Last Updated : 06 Jul, 2020 11:14 AM

 

Published : 06 Jul 2020 11:14 AM
Last Updated : 06 Jul 2020 11:14 AM

‘தோர்’ கதாபாத்திரத்துக்காக உழைத்ததை விட பன்மடங்கு உழைக்க வேண்டும் - ஹல்க் ஹோகன் பயோபிக் குறித்து க்றிஸ் ஹெம்ஸ்வொர்த்

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகனின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ள திரைப்படத்தில் ஹல்க் ஹோகனாக நடிக்க க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய டோட் பிலிப்ஸ் இயக்கவுள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான கதை தற்போது உருவாக்கத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்ட இப்படத்தின் கதையை டோட் பிலிப்ஸோடு இணைந்து ஸ்காட் சில்வர் மற்றும் ஜான் பொல்லானோ ஆகியோர் எழுதுகின்றனர்.

ஹல்க் ஹோகனின் ஆரம்பகால வாழ்க்கை, பின்னர் WWF-ன் முன்னணி மல்யுத்த வீரராக ஹல்க் ஹோகன் மாறியது, அதில் தன் சக போட்டியாளர் ஆண்ட்ரே தி ஜெயன்ட் உடனான விரோதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகி வருகிறது.

இது குறித்து க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளதாவது:

இப்படம் உண்மையில் அற்புதமாக இருக்கப் போகிறது. ஹல்க் ஹோகன் கதாபாத்திரத்துக்கு கடுமையான உடல் உழைப்பு தேவை. இதற்கு முன் இருந்ததை விட உடலை பெரிதாக மாற்ற வேண்டும். ‘தோர்’ கதாபாத்திரத்துக்காக உழைத்ததை விட பன்மடங்கு உழைக்க வேண்டும். உடலளவிலும் பேச்சளவிலும் அவரை போலவே மாறவேண்டும். அமானுஷ்யமான மல்யுத்த உலகில் நான் குதிக்க வேண்டும். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நான் இன்னும் கதையை படிக்கவில்லை. இன்னும் உருவாக்கத்தில் தான் இருக்கிறது. ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் பிலிப்ஸும் கதை குறித்து பேசுவதற்காக சந்தித்துக் கொண்டோம். அப்போது இது ஒரு வெப் சீரிஸாக உருவாகும் என்றே நான் நினைத்தேன்.

இவ்வாறு க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x