் பாரதிராஜா, அதன் அடிப்படையிலேயே நடிகர்களிடம் தனக்குத் தேவையான நடிப்பைப் பெறுகிறார். அவற்றுக்கு மக்கள் அங்கீகாரமும் கிடைக்கிறது. வலுவான கதைகளையும் வசனங்களையும் பாடல்களையும் அவருக்குக் கிடைத்த எழுத்தாளர்கள் தந்த காரணத்தால் அவரால் அவற்றை வைத்து சிறப்பான படங்களை உருவாக்க முடிந்திருக்கிறது. வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்கள் தந்த அனுபவத்தால் அவரால் ஒரு காட்சியை எப்படி ரசனையுடன் அமைப்பது என்று நுட்பம் புரிந்திருக்கிறது. அந்த நுட்பம்தான் அவருக்கே உரித்தான தனித்துவம். அதன் உதவியுடன் அவர் தனக்குக் கிடைத்த கதையை, வசனத்தை மிகச் சரியான விதத்தில் தனது திரைக்கதையில் ஆங்காங்கே பொருத்தி ரசனைமிகு திரைக்காட்சிகளாக உருவாக்குகிறார். படத்தின் சுவாரசியம் கூட்டத் தேவைப்படும் இடங்களில் சுகமான பாடல்களை இணைக்கிறார். இளையராஜா, ரஹ்மான் போன்ற எனும் இசைஞர்கள், வைரமுத்து போன்ற கவிஞர்கள், நிவாஸ், கண்ணன் போன்ற ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரது கூட்டு முயற்சியில் தனது இயக்கத்தில் ரசிக்கத்தக்க பல படங்களை உருவாக்கியுள்ளார்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, கிழக்குச் சீமையிலே போன்ற அவரது வெற்றிப்படங்கள் மட்டுமல்ல; நிழல்கள், காதல் ஓவியம், என் உயிர்த் தோழன், நாடோடித் தென்றல் போன்ற அவரது தோல்விப் படங்களும் இன்னும் பேசப்படுகின்றன. வசூலில் வெற்றி என்பதைத் தாண்டி ஒரு படைப்பாளியாக அவர் உருவாக்கிய படங்கள் என்றுமே சோடை போனதில்லை. வேதம் புதிது வெளியான நேரம் சரியில்லாததால் பெரிதாக வெற்றிபெற வில்லை. ஆனால், இன்றுவரை அந்தப் படத்தைப் பற்றி யாராவது பேசுகிறார்கள். சமூகம், அரசியல், பண்பாடு எனப் பல கருப்பொருள்களில் பாரதிராஜா திரைப்படங்களை உருவாக்கியுள்ளபோதும் பாரதிராஜாவின் பெயரைத் தமிழ்த் திரை காதல் அத்தியாயத்தில் கவனமாகப் பொத்திவைத்துக்கொள்கிறது. அவரது பெரும்பாலான திரைப்படங்களில் காதலெனும் மயிலிறகு ரசிகர்களுக்குச் சாமரம் வீசிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் மனத்தில் பசும்பரப்பில் தோன்றும் மெல்லிய காதலை அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை எனப் பல படங்களில் காட்சிகளாக்கி ரசிகர்களைக் காதல் மழையில் நனைத்துள்ளார் அவர்.

உணர்வுத்தளத்தில் இயங்கும் உயிரோட்டமான கலைஞனான பாரதிராஜாவைத் தமிழ்த் திரையுலகம் தன் ஆசை மகனாக உச்சிமோர்வதில் எப்போதுமே பெருமை கொள்ளும். அந்தக் கலைஞனின் பிறந்தநாளான இன்றும் அவரைப் பற்றிப் பேசியும் எழுதியும் தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்ச்சிகொள்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்திலும் தன் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இமயத்துக்கு உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x