காதல் படங்களின் மிகப்பெரிய ரசிகை நான்: ‘லவ் மாக்டெய்ல்’ ரீமேக்கில் நடிப்பது குறித்து தமன்னா பகிர்வு

காதல் படங்களின் மிகப்பெரிய ரசிகை நான்: ‘லவ் மாக்டெய்ல்’ ரீமேக்கில் நடிப்பது குறித்து தமன்னா பகிர்வு

Published on

கடந்த ஜனவரி மாதம் கன்னடத்தில் வெளியான படம் ‘லவ் மாக்டெய்ல்’. டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்த இப்படம் கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை இயக்குநர் நாகசேகர் கைப்பற்றியுள்ளார். இப்படத்தில் நடிக்க தமன்னா மற்றும் சத்ய தேவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

‘லவ் மாக்டெய்ல்’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது குறித்து தமன்னா கூறியிருப்பதாவது:

''தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ரீமேக் செய்ய ஆவலுடன் இருந்த ஒரு படத்தில் நடிப்பது மிகப்பெரிய கவுரவம். சத்ய தேவ் வளர்ந்து வரும் திறமையான நடிகர். அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன். நகர்ப்புற வாழ்க்கையின் சுக துக்கங்களைச் சுமந்திருப்பதால் ‘லவ் மாக்டெய்ல்’ படம் எனக்கு மிகவும் நெருக்கமானது.

பரிச்சயமான கதை சொல்லல் முறை இப்படத்தை மேலும் எளிதானதாக ஆக்குகிறது. அத்துடன் காதல் மற்றும் பழைய படங்களின் மிகப்பெரிய ரசிகை நான். படத்தில் குறைவான கதாபாத்திரங்களே இருப்பதால் நடிகர்களின் திறமை அதிகமாக வெளிப்படுகிறது. இதுவே என்னை இப்படத்தில் ஈர்த்தது''.

இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விசாகப்பட்டினம், ஹைதரபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in