கன்னட சின்னத்திரை இளம் நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை

கன்னட சின்னத்திரை இளம் நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை
Updated on
1 min read

கன்னட சின்னத்திரை இளம் நடிகர் சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 30.

கர்நாடகாவின் மாண்டியா பகுதியைச் சேர்ந்த சுஷீல், கன்னட சின்னத்திரையில் மிகப் பிரபலம். கன்னடத் திரைப்படங்களில் நடிக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டிருந்தார். பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யின் அடுத்த படமான 'சலகா'வில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திலும் சுஷீல் நடித்திருந்தார். இதைத் தாண்டி உடற்பயிற்சி வல்லுநராகவும் அவர் செயல்பட்டார்.

இந்நிலையில் மாண்டியாவில் தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சுஷீல் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் செய்தி அவரது சக நடிகர்கள், அவர் நடித்து வந்த தொடர்களின் இயக்குநர்கள் எனப் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் கனிவான, எதற்கும் பதறாத சுஷீல் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று புரியவில்லை என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

சுஷீல் காலமான செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் துனியா விஜய், "நான் முதலில் சுஷீலைப் பார்த்தபோது அவர் கதாநாயகனாக நடிக்கும் திறமை கொண்டவர் என்று நினைத்தேன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே அவர் சீக்கிரமாக நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

என்ன பிரச்சினையாக இருந்தாலும் சரி, தற்கொலை அதற்குத் தீர்வல்ல. கரோனாவால் மட்டுமே மக்கள் பயப்படவில்லை. வாழ்க்கையை நடத்த வருமானம் தரும் வேலைகளை மக்கள் இழந்து வருகிறார்கள். வலிமையாக இருந்து இந்த நெருக்கடியைத் தாண்டி வர வேண்டிய முக்கியமான காலகட்டம் இது" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in