Published : 09 Jul 2020 06:58 PM
Last Updated : 09 Jul 2020 06:58 PM

இயக்குநர் கே.பாலசந்தர் 90 ஆம் பிறந்த நாள் ஸ்பெஷல்: புதிய சிந்தனைகளின் பிதாமகன்!

இன்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 90-ம் பிறந்த நாளை ஒட்டி ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட திரைத் துறைப் பிரபலங்களும், சினிமா ஆர்வலர்களும் ரசிகர்களும் அவரது சிறப்புகளையும் சாதனைகளையும் மகத்தான ஆளுமைப் பண்புகளையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். ஒரு இயக்குநராக, படைப்பாளியாக, தயாரிப்பாளராக, நடிகராக, கலைஞனாக திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து வாய்ப்புகளைக் கொடுப்பவராக பலரது வழிகாட்டியாக, ஆசானாக, தந்தையாக, ரசிகராக விளங்கிய பாலசந்தரைப் பற்றி பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் எழுதப்பட பல்லாயிரம் பக்கங்கள் எஞ்சியுள்ளன.

ஒரே ஒரு கட்டுரைக்குள் அவருடைய மொத்த சிறப்புகளையும் உள்ளடக்கி அவருடைய ஆளுமைச் சித்திரத்தை வடித்துவிட முடியாது. எனவே அந்தத் திரையுலகப் பிதாமகரின் பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடைய சிறப்புகளில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அது குறித்த சித்திரத்தை வழங்க முயல்கிறது இந்தக் கட்டுரை.

கலைஞர்களுக்குள் புதுமை

தமிழ் சினிமாவில் எண்ணற்ற புதுமைகளைப் புகுத்தியவர் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர் அனைவரும் பின்பற்றும் பாதையில் பயணிக்காமல் எப்போதும் தனக்கான ராஜபாட்டையில் பயணித்தவர் பாலசந்தர். புதுமை என்றாலே அவருடைய பெயர் நினைவுக்கு வரும் அளவுக்கு கதைகளில். திரைக்கதைகளில், வசனங்களில், காட்சிகளில், கதாபாத்திர வடிவமைப்பில், படமாக்கலில், சொல்ல வருவதைப் பார்வையாளருக்குத் தெரிவிக்கும் (convey) விதத்தில், நடிகர்கள், கலைஞர் தேர்வில் என அனைத்து அம்சங்களிலும் பல புதுமைகளை நிகழ்த்தியவர் பாலசந்தர்.

65க்கும் மேற்பட்ட நடிகர்களை கலைஞர்களை தன் படங்கள் மூலமாக அறிமுகப்படுத்தியவர் கே.பி.என்பது தமிழ் சினிமாவைப் பின்பற்றும் அனைவருக்கும் தெரியும். இந்த இரு கூறுகளையும் ஒன்றிணைக்கும் விதமான ஒரு அம்சமும் பாலசந்தரிடம் இருந்தது. அது என்னவென்றால் நடிகர்கள்/கலைஞர்களின் வேறோரு பரிமாணத்தை வெளிப்படுத்துதல் அல்லது சினிமாவுக்குள்ளேயே ஒரு துறையில் சாதித்த கலைஞரை வேறோரு துறையில் சாதிக்கவைத்தல், வழக்கமான சட்டகங்களுக்கு அப்பாற்பட்டு புதிய வழியில் சிந்திக்கும் (Lateral Thinking) திறன் அவரிடம் எப்போதும் வற்றவில்லை என்பதே இதற்குக் காரணம்.

பாலசந்தர் இப்படி கலைஞர்களுக்குள்ளும் அவர்களின் கலை வெளிப்பாட்டிலும் நிகழ்த்திய புதுமைகளுக்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

நாகேஷின் நடிப்பாளுமை

பாலசந்தரின் சிந்தனை நாகேஷின் உடல் வழியாகவே மிகவும் கச்சிதமாக வெளிப்பட்டது. அதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த நாகேஷைக் கதாநாயகனாக்கிய படம் 'சர்வர் சுந்தரம்'. இந்தப் படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கினாலும் படம் முழுக்க கதாசிரியர் பாலசந்தரின் முத்திரை இருக்கும். இந்தப் படத்தில் நகைச்சுவை மட்டுமல்லாமல் காதல், சென்டிமென்ட் என முழு நீள நடிகராக நாகேஷின் நடிப்புத் திறமை வெளிப்பட்டிருக்கும். பாலசந்தர் முதன்முதலாக இயக்கிய 'நீர்க்குமிழி' படத்திலும் நாகேஷ் தான் நாயகன். அதற்குப் பிறகு தொடர்ந்து பல பாலசந்தர் படங்களில் நாயகனாகவோ நகைச்சுவை நடிகராகவோ அல்லது முக்கியக் கதாபாத்திரத்திலோ நாகேஷ் நடித்தார். நகைச்சுவை நடிகராக அல்லாமல் நகைச்சுவையிலும் கலக்கிய முழுமையான நடிகராக நாகேஷ் அறியப்பட பாலசந்தர் படங்கள் முக்கியக் காரணமாகின.

சிரிக்க வைத்த செளகார் ஜானகி

'நீர்க்குமிழி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த செளகார் ஜானகி தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்தார். தான் இயக்கிய நான்காவது படத்திலேயே அதை மாற்றிக்காட்டினார் பாலசந்தர். 1967-ல் வெளியான 'பாமா விஜயம்' படத்தில் குடும்பத்தின் மூத்த மருமகளாக செளகார் ஜானகியை அசாத்தியமான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்த வைத்தார். தொடர்ந்து பாலசந்தரின் 'எதிர்நீச்சல்', 'தில்லு முல்லு' போன்ற படங்களிலும் செளகார் ஜானகி நம்மை சிரிப்பலையில் மூழ்கவைத்தார்.

சூப்பர் ஸ்டாரின் நகைச்சுவைப் படம்

செளகார் ஜானகிக்கு செய்ததையே பின்பு ரஜினிகாந்துக்குச் செய்தார் பாலசந்தர். 'அபூர்வ ராகங்கள்' படத்தில் பாலசந்தரால் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வில்லனாக நடித்து இரண்டாம் நாயகனாகவும் பின்னர் முதன்மைக் கதாநாயகனாகவும் உயர்ந்து சூப்பர் ஸ்டாராக நிலைபெற்றுவிட்டிருந்த ரஜினியை முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்ட 'தில்லு முல்லு' படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார் பாலசந்தர். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தின் மூலம் ரஜினிக்குள் ஒளிந்திருந்த நகைச்சுவைத் திறனை திரையுலகமும் ரசிகர்களும் கண்டுகொண்டனர். அதன் பிறகு இன்றுவரை ரஜினியின் திரைப்படங்கள் பலவற்றில் அவருடைய நகைச்சுவைத் திறன் பேரளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ரஜினி படம் என்றாலே நல்ல நகைச்சுவையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அளவுக்கு ரஜினியின் நகைச்சுவைக்கு தனிப்பெரும் ரசிகர் கூட்டம் உருவானது.

நடிகர்களான பாடலாசிரியரும் பாடகரும்

1983-ல் வெளியான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் பாடலாசிரியராகப் புகழ்பெற்றிருந்த வாலியை நடிகராக்கினார் பாலசந்தர். 1987-ல் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் பல மொழிகளில் பறந்து பறந்து பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இருவருமே அதற்குப் பிறகு சிறந்த நடிகர்களாகவும் அறியப்பட்டார்கள். குறிப்பாக எஸ்.பி.பி. பல படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்திலும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து ஒரு நடிகராகவும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.

பாலசந்தரிடம் சினிமா பயின்ற உதவி இயக்குநர்கள் அவருடைய இந்தப் புதுமையான சிந்தனைப் போக்கையும் கைகொண்டனர். இயக்குநர் வசந்த் தான் இயக்குநராக அறிமுகமான 'கேளடி கண்மணி' படத்தில் எஸ்.பி.பி.யை கதையின் நாயகனாக்கினார். சரண் தான் முதல் முறையாக இயக்கிய 'காதல் மன்னன்' படத்தில் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை ஒரு முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

பாலசந்தர் ஒரு இயக்குநராக தன் படங்களில் மட்டுமல்லாமல் தன் புதுமையான சிந்தனைப் போக்கினால் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பலருடைய திரைவாழ்வில் பெரும் தாக்கம் செலுத்தினார். புதிய சாளரங்களைத் திறந்து வைத்தார். அதனாலும்தான் அவர் இயக்குநர் சிகரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x