Last Updated : 10 Jul, 2020 10:15 PM

Published : 10 Jul 2020 10:15 PM
Last Updated : 10 Jul 2020 10:15 PM

’’இனி சினிமாவைத் தேடி போகமாட்டேன்; சினிமாதான் என்னைத் தேடி வரணும்னு சொன்னார்; சாதிச்சும் காட்டினார் பாலசந்தர்’’ - பிரமிட் நடராஜன் பெருமிதம்

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகரும் தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

என்னைப் பொருத்தவரை, கே.பி. சார் அப்படீங்கறது, என் உணர்வுல, என் ரத்தத்துலயே கலந்துட்ட விஷயம்னுதான் சொல்லணும். முதன்முதல்ல அவரை எப்போ சந்திச்சேன்னு யோசிச்சுப் பாத்தேன். 1959ம் ஆண்டு. மாதம் சரியா நினைவுக்கு இல்ல. உங்களுக்கெல்லாம் தெரியும்... நாங்க நெருங்கிய உறவுக்காரர்கள்னு.
வீட்ல ஒரு ஃபங்ஷன். அதுக்கு எங்க எல்லாரையும் கூப்பிட்டிருக்காங்க. ஊர்ல, நல்லமாங்குடியில்தான் இந்த நிகழ்ச்சி. பார்த்தா... ஹால்ல பெரிய கூட்டம். அங்கே, பாலசந்தரோட சென்னை நண்பர்கள், மோனோ ஆக்டிங் மாதிரியும் மிமிக்ரி மாதிரியும் பண்ணிக்கிட்டிருக்காங்க. ஒரே குதூகலமா இருக்கு.

நான் ஓரமா நின்னு பாத்துக்கிட்டே இருந்தேன். அப்போ, என் அப்பா அவர்கிட்ட என்னை அழைச்சிக்கிட்டுப் போனார். எங்க அப்பாவை சின்ன அம்பின்னுதான் கூப்பிடுவாங்க. அவர் பாத்துட்டு, ‘என்ன சின்ன அம்பி... உன் பையனா? அப்படின்னு கேட்டார். ‘சின்னப்பையனா இருந்தே, வளர்ந்துட்டியே’ன்னு சொன்னார், ‘என்ன பண்றே?’ன்னு கேட்டார். ‘எஸ்.எஸ்.எல்.சி. எழுதிருக்கேன். டைப்ரைட்டிங்லாம் கத்துக்கிட்டிருக்கேன்’னு சொன்னேன்.

என் கையை கெட்டியாகப் பிடித்து குலுக்கினார். ‘அப்படியா? மெட்ராஸ் வந்தா என்னைப் பாரு’ன்னு சொன்னார். இன்னிக்கிம், இந்தக் கையை அவர் தொட்டதை நினைக்கும் போது, கை முழுக்க ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அப்படிப் பிடிச்ச கைதான் எனக்குள்ளே பின்னாளில் இப்படியெல்லாம் கொண்டு வந்துச்சு.
அப்புறம் மெட்ராஸ் வந்தேன். அவரைப் பாத்தேன். இதையெல்லாம் பல முறை சொல்லிருக்கேன். அவரோட இருந்தேன். கவிதாலயா வளர்ச்சிக்கு பங்களிச்சேன். அவரோட கடைசி மூச்சு வரைக்கும் என்னோட வாழ்க்கை அவரோடயே இருந்துச்சு. இன்னிக்கிம் அவர் இல்லேங்கறதை என்னால நினைச்சே பாக்கமுடியல.
பாலசந்தர் பத்தி உங்களுக்கு தெரியாத விஷயத்தைச் சொல்லணும்னு ஆசைப்படுறேன்.

அவருக்கு, தன்னால முடியும்னு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை எப்பவுமே உண்டு. மிகப்பெரிய தன்மான உணர்ச்சி மிக்கவர். ஒருக்காலும் விட்டுக்கொடுக்க மாட்டார். அதனால என்ன ஆனாலும் சரி, காம்ப்ரமைஸே பண்ணமாட்டார்.

பரபரப்பா பல டிராமாக்கள் போட்டுக்கிட்டிருக்காங்க. பல பேரோட அறிமுகம் கிடைக்குது. ஜெமினி கணேசனுக்கு இவரோட டிராமாக்கள் ரொம்ப பிடிச்சுப் போயிருது. அடிக்கடி வந்து பாக்கறாரு. அப்ப, ரெண்டு பேர்கிட்ட பாலசந்தரை அறிமுகப்படுத்தி வைக்கிறாரு. அதுல ஒருத்தர் மிகப்பெரிய தயாரிப்பாளர். அவர்கிட்ட ‘இவர் பெரிய ரைட்டர். இவர்கிட்ட கதை கேக்கலாம்’னு சொன்னார். அவரும் ஓகேன்னு சொல்லிட்டார்.

ஒருநாள் முடிவு பண்றாங்க. அவங்க, பத்திரிகை உலகிலும் இருக்கிற மிகப்பெரிய ஜாம்பவான். ’எனக்கு வேலை இருக்கு. கார்ல ஏர்போர்ட் வரைக்கும் வாங்க. அப்படியே கதை சொல்லுங்க’ன்னு சொன்னாங்க. பாலசந்தர் சார், அவங்க கூட கார்ல போயிக்கிட்டே கதை சொன்னார். தயாரிப்பாளர் அவரோட நண்பரை முன்பக்கம் உக்கார வைச்சிருந்தார்.

பாலசந்தர் சார் உற்சாகமா கதை சொல்லிக்கிட்டே இருக்கும் போது, தயாரிப்பாளரோட நண்பர், திடீர் திடீர்னு தயாரிப்பாளர்கிட்ட ஏதேதோ கேள்வி கேக்கறதும் பதில் சொல்றதுமாவே இருந்துச்சு. ’ஆ... சொல்லுங்க’ன்னு பாலசந்தர் சாரைப் பாத்து சொன்னாரு. திரும்பவும் அவர் கேள்வி கேக்க, இவர் பதில் சொல்லன்னே போயிக்கிட்டிருக்கு.

பாலசந்தர் சாருக்கு கோபமான கோபம். ஏர்போர்ட் வந்துச்சு. ‘ஒரு பத்து நிமிஷ வேலை. முடிச்சிட்டி வந்துடுறேன்’ன்னு தயாரிப்பாளர் போனார். உடனே அந்த நண்பர்கிட்ட, ‘கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்பறேன்’னு பாலசந்தர் சார் சொன்னார். ‘அய்யய்யோ... அவர் மிஸ்டேக்கா எடுத்துக்குவாருங்க’ன்னு அந்த நண்பர் சொன்னாரு. ‘அதுக்காகத்தான் போறேன்’னு சொல்லிட்டு விருட்டுன்னு ஆட்டோ பிடிச்சார். ரயில்வே ஸ்டேஷன் வந்தார். ரயில்ல ஏறி வந்துட்டாரு.
இதேபோல இன்னொரு சம்பவம்.

ஜெமினி சொன்ன இன்னொரு தயாரிப்பாளர் ப்ளஸ் டைரக்டர். அவர்கிட்ட பாலசந்தர் சார் போனார். கூடவே, கலாகேந்திரா கோவிந்தராஜனும் போனார். போய், ஹால்ல உக்கார்ந்தாங்க. டைரக்டர் வந்தாச்சு. ‘பாலசந்தர்னு ஒரு ரைட்டர்’னு விவரம்லாம் சொன்னாங்க.

அவர் வந்து, இந்த ரூம்லேருந்து அந்த ரூமிற்குப் போனார். வணக்கம் சொன்னதும் தலையாட்டிட்டு நிக்கக்கூட இல்லாம போனார். இந்த ரூம், அந்த ரூம்னு பிஸியாவே இருக்காங்க. பாலசந்தர் சாரை இத்தனை மணிக்கு வாங்கன்னு எல்லாம் சொல்லிட்டு, வந்ததும் அட்டெண்ட் பண்ணாம போயிட்டு போயிட்டு வந்துட்டிருந்தாரு.
பொறுத்துப் பார்த்த பாலசந்தர் சார், கோவிந்தராஜன்கிட்ட, ‘வா போலாம்’னு கூப்பிட்டுக்கிட்டு, வெளியே வந்தார்.

வந்ததும் அவர்கிட்ட, ‘இனிமே இந்த சினிமா உலகத்தைத் தேடி நான் வரமாட்டேன். அந்த சினிமா உலகம் என்னைத் தேடி வரணும். அவங்ககிட்ட போய் கதை சொல்றது, இவங்களுக்காக வெயிட் பண்றது, அவங்களுக்காக வெயிட் பண்றதுங்கறதெல்லாம் என் வாழ்க்கைலயே இனிமே கிடையாது’ன்னு சொன்னார் பாலசந்தர் சார். கடைசி வரைக்கும் சாதிச்சாரு. காம்ப்ரமைஸே பண்ணிக்கமாட்டார்.

பாலசந்தர் சார், இறந்தும் நம்மோடு வாழ்ந்துட்டிருக்கார். என்றென்றைக்கும் வாழ்ந்துட்டிருப்பார்.வாழ்க பாலசந்தர் சாரின் புகழ்.

இவ்வாறு பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x