கைவிடப்பட்டதா 'மகாவீர் கர்ணா'? - புதிய படத்தை அறிவித்துள்ள இயக்குநர்

கைவிடப்பட்டதா 'மகாவீர் கர்ணா'? - புதிய படத்தை அறிவித்துள்ள இயக்குநர்
Updated on
1 min read

ஆர்.எஸ்.விமலின் புதிய பட அறிவிப்பால், 'மகாவீர் கர்ணா' படம் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.

‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவான படம் 'மகாவீர் கர்ணா'. இந்தப் படத்தை நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரித்து வந்தது. பெரும் பொருட்செலவில் வரலாற்று ஆக்‌ஷன் படமாக உருவாகி வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் உருவானது.

சில நாட்களாகவே இந்தப் படத்தைத் தவிர்த்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விக்ரம். இந்நிலையில், தற்போது தனது புதிய படத்தை ஆர்.எஸ்.விமல் அறிவித்துள்ளார்.

'தர்மராஜ்யா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பெரும்பாலும் மெய்நிகர் தயாரிப்பு என்று சொல்லப்படும் விர்ச்சுவல் (Virtual Production) தயாரிப்புத் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டனில் மிகப்பெரிய ஸ்டுடியோ தளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான திரைப்படங்கள் வழக்கமாக பச்சை வண்ண சுவர் அல்லது திரைகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டு பின்னர் அந்த பச்சை நீக்கப்பட்டு கிராபிக்ஸில் தேவையான விஷயங்கள் சேர்க்கப்படும். ஆனால், விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பில் ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான எல்ஈடி திரைகளுக்கு முன்னால்தான் படப்பிடிப்பு நடக்கும்.

பிரம்மாண்ட போர்க்களக் காட்சி என்றால், அந்தப் போர்க்களம் பின்னணியில் திரையில் இருக்கும், முன்னால் மட்டுமே நடிகர்களும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் நிஜத்தில் இருக்கும்.

திருவிதாங்கூர் வரலாற்றில் இருக்கும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களை வைத்துப் புனையப்பட்டிருக்கும் கற்பனைக் கதை இது என்று சொல்லும் விமல், பிரபல மலையாள உச்ச நடிகர் ஒருவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.

வஷு பாக்னானி, ஜாக்கின் பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in