Published : 11 Jul 2020 02:30 PM
Last Updated : 11 Jul 2020 02:30 PM

இயக்குநர் பாலா பிறந்த நாள் ஸ்பெஷல்: தேசிய பெருமிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி

சென்னை

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். அதுவும் இந்தி உள்ளிட்ட அதிக மக்கள் பேசும் மொழிப் படங்களை இயக்காமலே இந்தி சினிமா ஆளுமைகளின் மதிப்பைப் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அத்தகு அங்கீகாரத்தை தன் வெகுசில படங்கள் மூலமாகவே பெற்றிருப்பவரான இயக்குநர் பாலா இன்று (ஜூலை 11) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

காவியமாய் நிகழ்ந்த அறிமுகம்

தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவரான பாலா, சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்து பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். முதலில் தயாரிப்பு உதவியாளராக இருந்து பிறகு உதவி இயக்குநரானார். 1999-ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் காவிய அந்தஸ்தைப் பெற்ற 'சேது' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி பல ஆண்டுகளாக திரைத்துறையில் உரிய இடம் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்த நடிகர் விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இன்று அவர் ஒரு முக்கிய நட்சத்திரமாக உயர்ந்ததன் தொடக்கம் அந்தப் படம்தான்.

முதலில் வெளியானபோது பெரிய கவனம் ஈர்க்காத இந்தப் படம் விமர்சகர்களாலும் படம் பார்த்த ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு அதன் மூலம் படத்தைப் பற்றிய கருத்து பரவி இரண்டாம் ரிலீஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை வென்றது 'சேது'.

திறமைகளின் திறப்புகள்

பாலாவின் இரண்டாம் படமான 'நந்தா' மூலம் நடிகர் சூர்யாவின் அசாத்திய திறமை வெளிப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் ராஜ்கிரணும் குணச்சித்திர நடிகராக மறு அறிமுகமானார். இன்றுவரை அவர் மதிப்புக்குரிய குணச்சித்திர நடிகராக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

'சேது' ஒரு காதல் கதை என்றாலும் ஏர்வாடி மனநலக் காப்பகங்களில் நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்த கண் திறப்பாகவும் அப்படம் அமைந்தது. 'நந்தா' என்னும் ஆக்‌ஷன் படத்தில் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இலங்கை அகதிகள் பிரச்சினைகள் ஆகியவற்றையும் காண்பித்திருந்தார் பாலா. இப்படியாக பாலா படம் என்றால் அதில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையும் கையாளப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

தேடி வந்த தேசிய விருதுகள்

மூன்றாவது படத்தில் விக்ரம், சூர்யா இருவரையும் நாயகனாக்கினார் பாலா. தமிழ் சினிமாவில் அதுவரை யாருக்கும் இருந்திராத துணிச்சல் அவருக்கு இருந்தது. சுடுகாட்டில் பிணம் எரிப்பவர் (விக்ரம்), போதை மருந்து விற்பவர் (சங்கீதா), மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பவர் (சூர்யா) ஆகியோரை முக்கியக் கதாபாத்திரங்களாக வடிவமைத்திருந்தார். மனித நாகரிகமே தெரியாத ஒருவர் அன்பாலும் நட்பாலும் முழுமையான மனிதனாவதைச் சித்தரித்த இந்தக் கதை தமிழ் சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தில் நாயகனாக நடித்த விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். சூர்யாவின் அசாத்தியமான நகைச்சுவைத் திறமை இந்தப் படத்தின் மூலம் வெளிப்பட்டது.

எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலை அடிப்படையாக வைத்து அவரையே வசனகர்த்தாவாக்கி 'நான் கடவுள்' படத்தை இயக்கினார் பாலா. உடல் குறைபாடுடைய அனாதைகளையும் ஆதரவற்றோரையும் மிரட்டித் துன்புறுத்தி பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தும் நிழலுலகத்தை இந்தப் படத்தில் காண்பித்திருந்தார். அதோடு காசியில் வாழும் அகோரி சாமியார்கள் பற்றியும் இந்தப் படத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. படத்தின் நாயகனான ஆர்யா காசியில் வளர்ந்த ஒரு அகோரி சாமியாராகவே நடித்திருந்தார். 'நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றார் பாலா.

1969-ல் வெளியான 'ரெட் டீ' என்னும் நாவல் 'எரியும் பனிக்காடு' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஏழை தலித் மக்கள் கொத்தடிமைகளைப் போல் நடத்தப்படுவதையும் மிகக் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டு பலர் அந்த தேயிலைத் தோட்டங்களிலேயே உயிரிழப்பதையும் நெஞ்சை உலுக்கும் வகையில் பதிவு செய்த இந்த நாவலைத் தழுவி 'பரதேசி' திரைப்படத்தை இயக்கியிருந்தார் பாலா. அந்தப் படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய ஏழை தலித் மக்களின் வாழ்வும் அவர்கள் தேயிலைத் தோட்டத்தில் எதிர்கொண்ட கொடுமைகளும் காட்சிப்படுத்தப்பட்ட விதம், தொழில்நுட்பத் தரம், இசை. நடிகர்களின் பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்தப் படம் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் பணியாற்றிய பூர்ணிமா ராமசாமி சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதைப் பெற்றார்.

'பரதேசி' படத்துக்கு முன் பாலா இயக்கிய 'அவன் இவன்' எந்த விதத்திலும் வரவேற்பைப் பெறவில்லை. அடுத்ததாக பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வைப் பதிவு செய்தது. இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற சிறப்பும் இந்தப் படத்துக்கு அமைந்தது. இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

ஒரு பாலியல் வன்முறை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக ஜோதிகா நடித்திருந்த 'நாச்சியார்' பாலா இயக்கிய அனைத்துப் படங்களிலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. குறைந்த நீளம், பாடல்கள் இல்லை, காட்சிகளில் பாலா படத்தில் இருக்கும் மனதை உலுக்கும் அம்சங்கள் இல்லை. மிக மெல்லிய உணர்வுகளை எழுப்பும் வகையிலேயே அமைந்திருந்தது இந்தப் படம்.

பாலாவின் தனித்தன்மையும் சிறப்புகளும்

இதுவரை எட்டுப் படங்களை இயக்கியிருக்கிறார் பாலா. அவற்றில் முதல் நான்கு படங்கள் பெற்ற வரவேற்பை அடுத்த நான்கு படங்கள் பெறவில்லை. ஆனால் ஒரு இயக்குநராக பாலாவின் முத்திரை இல்லாத படங்கள் இல்லவே இல்லை. பாலாவின் படங்கள் அனைத்துமே ரசிகர்கள், விமர்சகர்கள், மொழி எல்லைகளைக் கடந்த சினிமா ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. இதற்குக் காரணம் கதை, கதைக்களம், திரைக்கதை, படமாக்கம், கதாபாத்திர வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, அவர்களிடமிருந்து ஆகச் சிறந்த நடிப்பைப் பெறுவது. இசை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என அனைத்து அம்சங்களும் பாலா படங்களில் நேர்த்தியுடன் இருக்கும். ஒரு இயக்குநராக பாலாவுக்கு சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தனித்தன்மை வாய்ந்த பார்வையும் சிறந்த ரசனையும் இருப்பதே இதற்குக் காரணம்.

அதேபோல் பாலாவின் படங்களில் rawness என்று சொல்லக்கூடிய வன்முறை, கொடுமைகள், சமூக அவலங்கள் ஆகியவற்றைப் பூச்சுகள் இல்லாமல் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்யும் தன்மைதான் அவரை தேசிய அளவில் புகழடையச் செய்துள்ளது. மணிரத்னம், அனுராக் காஷ்யப் போன்றோர் அவரைக் கொண்டாடுகின்றனர். எல்லா நடிகர்களிடமிருந்தும் அவர்களிடம் அதுவரை இல்லாத பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுடைய சிறந்த நடிப்பு இதுதான் என்று சொல்லும் வகையிலும் நடிப்பைப் பெறுவது ஒரு இயக்குநராக பாலாவின் இன்னொரு தனிப்பெரும் சிறப்பு. இதனால்தான் எல்லா நடிகர்களும் பாலாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய எப்படி வேண்டுமானாலும் தங்களை உருமாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

தயாரிப்பாளராகவும் தடம் பதித்தவர்

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாலாவின் ரசனையும் சினிமா சார்ந்த அணுகுமுறையும் அலாதியானது. 'பரதேசி', 'நாச்சியார்' என தான் இயக்கிய படங்களை மட்டுமல்லாமல் 'மாயாவி', 'பிசாசு', 'சண்டிவீரன்' என மற்ற இயக்குநர்களின் படங்களையும் தயாரித்திருக்கிறார் பாலா. இவற்றில் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' மிக முக்கியமான படம். இறந்துவிட்டவர்களின் ஆவியைப் பேயாக அல்லாமல் தேவதையாகச் சித்தரித்த விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.

மிஷ்கின் தயாரித்து இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்ற தரமான படம் வணிகத் தோல்வியடைந்திருந்த நிலையில் மிஷ்கினை அழைத்து, கதைகூட கேட்காமல் அவருடைய அடுத்த படத்தை தயாரிப்பதாகக் கூறினார் பாலா. அந்தப் படம்தான் 'பிசாசு' என்பது குறிப்பிடத்தக்கது.

பல இயக்குநர்களால் பெரிதும் வியந்து பாராட்டப்படும் பாலா மற்ற திறமையான இயக்குநர்களைப் பாராட்டத் தவறியதில்லை. மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' படம் வெளியாகி விமர்சகர்களால் பாராட்டைப் பெற்றிருந்த நிலையில் அந்தப் படத்தைப் பாராட்டுவதற்காகவே ஒரு பேட்டி கொடுத்தார் பாலா. அந்தப் படத்தின் மூலம் தான் சுதா கொங்கராவிடமிருந்து திரைப்படம் இயக்கும் நுணுக்கங்கள் சிலவற்றைத் தான் கற்றுக்கொண்டதாக மனம் திறந்து பாராட்டினார்.

ஒரு இயக்குநராக தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை தேடித்தந்தவர் ஒரு தயாரிப்பாளராக தரமான தமிழ்ப் படங்களை அளித்தவர், நடிகர்களின் சிறந்த நடிப்பைப் பெறும் ஜாலம் தெரிந்தவர், ரசிகர்களின் பெருமதிப்பைப் பெற்ற படைப்பாளி பாலா இன்னும் பல தரமான திரைப்படங்களை இயக்கி அவற்றின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்த மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x