Published : 15 Jul 2020 07:37 PM
Last Updated : 15 Jul 2020 07:37 PM

இளையராஜாவின் 200வது படம் வெளியான நாள்;  ‘பாவலர் கங்கை அமரன்’, ‘காதல் காளை’ கார்த்திக், ‘இன்பக்கனா’ சுலக்‌ஷணா, ‘சிருங்கார தேவதை’ சில்க்!  

இளையராஜாவின் 200வது படம் வெளியான நாள் இன்று. படம் வெளியாகி 37 ஆண்டுகளாகிவிட்டன.


1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி, பஞ்சு அருணாசலம், ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம், இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். ‘மச்சானை பாத்தீங்களா’, ‘அன்னக்கிளியே உன்னத் தேடுதே’ உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் அப்படியொரு வெற்றியைப் பெற்றது. சிவகுமார், சுஜாதா, நடித்த இந்தப் படத்தை தேவராஜ் - மோகன் இயக்கியிருந்தார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு, இளையராஜா வந்த பிறகு, இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழகம், அப்படியே இளையராஜா இசையில் லயிக்க ஆரம்பித்தது. ‘அன்னக்கிளி’யை அடுத்து, வரிசையாக படங்கள் வர ஆரம்பித்தன இளையராஜாவுக்கு.

80ம் ஆண்டு, இளையராஜாவுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் முக்கியமான ஆண்டு என்றே சொல்லவேண்டும். ஒளிப்பதிவாளரான பாலுமகேந்திரா, முதன் முதலாக கன்னடத்தில் ‘கோகிலா’ படத்தை இயக்கினார். கமல், ஷோபா, மோகன், ரோஜாரமணி முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு சலீல் செளத்ரி இசை. தமிழில் முதல்படமாக ‘அழியாத கோலங்கள்’ இயக்கினார். பிரதாப், ஷோபா நடித்த இந்தப் படத்துக்கும் சலீல் செளத்ரியே இசையமைத்திருந்தார். ‘பூவண்ணம் போல நெஞ்சம்’ என்ற பாடலெல்லாம் படத்தில் இருந்தது. மிகப்பெரிய ஹிட்டடித்தது.

அடுத்து, பாலுமகேந்திரா ‘மூடுபனி’ இயக்கினார். பிரதாப், ஷோபா, பானுசந்தர், மோகன் முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசை. ‘என் இனிய பொன் நிலாவே’ படத்தையும் கிடார் இசையையும் மறக்கவே முடியாது.

இதையடுத்து, பாலுமகேந்திரா - இளையராஜா கூட்டணி ஏகப்பட்ட படங்களையும் சிறப்புமிக்க பாடல்களையும் வழங்கியது. 80ம் ஆண்டு வெளியான ‘மூடுபனி’ இளையராஜாவுக்கு 100வது படம்.

80களில்தான் இளையராஜா இன்னும் உயரம் தொட்டார். சிகரம் தொட்டார். ஏகப்பட்ட படங்களுக்கு வரிசையாக இசையமைத்தார். 83ம் ஆண்டு பேராசியர் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் கார்த்திக், சுலக்‌ஷணா, நாகேஷ் முதலானோரின் நடிப்பில் ‘ஆயிரம் நிலவே வா’ திரைப்படம் வெளியானது. 83ம் ஆண்டு, ஜூலை மாதம் 15ம் தேதி வெளியான இந்தப் படம்தான் இளையராஜாவின் 200வது படம்.

படத்தின் டைட்டில் சுவாரஸ்யம் கொண்டது. ‘காதல் காளை’ கார்த்திக் என்று டைட்டிலில் போட்டிருக்கிறார்கள். ‘இன்பக் கனா’ சுலக்‌ஷணா, ‘சிருங்கார தேவதை’ சில்க் ஸ்மிதா, ‘நகைச்சுவை மன்னர்’ நாகேஷ்’ என்று டைட்டிலில் அடைமொழியோடு போட்டிருக்கிறார்கள். அதேபோல், பாடலாசிரியர்கள் பட்டியலில் கங்கை அமரன் பெயரை ‘பாவலர் கங்கை அமரன்’ என்று போட்டுள்ளனர். இசை ‘ராக ரிஷி’ இளையராஜா என்று போட்டிருக்கிறார்கள்.

‘தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. ‘கங்கை ஆற்றில் நின்றுகொண்டு நீரைத் தேடுகிறேன்’ என்ற பாடல் தனித்துவமாக இருந்தது. பி.சுசீலாவின் குரல் நம்மை அப்படியே சோகத்தில் அமிழ்த்திவிடும். ’அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எஸ்.பி.பியின் குரலும் அதன் குழைவும் திரும்பத்திரும்பக் கேட்க வைத்தது, இந்தப் பாடலை. இந்தப் பாடலில் ‘எப்படி எப்படி’ என்று கேட்பதை நம்மை ‘இப்படி இப்படித்தான் இளையராஜாவின் இசை’ என்று சொல்லவைத்துவிடும்.

’ஊட்டி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்ல..போர்த்திப் படுக்க நீ வந்தா போர்வையும் தேவையில்ல’ என்ற பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். பாடலுக்கு முன்னதாக புல்லாங்குழல் இசையை தவழவிட்டிருப்பார் இளையராஜா. இப்படி எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
இன்றைக்கும் இளையராஜா மெலடி ஹிட் லிஸ்ட்டில் இந்தப் பாடல்களும் இடம்பெற்றிருக்கும். 83ம் ஆண்டு வெளியான ‘ஆயிரம் நிலவே வா’ இளையராஜாவின் 200வது பாடலாக அமைந்தது. படம் வெளியாகி, 37 வருடங்களாகின்றன.


‘தேவதை இளம் தேவி’யை இன்னமும் மறக்கவில்லை ரசிகர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x