Last Updated : 10 Jul, 2020 06:32 PM

 

Published : 10 Jul 2020 06:32 PM
Last Updated : 10 Jul 2020 06:32 PM

‘’பாலசந்தர் சார் பாதிப்பில்தான் வித்தியாசமான படங்கள் எடுக்கிறேன்; அவர் என் திரையுலக ஆதிபகவன்’’ - பார்த்திபன் நெகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

‘அகல முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ - இதை நான் தமிழ்ப்புத்தகத்தில் வாசித்ததைவிட, கே.பாலசந்தர் அவர்களின் படத்தின் ஆரம்பத்தில், திருவள்ளுவர் சிலை, அதற்குக் கீழே இந்தக் குறள். அதுவும் அழகான குரலில்! இப்படி மனதில் பதிந்ததுதான் அதிகம்.

என் திரையுலக ஆதிபகவன் கே.பாலசந்தர். அவருடைய பாதிப்பில்தான் வித்தியாசமான படங்கள், அதுவும் வித்தியாசமான கோணத்திலே எடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதற்கான அடிப்படையாகவே இருந்தது.

இப்போது கூட யாராவது என் படத்தைப் பார்த்துவிட்டு, ‘கே.பி. சார் டச் இருக்கு’ன்னு சொன்னார்கள் என்றால், ஐந்தாறு ஆஸ்கார் விருதுகளை அள்ளிக்கொடுத்ததற்கான பெருமையான மதிப்பாக நான் பார்ப்பேன்.

‘ஒத்தசெருப்பு’ - இந்தப் படத்தை உலகமே பார்த்துவிட்டு பாராட்டிய போது கூட, நான் என்னுடைய உலகமாக நினைக்கிற கே.பி.சார் இருந்திருந்து, இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டியிருந்தார் என்றால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இப்போதும் நினைத்துப் பார்ப்பேன்.

காதலிக்கும் போது சொல்லுவார்கள்... ‘உன்னை மறந்தால்தானே உன்னை நினைப்பதற்கு’ என்று! அப்படி... கே.பி. அவர்கள் மறைந்தால்தானே நாம் அவரை நினைவுகூர்வதற்கு?

இன்று மட்டுமல்ல... என்றென்றும் கே.பி. அவர்களைக் கொண்டாட, சாகாவரம் பெற்ற அவரின் படங்கள் நம்மிடம் பொக்கிஷமாக உள்ளன.

கொண்டாடுவோம், அவரது திரைக்காவியங்களை! போற்றுவோம் அவரது புகழை!

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x